For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜய் டிவியின் நீயா நானா விவாதத்தில் எந்த மாநில பெண்கள் அழகானவர்கள்? வேல்முருகன் கடும் எதிர்ப்பு

விஜய் டிவியின் நீயா நானாவில் மலையாள பெண்கள் அழகானவர்களா அல்லது தமிழக பெண்கள் அழகானவர்களா என்பது குறித்து விவாதம் நடத்தவுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானாவில் மலையாள பெண்கள் அழகானவர்களா அல்லது தமிழக பெண்கள் அழகானவர்களா என்பது குறித்த விவாதம் நடத்துவதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

Tamilaga Vazhvurimai party condemns for Neeya Nana

"மலையாளப் பெண்கள் அழகானவர்களா, தமிழ்ப் பெண்கள் அழகானவர்களா?" என்று அலசும் ஒரு நிகழ்ச்சியா?

அந்த நிகழ்ச்சியை ஸ்டார் விஜய் தமிழ்த் தொலைக்காட்சி இன்றிரவு ஒளிபரப்பப்போகிறதா!

அப்படி ஒளிபரப்பினால் அது பெண்களைப் போகப்பொருளாகவும் சந்தைச் சரக்காகவும் சித்தரிக்கும் தகாத செயல் மற்றும் போக்கிரித்தனம், அயோக்கியத்தனம் என்பதை அந்தத் தொலைக்காட்சி உணருமா?

அப்படி உணராமல், அறிவித்தபடி அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புவதாக இருந்தால், அதை எதிர்த்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மகளிர் பாசறை சார்பில் அந்தத் தொலைக்காட்சி அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கிறோம்.

மானுட வாழ்வியலை எடுத்துரைக்கும் பணியைச் செய்கின்றன ஊடகங்கள். அது வாழ்வை இனிதாக்கும் பணி, எளிதாக்கும் பணி, முன்னேற்றும் பணி. அது பயனுடைய பணி; சமூகத்திற்கு, சமூகத்தின் அங்கமான ஊடகத்திற்கு ஏற்புடைய பணி.

பயனுடைய பணி, ஏற்புடைய பணி எனும்போதே அது பொறுப்புடைய பணி என்றும் ஆகிறது. ஆனால் மானுடத்தின் சரிபாதியான பெண்கள் விடயத்தில் அந்தப் பொறுப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருக்கிறது. இதற்கு ஊடகங்களும் விலக்கில்லை என்றே தெரிகிறது.

"அறிவியல் வளர்ச்சி - தொழில்நுட்பப் புரட்சி" வழங்கிய அருங்கொடைதான் மின் ஊடகமாம் இந்தத் தொலைக்காட்சி. ஆனால் இதிலும் அறிவுக்கே பொருந்தாத வகையில் பெண்ணை ஒரு நுகர்பொருளாக, போகப்பொருளாக சித்தரிக்கும் போக்கிரித்தனம் மற்றும் அயோக்கியத்தனம் தொடர்கிறது.

Tamilaga Vazhvurimai party condemns for Neeya Nana

இந்தத் தகாத செயலின் உச்சமாக, ஸ்டார் விஜய் தமிழ்த் தொலைக்காட்சி, இன்றிரவு "மலையாளப் பெண்கள் அழகானவர்களா, தமிழ்ப் பெண்கள் அழகானவர்களா?" என்று அலசும் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பப் போவதாக அறிவித்திருக்கிறது. இந்த அடாத செயல் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

கேரளம், தமிழகம் ஆகிய இரு மாநில மக்களுக்கிடையிலான நல்லுறவைத் திட்டமிட்டுச் சீர்குலைக்க முயல்வதாகவும் படுகிறது. வியாபார ஆதாயத்திற்காக, பெண்களை இழிவுபடுத்தவும் தயங்காத ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் மகளிர் பாசறையும் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியை வன்மையாகக் கண்டிப்பதோடு, அந்தத் தொலைக்காட்சி அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தவிருக்கிறது. தமிழகம் முழுவதும் இந்நிகழ்ச்சி பெண்கள் மத்தியில் கோபக்கனலை மூட்டியிருக்கிறது. இதை எதிர்த்து பெண்கள் அமைப்பினர் குரல் எழுப்புகின்றனர்.

தமிழக மக்களின் உணர்வை மதித்து பெண்களை அவமதிக்கும் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்யுமாறு ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக்கு வேண்டுகோள் விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. மேலும் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பெண்களை இழிவாக சித்தரிக்கும் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரக்கு வேண்டுகோள் விடுக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி

இவ்வாறு வேல்முருகன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
Tamilaga Vazhvurimai Party's chief Velmurugan condemns to telecast the Neeya Naana Program which debates which state's girls are beauty.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X