ரூ.20 கோடி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி கைதானவர் கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ்
வரி ஏய்ப்பு புகாரில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டவர் கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ் ஜெயின் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

சென்னை: ரூ.20 கோடி வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி கடந்த ஆண்டே கனிஷ்க் நகைக் கடை உரிமையாளர் பூபேஷ் ஜெயின் கைது செய்யப்பட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை வடக்கு உஸ்மான் சாலையில் உள்ளது கனிஷ்க் நகைக் கடை. இந்த நிறுவனம் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பெரிய பெரிய நகைக் கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்து வந்தது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கிக் கொண்டு தற்போது ஓட்டம் பிடித்துவிட்டார். இதுகுறித்து சிபிஐக்கு எஸ்பிஐ வங்கி புகார் கடிதம் அனுப்பியுள்ளது.

பகீர் தகவல்கள்
தற்போது இந்த நகைக் கடை மோசடியில் ஈடுபட்டது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தனை ஆண்டுகளாக ஆண்டுதோறும் வருமான வரிக் கணக்கை போலியாக தயாரித்து தாக்கல் செய்தது தெரியவந்ததுள்ளது. இதை வைத்து அடுத்தடுத்து வங்கிகளில் கடன் பெற்றுள்ளது.

ரூ.824 கோடி
முதலில் பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக் கணக்கை தொடங்கி இந்த வங்கியில் இவர்கள் பெற்ற கடனை வருமானமாக கொண்டு 14 வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். இதுபோல் 824 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.

ரூ.20 கோடி வரி ஏய்ப்பு
இந்த கடனுக்கான வட்டித் தொகையானது சுமார் ரூ.160 கோடி ஆகும். கடந்த 2 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சரியில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன்னர் கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ 20 கோடி கலால் வரியை சரிவர செலுத்தவில்லை என்ற புகாரின் பேரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டார்.

3 மாதங்களுக்கு முன்பே புகார்
இந்த முறைகேடுகள் கடன் கொடுத்த வங்கிகளின் கவனத்துக்கு வந்தவுடன் கடனை திருப்பி கேட்டு நோட்டீஸ் அனுப்பியதற்கு எந்த பதிலையும் நிறுவனம் தரவில்லை. இதுதொடர்பாக எஸ்பிஐ வங்கி கடந்த 3 மாதங்களுக்கு முன்பே சிபிஐக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேள்வி எழுந்துள்ளது
ஆனால் இதுதொடர்பாக நடவடிக்கை ஏதும் இதுவரை எடுக்கப்படவில்லை. கலால் வரி ஏய்ப்பு செய்தும் வங்கி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.












Click it and Unblock the Notifications