For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்களை சும்மா விட மாட்டேன்: ஜெ.

By Siva
Google Oneindia Tamil News

TN is very peaceful: Says Jaya at NIC meeting
சென்னை: தமிழ்நாட்டில் மத ரீதியாகவோ அல்லது சாதி ரீதியாகவோ பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்யும் யாரையும் எனது தலைமையிலான அரசு சும்மா விடாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்று டெல்லியில் நடந்த தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து பிரதமர் உரை நிகழ்த்தினார். மாநில முதல்வர்களும் தேசிய ஒருமைப்பாடு குறித்து பேசினர்.

இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பில் ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அவர் ஜெயலலிதாவின் உரையை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது,

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 16-வது தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்துக்காக நாம் இங்கே கூடி இருக்கிறோம். ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலைப் பெற்று 67 ஆண்டுகள் கழிந்த பிறகும் நாம் ஜனநாயகத்தை செயல்படுத்த போராடி வருகிறோம்.

சாதி, மதத்தால் நாம் பிளவுபட்டிருந்தாலும், பிரிவினைவாதம், தீவிரவாதத்தால் நாம் பாதிக்கப்பட்டிருந்தாலும் அரசியல் சுதந்திரத்தில் பெரிய வெற்றியை நாம் பெற்றுள்ளோம். நமது சட்ட அமைப்பில் உள்ள ஜனநாயக மாண்புகள் காரணமாக நாம் உலகளாவிய அளவில் வெற்றிகரமான மதச்சார்பற்ற ஜனநாயக நாடு என்ற அங்கீகாரத்தை நாம் பெற்றுள்ளோம்.

என்றாலும் பிரிவினை சக்திகள் நம்மிடம் பிரிவினை எண்ணத்தை ஏற்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. சில வெளிநாட்டு சக்திகளும், தவறாக வழிநடத்தப்படும் சமூக விரோத சக்திகளும் உள்நாட்டு அமைதியை சீர்குலைக்க முயல்கின்றன.

சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வுகளாலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் தவறான நிர்வாகம் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை மற்றும் அதிக பணவீக்கம் போன்றவை சமுதாயத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி சமுதாய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளன.

இந்த நேரத்தில் சமுதாய-பொருளாதார சமத்துவத்தை ஏற்படுத்தி இந்தியரின் அடையாளத்தை உருவாக்க வேண்டியது அவசியமாகும். அது தான் உண்மையில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம்மிடம் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும். நமது ஜனநாயக மாண்பை சீர்குலைக்க முயலும் சக்திகளை முறியடிக்க தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் போன்ற அமைப்புகளை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.

மாநில அரசுகளின் முதல் முக்கிய கடமையே சமுதாயத்தில் அமைதியும், சட்டம்-ஒழுங்கை பேணி மக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்துவது தான். இதை வைத்துதான் நான் தமிழ்நாட்டுக்கான வளர்ச்சியை கையாண்டு வருகிறேன்.

தமிழ்நாட்டுக்காக நான் கொண்டு வந்துள்ள 2023-ம் ஆண்டு முன்னோட்ட திட்டங்கள், இந்தியாவிலேயே தமிழ்நாட்டை செழிப்பான மேம்பட்ட மாநிலமாக மாற்றும். வறுமை ஒழிக்கப்பட்டு, மக்கள் எல்லா நவீன வசதிகளையும் பெற்று அமைதியாக வாழ ‘‘2023 விஷன்'' வழிவகுக்கும்.

இந்த திட்டம் மாநில வளர்ச்சிக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உயர் வளர்ச்சிக்கான அம்சத்தை பெறும் லட்சியத்துடன் வரையறுக்கப்பட்டுள்ளது. எனது தலைமையிலான அரசு, மாநில மக்களின் உணர்வுக்கு ஏற்ப முக்கியத்துவம் கொடுப்பதால் தான் சட்டம்-ஒழுங்கை சரியாக பேண முடிகிறது. இதற்கு மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டும்.

கடை கோடியில் வாழும் மக்களின் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டு நிர்வாகம் செய்ய வேண்டியது அவசியமாகும். தமிழ்நாட்டில் இப்படித்தான் மாவட்ட நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.

சமூக அமைதிக்காக எனது தலைமையிலான அரசு பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழ்நாடு சிறுபான்மைக் கழகம், தமிழ்நாட்டு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சிறுபான்மையினர் நலத்துறை ஆகியவற்றின் மூலம் சிறுபான்மையினர் நலனுக்காக சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

இளைஞர்களிடையே திருவிழாக்கள், போட்டிகள் நடத்தப்பட்டு இளைஞர்களிடம் சமூக அமைதி ஏற்படுத்தப்படுகிறது. மற்ற மத, சமுதாயத்தினரின் விழாக்களில் சமுதாய தலைவர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உற்சாகப்படுத்துகிறார்கள்.

