கருப்பு தங்கம்.. கடைசி வரை தரத்தை இழக்காமல்... வாழ்ந்து மறைந்த கள்ளங்கபடமற்ற அரசியல் ஞானி கக்கன்!
சென்னை: "பொருளாதாரம் பற்றியும் பணத்தை பற்றியும் அதிகமாக சிந்தித்து எழுதிவந்த எனக்கு அந்த பொருளாதாரமும் பணமும் இல்லாமல் போய்விட்டது" என்று காரல் மார்க்ஸ் தான் எழுதிய 'தாஸ்காப்பிடல்' என்னும் நூலின் இறுதியில் குறிப்பிட்டிருப்பார். இது காரல் மார்க்ஸ்-க்கும் மட்டுமல்ல... நம் கக்கனுக்கும் பொருந்தும் உண்மை.
ஆம்!! எதிரிகளையே சம்பாதிக்காத கக்கனின் நினைவு நாள் இன்று! கக்கன் தாழ்த்தப்பட்ட மக்களின் தலைமகன் - கறைபடியா கைகளின் எஜமானர் - அரசியலில் சட்டமன்ற, நாடாளுமன்ற, உறுப்பினர், தமிழக அமைச்சர் என பதவிகளை வகித்தவர் - தியாகம், தூய்மை, எளிமை, நேர்மை ஆகியவற்றை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டவர்.
கக்கன் என்பது கடவுளின் பெயர்... தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்தவர்களுக்கு ஆண் பிள்ளையானால் கக்கன் என்றும், பெண் பிள்ளையானால் கக்கி என்றும் பெயரிடுவது வழக்கம். கரடு முரடான பாதைகளில்தான் இவரது அரசியல் பயணம் துவங்கியது. இவர் நடத்திய பல காரியங்களுக்கு ஆங்கில அராஜகம் பல முறை சிறை தண்டனை அளித்து மகிழ்ந்தது. சிறையில் அவருக்கு தொடர்ந்து 5 நாள் கசையடி கொடுக்கப்பட்டது. இவர் அடிவாங்குவதை பார்க்க, இவரது மனைவி 5 நாளுமே சிறைக்கு வரவழைக்கப்பட்டார் என்பதுதான் உச்சக்கட்ட கொடுமை!

மனைவி
உடலின் கசையடி வலி ஒருபுறமும், தான் அடிவாங்குவதை மனைவி கண்கூடாக பார்ப்பது மறுபுறமும் என சேர்ந்து துடித்து சுயநினைவின்றியே விழுந்தார். பிறகு கக்கனை, ஒரு மாட்டு வண்டியில் தூக்கி போட்டு, கால்கள் தரையில்பட தரதரவென சிகிச்சைக்காக இழுத்து சென்றனர். சிறைகளில் குடிக்க கொடுக்கும் கூழில் கல்லும், மண்ணும் கலந்து தரப்பட்டது. படுக்குமிடம் வேண்டுமென்றே மேடு பள்ளமாக்கப்பட்டது.

நேர்மை
18 மாத சிறை தண்டனைக்குப் பிறகு தேர்தல் களம்புகுந்தார் கக்கன்.. காமராஜர் முதல்வர் பணியில் அமரும்போது, தனது ஏழு அமைச்சர்களுள் கக்கனையும் ஒருவராக சேர்த்துக் கொண்டார். பொதுப்பணி, மற்றும் அரிசன நலம், வேளாண்மை, உளவுத்துறை, சிறுபாசனம், மதுவிலக்கு, கால்நடை பராமரிப்பு, அரிசன நலம், உள்துறை, நிதி, கல்வி, சிறைத்துறை, தொழிலாளர் நலம், அறநிலையத் துறை, போன்ற உயர்ந்த பொறுப்புகள் கக்கனின் நேர்மைக்கும் உழைப்புக்கும் அளிக்கப்பட்டவை!

அமைச்சர்
1967-தேர்தலில் கக்கன் வெற்றி வாய்ப்பை இழந்தபோதும், எதிர்க்கட்சியாக செயல்பட்டவர்களும் சரி, மற்ற அரசியல்வாதிகளும் சரி கக்கனை மட்டும் பிரச்சாரத்தின்போது கடிந்து பேசியதே இல்லை என்பதுதான் இவரது நன்மதிப்புக்கு சான்று! இவர் எம்பியாக இருந்தபோதாகட்டும், 10 வருஷ காலம் அமைச்சராக பதவி வகித்த போதாகட்டும்.. வெளியூர் சென்றாலே தன் துணிகளை தானே துவைத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்!

அரசு ஊழியர்
இவருடைய சகோதரர் ஒருவருக்கு வேலை இல்லாமல் இருந்ததால், தன் அறையிலேயே சில நாள் தங்க வைத்து கொண்டிருந்தார் கக்கன்.. ஆனால் சகோதரருக்கு திடீரென அரசு வேலை கிடைத்ததை கேள்விப்பட்டதுமே, "நீ அரசு ஊழியனாகிவிட்டாய். ஒரு அரசு ஊழியர், அமைச்சர் வீட்டில் இருப்பது தவறு. உடனே புறப்படு" என்று கூறி நடுராத்திரியே வீட்டைவிட்டு வெளியேற்றினார்.

