கொட்டித்தீர்த்த கனமழைக்கு கொடூரமான சாலைகள்: உயிர் பயத்தோடு பயணிக்கும் வாகன ஓட்டிகள்
சென்னை: டிரைவிங் லைசென்ஸ் வாங்க ஏன் எட்டு போட சொல்றாங்கன்னு இப்பத்தானே தெரியுது என்று மீம்ஸ் போட்டு குண்டும் குழியுமான சாலைகளில் பயணிப்பதை கிண்டல் செய்து வருகின்றனர் சென்னைவாசிகள்.
வடகிழக்கு பருவமழையால், தமிழகம் முழுவதும், 3,650 கி.மீ., சாலைகள் சேதமடைந்துள்ளன. அதிகம் பாதிக்கப்பட்டது வட மாவட்டங்களில் உள்ள சாலைகள்தான். சென்னையில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையால் மாநகரின் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. இருசக்கர வாகனங்களில் செல்வோர் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு சாலைகளில் பயணிக்கின்றனர். குண்டும் குழியுமான சாலைகளில் மாநகர பேருந்துகளை முழுமையாக இயக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால், போதிய பேருந்து வசதி கிடைக்காமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

மோசமான சாலைகள்
சென்னையில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை, திருவொற்றியூர் நெடுஞ் சாலை, நந்தம்பாக்கம் பூந்தமல்லி வரையிலான சாலை, வேளச்சேரி உட்புற சாலைகள், குன்றத்தூர் நெடுஞ்சாலை, பல்லாவரம் அனகாபுத்தூர் சாலை, முடிச்சூர், எண்ணூர், மணலி புதுநகர், வியாசர்பாடி, தண்டையார்பேட்டை உட்பகுதி சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

உயிர்பலி வாங்கும் அபாயம்
இந்த சாலைகளில் பேருந்துகள் செல்ல முடியாத அளவுக்கு மேடு பள்ளங்கள் அதிகமாக இருக்கின்றன. இச்சாலைகளில் பேருந்துகள் முழு அளவில் இயக்கப்படவில்லை. சில வழித்தடங்களில் கட் சர்வீஸ் பேருந்துகள் இயக்கப்பட்டன. மோசமான சாலைகளில் பேருந்துகளை இயக்குவதால், ஆங்காங்கே பிரேக் டவுன் ஆகிவிடுகின்றன. இதன் காரணமாகவே டிரைவர்கள் பேருந்துகளை இயக்க தயங்குகின்றனர். முழுமையான பேருந்து வசதி கிடைக்காததால் பயணிகள் அவதிப்பட்டனர்.

பொதுமக்கள் திண்டாட்டம்
ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் மக்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சில ஆட்டோ ஓட்டுநர்களும் குறிப்பிட்ட ஏரியாக்களில் உள்ள சாலைகளின் நிலையைப் பார்த்து வரத்தயங்குகின்றனர். அப்படி வந்தாலும் இருமடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். இதனால் பொதுமக்களின் பாடு படு திண்டாட்டமாக இருக்கின்றது.

புதிய சாலைகள் மோசம்
சமீபத்தில், சென்னையில் நடந்த, சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை ஒட்டி, மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய சாலைகள் பல சீரமைக்கப்பட்டன. இந்த சாலைகள்தான் இப்போது மழை நீரில் ஊறிப்போய் பல்லாங்குழி சாலைகளாக மாறியுள்ளன.

பலகோடி செலவழித்தும் பயணில்லை
தமிழகத்தில், நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில், 11 ஆயிரத்து, 752 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகள்; 11 ஆயிரத்து, 304 கி.மீ., மாவட்ட முக்கிய சாலைகள்; 34 ஆயிரத்து, 234 கி.மீ., மாவட்ட இதர சாலைகள் என, மொத்தம், 57 ஆயிரத்து, 290 கி.மீ., சாலைகள் உள்ளன. 2011 முதல் இந்த சாலைகளை மேம்படுத்த, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

3,650 கி.மீ சாலைகள் சேதம்
இந்நிலையில், வடகிழக்குபருவமழையால், மாநிலம் முழுவதும், 3,650 கி.மீ., சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதில், 950 கி.மீ., மாநில நெடுஞ்சாலை; 700 கி.மீ., மாவட்ட முக்கிய சாலை; 2,000 கி.மீ., மாவட்ட இதர சாலைகள். நெடுஞ்சாலைத்துறையின், 40 கோட்ட அலுவலகங்களில் உள்ள கண்காணிப்பு மையங்கள் மூலம்,இத்தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

வடமாவட்ட சாலைகள் மோசம்
வழக்கமாக, பருவமழை காலங்களில், தென் மாவட்ட சாலைகளில், அதிகளவில் சேதம் இருக்கும். ஆனால், இந்த ஆண்டு, வட மாவட்டங்களில் உள்ள சாலைகள் அதிகளவு சேதம் அடைந்துள்ளன. காரணம் கடந்த பத்துநாட்களாக கொட்டித்தீர்த்த கனமழைதான்.

சென்னை புறநகரில்
புறநகர் பகுதிகளில் சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கின்றன. சாலைகள் மூழ்கிப் போனதால் போட் சர்வீஸ் விடப்பட்டது. கடந்த 2 நாட்களை விட, நேற்று அதிகளவில் பேருந்துகள் இயக்கப்பட்டன. எனினும் பயணிகள் சிரமத்துடனே பயணிக்கின்றனர். சேதம் அடைந்த சாலைகளில், கூழாங்கற்கள், ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு தற்காலிக சீரமைப்பு பணி நடந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்ட சாலைகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வாரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலைகளும் தரைப்பாலங்களும் சேதமடைந்து உள்ளன. சேதமடைந்த சாலைகளை நெடுஞ்சாலைத் துறையினர் கணக்கெடுத்ததில் 600 கி.மீ தூரத்திற்கும் மேல் சாலைகள் சேதமடைந்து இருப்பது தெரிய வந்ததுள்ளது.

ரூ275 கோடி தேவை
சேதமடைந்த சாலை, தரைப்பாலங்களை தற்காலிகமாக சீரமைக்க, 60 கோடி ரூபாயும் நிரந்தரமாக சீரமைக்க 275 கோடி ரூபாயும் தேவைப்படும். இந்த நிதியை அரசு ஒதுக்கீடு செய்ததும் சேதமான சாலைகள் அனைத்தும் சீராகும் என்கிறார் மாவட்ட ஆட்சியர்.

கடலூர் சேதம் அதிகம்
கனமழை காரணமாக, கடலுார் மாவட்டத்தில், 392 கி.மீ., நெடுஞ்சாலைகள் சேதமடைந்துள்ளன. கடந்த 9ம் தேதி அதிகபட்சமாக, நெய்வேலியில், 48 செ.மீ., பண்ருட்டியில், 35 செ.மீ., மழை கொட்டி தீர்த்தது. இதனால் வெள்ளத்திப் பாதிப்பு அதிகமாக உள்ளது பல ஊர்கள் துண்டிக்கப்பட்டு இன்னமும் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது.

காஞ்சியில் பாதிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால் சுமார் ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து வசதியில்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட தலைநகரமாகவும், பட்டு நகரமாகவும், கோயில் நகரமாகவும் விளங்கி வருவதால் இங்கு போக்குவரத்து என்பது முக்கியமானது. சாலை பழுதால் வர்த்தகமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

சேதமான நெடுஞ்சாலைகள்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக பெய்த பலத்த மழையால் பல்வேறு மாநில நெடுஞ்சாலைகள் மழைநீரினால் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளன. செங்கல்பட்டு, மதுராந்தகம், காஞ்சிபுரம் உட்பட பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டது. சில இடங்களுக்கு இதுவரை பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது.

400 கிலோமீட்டர் சாலைகள்
குறிப்பாக, கல்பாக்கம் - காஞ்சிபுரம் சாலை, சிங்கபெருமாள் கோயில் - ஸ்ரீபெரும்புதூர் சாலை, மாமல்லபுரம் - துரைப்பாக்கம் சாலை, செங்கல்பட்டு - வந்தவாசி சாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம் ஆகிய நெடுஞ்சாலை உதவி கோட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 400 கிமீ சாலைகள் சேதமடைந்துள்ளன.

சீரமைப்பது எப்போது?
வடகிழக்குப் பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும் என்பதால் இப்போதைக்கு சாலைகளை சீரமைக்க முடியாது என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளமான பகுதிகளில் தற்காலிகமாக மண், ஜல்லிகளை கொட்டு சீரமைப்பு மேக் அப் செய்து வருகின்றனர். உடனே மழை பெய்து அந்த பகுதிகள் சேரும் சகதியுமாக மாறி மரணப்பள்ளங்களாக மாறி வருகின்றன என்பதுதான் கொடுமை.












Click it and Unblock the Notifications