மெக்கா, ஜெருசலேம், மானசரோவர் ஆகிய புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்பவர்களுக்கும் தமிழக அரசு உதவிகள் செய்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் சமூக அமைதி மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுகிறது என்பதை என்னால் பெருமையுடன் சொல்ல முடியும்.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு மிகச் சிறப்பாக பராமரிக்கப்படுவதால் தான், மத ரீதியிலான பிரச்சினை, இடது சாரி வன்முறை, மதவாதிகளின் வன்முறை போன்றவற்றில் இருந்து தமிழகம் விடுபட்டுள்ளதை இந்த சபைக்கு பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டு போலீசார் சுதந்திரமாக செயல்பட நான் அனுமதி கொடுத்து இருப்பதே இந்த சாதனைக்கு காரணமாகும்.

தமிழ்நாட்டில் இன்று சட்டம்-ஒழுங்கு மிகவும் சிறப்பாக உள்ளது. அதனால் தான் தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்வதாக தேசிய அளவில் பேசப்படுகிறது.

தமிழ்நாட்டில் மத ரீதியாகவோ அல்லது சாதி ரீதியாகவோ பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சி செய்யும் யாரையும் எனது தலைமையிலான அரசு சும்மா விடாது என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அப்படி வன்முறையில் ஈடுபடுவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க போலீசாருக்கு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநில உளவுத்துறை மூலம், இரு சமுதாயங்களின் அமைப்பு நடவடிக்கைகள் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன. விரும்பத்தகாத, ஆட்சேபகரமான பேச்சுகள், துண்டு பிரசுரங்கள், ஆடியோ வீடியோ சி.டி.க்கள் ஆகியவை தடுக்கப்படுகின்றன.

அல்-உம்மா, அகில இந்திய ஜிகாத் கமிட்டி ஆகியவை தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளன. சில இயக்கத்தினரின் செயல்பாடுகள் உன்னிப்பாக கவனத்துடன் கவனிக்கப்படுகின்றன.

பதற்றமான பகுதிகளில் நிரந்தர அமைதிக் குழுக்கள், முக்கிய திருவிழா நேரங்களில் போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன் எச்சரிக்கையாக கைது செய்தல் போன்ற முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாட்டில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் இருக்க உதவியாக உள்ளன.

மாநில அரசால் செய்யப்படும் முன் எச்சரிக்கை கைது நடவடிக்கைகள் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பேண உதவுகிறது என்பதை தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.

பொது அமைதிக்கான சட்டத்தை கையாள்வதில் மாநில அரசு மிகவும் கவனமாக உள்ளது. ஆனால் மாநில அரசின் உத்தரவுகளை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு ஒதுக்கி விடுகிறது. மாநில அரசின் அதிகாரத்தில் இதன் மூலம் மத்திய அரசு தேவையின்றி ஆக்கிரமிப்பதாக நாங்கள் கருதுகிறோம்.

நாட்டின் சட்டம்- ஒழுங்கை பேண வேண்டிய அடிப்படை உரிமை மாநில அரசுகளுக்கே உள்ளது. ஆனால் இதில் மத்திய அரசும்-மாநில அரசுகளும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.

அந்த வகையில் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதில் மாநில அரசுகளுக்கும் சமமான பங்கு உள்ளது. என்றாலும் இந்த விஷயத்தில் மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசுகளுக்கு எதிராக பாரபட்ச செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

தேசிய தீவிரவாத தடுப்பு மையம், வன்முறை தடுப்பு மசோதா போன்றவற்றில் தவறான வழிகாட்டுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சில பகுதிகளில் வன்முறை ஏற்பட்ட பிறகும் கூட வன்முறை மசோதாவுக்கு குரல் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தமிழக அரசும், அதிமுகவும் எதிர்க்கிறது.

இந்த மசோதாவால் வன்முறை சம்பவங்களை தடுத்து விட முடியாது. இந்த மசோதாவில் உள்ள பல அம்சங்கள் பெயரளவுக்கே உள்ளன. அவற்றை தவறாக பயன்படுத்த முடியும். அனைத்துக்கும் மேலாக இந்த மசோதா மத்திய-மாநில அரசுகளின் அதிகாரப் பகிர்வுக்கு எதிராக உள்ளது. மாநில சுயாட்சி மீதான நேரடி தாக்குதலாக இது உள்ளது. உண்மையில் இது பிரச்சினையை மேலும் அதிகரிக்கத்தான் செய்யும்.

சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க முயலும் சமூக விரோத சக்திகளை ஒடுக்க வேண்டுமானால், வலிமையான, ஆற்றல் மிக்க, நவீன கட்டுப்பாடான போலீஸ் படையால் மட்டுமே முடியும். இதை கருத்தில் கொண்டு எனது தலைமையிலான அரசு தமிழக காவல் துறையை அதிநவீனமாக்கி உள்ளது.

போலீஸ் படையை நவீனப்படுத்தி வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாநில முதல்-மந்திரிகள் உணர்ந்து, அதை செயல்படுத்த ஆர்வமுடன் உள்ளனர். ஆனால் நிதி நெருக்கடி இதற்கு தடையாக உள்ளது.

எனவே காவல்துறையை நவீனப்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் மத்திய அரசு காவல்துறையை நவீனமாக்கும் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை 75 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைத்து விட்டது ஏமாற்றம் தருகிறது. எனவே மாநிலங்களுக்கு உரிய நிதியை ஒதுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

நவீன தகவல் தொடர்பு, தொழில் நுட்பம் காரணமாக குற்றங்கள் பெருகிவிட்டன. சைபர் கிரைம் குற்றங்களைத் தடுக்க கருவிகள் வாங்க போதுமான முதலீடும், பயிற்சியும் தேவைப்படுகிறது. தமிழக அரசு இதில் நிறைய முதலீடு செய்துள்ளது. மத்திய அரசு தொடர்ந்து இதில் இருந்து ஒதுங்காமல் மாநிலங்களுக்கு உதவ முன்வர வேண்டும்.

சரியான நேரத்துக்கு, சரியான தகவல் கொடுத்தால்தான் சமூக விரோத செயல்களை தடுக்க முடியும். தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான உளவுத்துறை ஒருங்கிணைப்பு உள்ளது. தமிழக உளவுத்துறையினர் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் உளவுத்துறையுடன் தகவல்களை பகிர்ந்து கொள்வதில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

தமிழக உளவுத்துறையின் செயல்பாடு தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. சமுதாயத்தில் பெண்கள் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். பெண்களுக்கு இந்த விஷயத்தில் உதவவே தமிழக அரசு விலை இல்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மின் அடுப்பு போன்றவற்றை வழங்கி வருகிறது.

பெண் கல்வி, பெண்கள் திருமணம், விதவை மறுமணம், கலப்பு திருமணம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றில் உதவிகள் செய்து பெண்கள் அதிகாரம் பெற வழிவகை காணப்பட்டுள்ளது. எனது அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் தான் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்கள்

இந்தியாவில் 20 ஆண்டுகளுக்கு முன்பே 1992-ல் முதன் முதலாக மகளிர் காவல் நிலையத்தை எனது அரசு ஏற்படுத்தியது. பெண்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படுகிறது. பெண்களை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்க 13 அம்ச திட்டம் ஒன்றை நான் சமீபத்தில் அறிவித்துள்ளேன். இதன் மூலம் விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படும்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் 42 மகளிர் கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி- வேலை வாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்துவதில் தமிழகம் தான் முன்னணியில் உள்ளது எனது முயற்சியால்தான் அந்த சட்ட திருத்தம் சட்ட வடிவமானது.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தடுப்பதில் எனது அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் தனி பாதுகாப்பு செல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நகரும் போலீஸ் படைகள் இதற்கென ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் எஸ்.சி. எஸ்.டி சட்டம் 1989 அமல்படுத்தப்படுவதை நான் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்து கண்காணிக்கிறேன்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு உதவ 4 கோர்ட்டுகள் செயல்படுகின்றன. நடப்பு ஆண்டில் மேலும் 2 கோர்ட்டுகள் தொடங்க இருக்கிறோம். 32 பிராசிகியூட்டர்களை நியமிக்க உள்ளோம்.

எனவே சட்டம்-ஒழுங்கை பராமரித்து சமுதாயத்தில் அமைதி ஏற்படுத்துவது மாநில அரசுகளின் முக்கிய பொறுப்பு என்பதை மத்திய அரசு உணர வேண்டும். அதற்கு ஏற்ப மாநில அரசுகளை சமமானதாக மத்திய அரசு கருதி நடத்த வேண்டும்.

இதன் மூலம்தான் மாநில அரசுகள் உளவுதுறை தகவல்கள் போன்ற முக்கிய துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும். ஆகையால் மத்திய அரசு மாநிலங்களுக்கு சம உரிமை தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், சத்தீஸ்கர் முதல்வர் ரமன் சிங்கும் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர். தெலுங்கானா பிரச்சனை குறித்து பேச அனுமதிக்காததால் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
CM Jayalalithaa's statement was read at the NIC meeting held in Delhi today. TN is very peaceful and law and order situation is great in the state, she said in that statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X