எளிமை
அரசியல்வாதிகள் எதையெல்லாம் மிக உயர்ந்த மரியாதைக்குரியதாக கருதுகிறார்களோ, அதையெல்லாம் மிக சாதாரணமாகவே கருதினார் கக்கன். பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசு மாளிகை வீட்டை காலி செய்து ஒரு சாதாரண நபரை போல், ஸ்டாப்பிங் வரை நடந்து வந்து பஸ்ஸில் ஏறினார். அவரை அடையாளம் கண்ட பொதுமக்கள் உட்கார இடம் கொடுத்தும், மறுத்து மற்ற பயணிகளோடு நின்று கொண்டே வந்த எளிமைவாதி இவர்!

வாடகை வீடு
10 ஆண்டுகால ஆட்சியில் இருந்த கக்கனுக்கென்று எந்த சொத்தும் இல்லை.. சொந்த வீடும் இல்லை... வாகனமும் இல்லை - கண்பட்ட இடத்தில் இருந்த பணியாளர்கள் தற்போது இல்லை - ஆட்சியில் இருக்கும்போது காரியம் சாதித்துக்கொண்ட சுயநலமிகள் தற்போது இல்லை - மாதாமாதம் வருமானத்துக்கும் வழியில்லை... ஒருசில நல்லியதங்கள் உதவியதால் வாடகை வீட்டில் தி.நகரில் குடியேற, மனைவியோ ஹாஸ்டல் ஒன்றில் வேலை பார்த்து சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றினார்.

கண்களில் நீர்
1979-ல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கக்கன் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருப்பதை கேள்விப்பட்டதுமே, சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த அன்றைய முதல்வர் எம்ஜிஆர், நேரடியாக வந்துவிட்டார்.. ஆஸ்பத்திரி வராண்டாவில் கோரைப்பாயில் படுத்த படுக்கையாய் எழுந்திருக்க கூட முடியாத நிலைமையில் இருந்த கக்கனை கண்ட எம்ஜிஆர் விக்கித்து நின்றார்.. இருவருமே சிறிது நேரம் ஒன்றுமே பேசவில்லை. ஒருவரையொருவர் பார்த்தனர்.. கண்களில் இருந்து இருவருக்கும் நீர் மட்டும் வழிந்தபடியே இருந்தது.

அன்பு போதும்
அருகில் சென்ற எம்ஜிஆர், "உங்களுக்கு என்ன வேண்டும்... என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்" என்றார். கக்கனோ "ஒன்றும் வேண்டாம். நீங்கள் வந்ததே போதும். உங்கள் அன்பு போதும்" என்றார். ஆனால் எம்ஜிரோ, மருத்துவமனை பொறுப்பாளரை அழைத்து, "இவர் யார் தெரியுமா? இவரது உழைப்பால் பெற்ற சுதந்திரத்தால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இவரை இப்படி கீழே போட்டு படுக்க வைக்க.. உங்களுக்கு எப்படி மனசு வந்தது? உடனே தனி ரூம் வேண்டும்.. நல்ல மருத்துவம் கிடைக்க ரெடி பண்ணுங்க.." என்றார். எனினும், முதுமை காரணமாக 1981, டிச 23-ல் கக்கன் மரணமடைந்தார்.

பொருளாதாரம்
ஆட்சியில் இருந்தபோதும்சரி, இல்லாதபோதும் சரி, எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கவும், செயல்படவும் கக்கனால் மட்டுமே முடியும். தன்னைக் காத்துக் கொள்ளக்கூட பொருளாதார வசதி இல்லாமல், மருத்துவம் செய்து கொள்ள முடியாமல் போயிற்று கக்கனுக்கு!! இதனால்தானோ என்னவோ, "பிழைக்க தெரியாதவர்" என அரசியல் உலகில் பேசப்பட்டார்.

கருப்பு தங்கம்
நேர்மை, ஒழுக்கம், மக்களிடம் பழகும்விதம், கனிவான அணுகுமுறை, தொகுதிக்கு செய்த வளர்ச்சிப் பணிகள்தான் கக்கனை இன்றும் மறக்க செய்யாமல் இருக்கின்றன. கக்கன் - சவுக்கடிகளை - தழும்புகளை பரிசாக பெற்ற மகான்... கள்ளங்கபடற்ற அரசியல் ஞானி - தாழ்த்தப்பட்டோரின் நம்பிக்கை நட்சத்திரம்... சட்டையைப்போல் கொள்கையை மாற்றிக் கொள்ளாத லட்சிய வீரன்...சுருக்கமாக சொன்னால் கக்கனின் நிழலும் கூட ஒழுக்கமானதே! கக்கன் - ஒரு பத்தரை மாத்து கருப்பு தங்கம்.. அது என்றைக்கும் தன் தரத்தையோ மதிப்பையோ ஒருபோதும் இழக்காது!
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications