இந்தக் கொடுமையை எப்படிங்க சொல்றது....!
கரூர்: ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்று எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல மக்களும் கூட புலம்பும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது. அதற்கேற்பத்தான் ஆட்சியும் காட்சிகளும் உள்ளன.
தமிழகத்தில் அதிமுகவினர்தான் ஜெயலலிதாவை விடாமல் மக்களின் முதல்வர் என்று கூறி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அரசுத் துறையும் கூட அவரை இன்னும் முதல்வராகவே பார்க்கிறது, பாவிக்கிறது என்பதுதான் வேடிக்கையானது.
மக்களின் முதல்வர் ஜெயலலிதாவுக்காக பூஜைகளும் சிறப்பு யாகங்களும் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ஜெயா டி.வி ஆரம்பித்து வைத்த இந்த மக்களின் முதல்வர் என்ற பதத்தை பாலிமர் டி.வியிலும் கூட சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அரசின் சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சியை நடத்தினர். அதில் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் படம் மருந்துக்குக் கூட வைக்கவில்லை. மாறாக ஜெயலலிதா படம்தான் நீக்கமற நிறைந்திருந்தது.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம் இன்னும் கூட அகற்றப்படவில்லை. தற்போது தமிழக அரசின் மக்கள் செய்தி மக்கள் தொடர்பு துறை இணையதளத்தில் ஜெயலலிதாவை இன்னும் முதல்வராகவே வைத்துள்ளனர். அந்தத் தளத்தை கிட்டத்தட்ட அப்படியே போட்டு விட்டு போய் விட்டது போலவே தெரிகிறது. எந்த ஒரு மாற்றமும் இல்லை.
கோமாவில் கிடக்கும் நோயாளி போலவே தெரிகிறது இந்தத் தளத்தைப் பார்த்தபோது. மார்ச் 21ம் தேதி மாலையில் இந்த தளத்தைப் பார்த்தபோது அதில் அமைச்சரவைப் பட்டியலில் முதல்வர் ஜெ. ஜெயலலிதா என்று போட்டு வைத்துள்ளனர். ஓ.பன்னீர் செல்வம் நிதியமைச்சராகவே நீடிக்கிறார். மேலும் அந்தத் தளம் முழுவதும் ஜெயலலிதா படம்தான்.
என்னத்தைச் சொல்ல...!












Click it and Unblock the Notifications