For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொல் அடையாளங்களைக் காக்க "மரபுசார் அமைப்பு".. திருவண்ணாமலையில் உதயமானது!

Google Oneindia Tamil News

திருவண்ணாமலை: மிகவும் தொன்மை வாய்ந்த திருவண்ணாமலை நகரம் மற்றும் மாவட்டத்தின் தொல் அடையாளங்கள் மற்றும் சுற்றுப்புற சூழல் அழிந்து வரும் நிலையில், நகரின் தொல் ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் ஒன்றிணைந்து திருவண்ணாமலை மரபு சார் அமைப்பு என்ற அமைப்பை நிறுவி அதன் மூலம் அழிந்து வரும் தொல் சின்னங்கள் மற்றும் சுற்றுச்சூழலை ஆவணப்படுத்தி, பாதுகாத்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

அந்த அமைப்பின் அறிமுக விழா மற்றும் அமைப்பின் முதல் மாணவர் அமைப்பின் தொடக்க விழா எஸ்கேபி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Thiruvannamalai heritage centre formed

விழாவினை கல்லூரி தலைவர் கே.கருணாநிதி குத்து விளக்கேற்றி விழாவிற்கு தலைமை ஏற்றார். வரலாற்றை நாம் ஏன் கற்க வேண்டும், வரலாற்றின் மூலம் பொறியாளர்கள் எப்படியெல்லாம் பழம் விஞ்ஞானங்களை கற்கலாம் என்பது குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் குல தெய்வ வழிபாட்டின் அவசியம் பற்றியும் பேசினார். படித்து முடித்து விட்டு வெளிப் பணிக்குச் செல்லும் பொழுது ஒவ்வொருவரும் தான் பணி புரிய போகும் இடத்தில் உள்ள தொல் சின்னங்கள் மற்றும் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்று கூறினார்.

அமைப்பின் தலைவர் ராஜ் பன்னீர் செல்வம், அமைப்பு உருவான விதம், அதன் நோக்கத்தை பற்றி மாணவர்களுக்கு பொதுமக்களுக்கு விளக்கமாக கூறினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி கல்லூரிகளிலும், மாணவர் அமைப்பை நிறுவி விழிப்புணர்வை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் திட்டத்தின் முதல் தொடக்கமாக எஸ்கேபி பொறியியல் கல்லூரியில் முதல் மாணவர் அமைப்பைத் தொடங்குவதை பெருமையாக கருதுகிறோம் என்று பேசினார். இதற்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு தந்த கல்லூரி தலைவருக்கு அமைப்பின் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கல்வெட்டு ஆய்வாளர் (ஓய்வு) பத்மாவதி ஆனையப்பன், தமிழ்நாடு தொல்லியல் துறை மற்றும் கார்மேகம் (இயக்குநர்-ஓய்வு), நீர் வள மையம், அண்ணா பல்கலைக்கழகம் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலையும் அதன் தொன்மையும் என்ற தலைப்பில் பத்மாவதி அவர்கள் திருவண்ணாமலை நகரம் சங்க காலம் முதல் எவ்வாறு சிறப்புற்று விளங்கியது என்றும், சோழர்கள் ஆட்சியின் கீழ் திருவண்ணாமலை கோவில் பெற்ற பல்வேறு தானங்களைப் பற்றி கல்வெட்டு ஆதராங்களுடன் விளக்கினார். மேலும் வரலாற்றை எவ்வாறு அணுக வேண்டும் என்றும், அதில் இருக்கும் விஷயங்களை நாம் இன்றைய வாழ்வில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்றும் பேசினார்.

Thiruvannamalai heritage centre formed

கார்மேகம், நீர் மேலாண்மையும் அதன் இன்றைய அவசியமும் என்ற தலைப்பில் நீர் ஆதாரங்களை மாசுபடுத்தலில் இருந்து காப்பாற்றவது எப்படி, நதி நீர் இணைப்பின் அவசியத்தையும் பற்றி சிறப்புரை ஆற்றினார். மேலும் சாத்தனூர் அணையில் தான் மேற்கொண்ட ஆய்வுகளைப் பற்றியும் மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து விழாவினை நினைவு கூறும் விதமாக அமைப்பின் இலச்சினையை அஞ்சல் தலையாக அனைத்து சிறப்பு விருந்தினர்களும் வெளியிட அதை திருவண்ணாமலை நகரில் அஞ்சல் தலை சேமிக்கும் ராமலிங்கம் பெற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அமைப்பின் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியினை சிறப்பு விருந்தினர்கள் தொடங்கி வைக்க அனைத்துப் பொதுமக்களும், மாணவர்களும் ஆர்வமுடன் கண்டு களித்தனர். திருவண்ணாமலை நகரப் பறவைகள், திருவண்ணாமலை மாவட்ட தொல் சின்னங்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட அரிய அஞ்சல் தலைகள் என்று கண்காட்சி மூன்று பிரிவுகளை உள்ளடக்கி இருந்தது.

விழாவின் இறுதியில் அனைவருக்கும் பழையதை நினைவுபடுத்தும் வகையில் கம்மர்கட், பொரி உருண்டை, கடலை உருண்டை, ஆரஞ்சு மிட்டாய் அடங்கிய மரபு திண்பண்டம் பரிமாறப்பட்டது.

விழாவில் திருவண்ணாமலை மக்கள், எஸ்கேபி பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

English summary
Thiruvannamalai heritage centre has been formed and the same was inaugurated in the temple town recently.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X