For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி, ஜெயலலிதாவை மனதில் வைத்து பேசவில்லை: சர்ச்சை பேச்சு குறித்து திருமாவளவன் விளக்கம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மதுரையில் நடைபெற்ற மக்கள் நலக்கூட்டணி மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த 26-01-2016 அன்று மதுரையில் நடந்த மக்கள் நலக் கூட்டணியின் 'மாற்று அரசியல் எழுச்சி மாநாட்டில்' நான் உரையாற்றும் போது, "மாற்று அரசியல்" என்றால் என்ன என்பதை எளிதில் உணர்த்தும் வகையில் சில உவமைகளைக் கூறினேன். அதாவது, ஆள்மாற்றம், கட்சிமாற்றம் போன்ற மாற்றங்கள் மட்டுமே மாற்று அரசியல் ஆகாது; மாறாக, அடிப்படையில், கையாளும் கொள்கை- கோட்பாடு மற்றும் செயல்திட்டங்களில் நிகழும் மாற்றமே உண்மையான மாற்று அரசியல் என்பதை விளக்கினேன்.

Thirumavalavan explain about controversial speech

இது குறித்து திருமாவளவன் அளித்துள்ள விளக்கம்:

ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழலாக இருக்க முடியாது! கள்ளச் சாராயத்துக்கு மாற்று நல்ல சாராயம் என்னும் பெயரிலான அரசு சாராயமாக இருக்க முடியாது! அதேபோல ஊழல், மது போன்றவற்றுக்கு மாற்று சாதிவெறியாகவோ மதவெறியாகவோ இருக்க முடியாது. மாறாக, ஊழல் ஒழிப்பு, மது
ஒழிப்பு, சாதிவெறி-மதவெறி ஒழிப்பு ஆகிய அரசியல் கொள்கைகளும் அவற்றுக்கான செயல் திட்டங்களும் தான் அவற்றுக்கான மாற்றாக இருக்க முடியும். இதனை விளக்கும் வகையில் உரையாற்றும் போக்கில்தான் பின்வரும் உவமைகளைக் கையாண்டேன்.

அதாவது, " தமிழகத்தில் ஊழல் மலிந்து கிடக்கிறது; ஊழல் புற்று வளர்ந்து கிடக்கிறது ; அதில் கட்டுவிரியன் குடியிருக்கிறது; அதற்குப் பதிலாக கண்ணாடிவிரியன் குடியேறப் பார்க்கிறது. இவை இரண்டுக்கும் பதிலாக ஒரு நல்ல பாம்பு நான்தான் மாற்று என்கிறது. அது சாதிப் பாம்பு! " என ஊழலையும் சாதியத்தையும் பாம்புகளாக உவமைப் படுத்திக் கூறினேன்.

கட்டுவிரியன் என்னும் ஊழல் பாம்புக்கு கண்ணாடிவிரியன் என்னும் ஊழல் பாம்பு எப்படி மாற்றாக இருக்க முடியும் ?-என்றும், அதேபோல, ஊழல் பாம்புகளுக்கு சாதிப் பாம்பு எப்படி மாற்றாக இருக்க முடியும்?-என்றும் விளக்கினேன். ஊழல் மற்றும் சாதிவெறி ஆகியவற்றுக்கான எடுத்துக்காட்டுகளாகவே பாம்புகளை உவமையாகக் கையாண்டேன்.

மேலும், 'மாற்று' என்பதை கூடுதலாக விளக்கும் வகையில், "கபடி விளையாட்டில் ஒருவரால் விளையாட முடியாத போது இன்னொருவர் களமிறக்கப் படுவார். அவரை 'substitute' என்று சொல்லுவார்கள். அதைப்போன்றதல்ல நமது மாற்று அரசியல். 'Alternate' என்பதே 'மாற்று' ஆகும்"- என்று எனது உரையில் குறிப்பிட்டேன்.

ஆங்கிலத்தில் 'substitute' என்பதை 'பதிலி'என்று சொல்லலாம். ஆகவே, 'பதிலி' என்பது வேறு! 'மாற்று'என்பது வேறு! அதாவது நாம் கூறுவது பதிலி அரசியல் அல்ல; மாற்று அரசியல்!

இதனை எனது உரையோட்டத்தின் வீச்சில் விளக்குவதற்கு முற்பட்டபோது தான், 'புற்று மற்றும் பாம்புகள்' ஆகியவற்றை உவமைகளாகக் கையாள நேர்ந்தது. ஆனால், தவிர்க்கமுடியாமல், இயல்பாகவே அதனை நபர்களோடு பொருத்திப் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திமுக தலைவர் கருணாநிதியை நான் மிகவும் மதிக்கக் கூடியவன். அவரை மனதிலே கொண்டு இந்த உவமையை நான் கூறவில்லை. அதேபோல அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவையும் மனதிலே கொண்டு நான் இந்த உவமையைக் கையாளவில்லை. அதாவது, நபர்களை அல்ல ; ஊழல் மற்றும் சாதிவெறி ஆகியவற்றையே பாம்புகளோடு பொருத்தி, மாற்று அரசியலையும் மாற்றுப் பாதையையும் விளக்கினேன்.

எனது அன்றைய உரை ஏற்கனவே திட்டமிட்டு, தயாரிக்கப்பட்டு, நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல ; உரையின் போக்கில் தன்னியல்பாகத் தெறித்த உவமைகளே என்பதை யாவருக்கும் உணர்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன். எனினும், எனது உரை, தனிப்பட்டமுறையில் நபர்களை விமர்சிப்பதாக புரிந்து கொள்ளும் வகையில் அமைந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன்.''என்று விளக்கம் அளித்துள்ளார் திருமாவளவன்.

English summary
VCK leader Thirumavalavan explain, controversial speech about dmk leader karunanidhi and tamilnadu cm jayalalitha
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X