For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பற்றி எரிந்து கொண்டிருக்கிறது தமிழகம்.. காவு கொடுக்கத் துணிகிறது தமிழக அரசு… வேல்முருகன் ஆவேசம்

குற்றுயிராய்த் தமிழகத்தைத் துடிக்க வைத்திருக்கும் மத்திய மோடி அரசுக்கே குற்றேவல் புரியும் அவலம்தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்று வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தங்களின் பொருளியல் குற்றப் பின்னணிக்கு விலையாக தமிழகத்தையே காவு கொடுக்கத் துணியும் கொடூரம் நடக்கிறது என்று தமிழகத்திற்கே கேடாகிப் போன ஆட்சியாளர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் இன்று பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. பிரச்சனைகள்! பிரச்சனைகள்! பட்டியலிட்டு மாளாது! ஆண்டுக்கணக்கில் தொடரும் பிரச்சனைகள்! அவ்வப்போது எழும் பிரச்சனைகள்! திடுதிப்பென்று முளைக்கும் பிரச்சனைகள்!

ஆனால் இந்தப் பிரச்சனைகளை ஆக்குபவர்கள் சரி; போக்குபவர்களே பிரச்சனையாகிப் போனதுதான் பிரச்சனையின் உச்சம். மாநில உரிமைகளை மத்திய அரசு மதிக்காதபோதுதான் அது பிரச்சனையாகிறது. அதிலும் மோடி அரசு மாநில உரிமைகளை மதிக்காதது மட்டுமல்ல; அவற்றைப் பறிப்பதிலேயே குறியாயிருக்கிறது.

வஞ்சகமான மோடி

வஞ்சகமான மோடி

வஞ்சகமே வடிவான மோடி அரசுக்கு தமிழகம் என்றாலே தகாத வார்த்தையாகப் படுவதில் வியப்பில்லை. என்றுமே தமிழகம் அதற்கு எட்டாக்கனி. அதனால் எட்டிக்கனியும்கூட. மோடியின் மனுதர்மக் கொள்கையைப் புறந்தள்ளும் ஒரே மாநிலம் தமிழகம். ஜனநாயகத்தைக் கொல்லுகின்ற அந்த சனாதனக் கொள்கையின் சதிகள், சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி மக்கள் பகுத்தறிவும் விழிப்புணர்வும் பெற வழிகாட்டும் மாநிலம் தமிழகம்.

வெறுப்பு

வெறுப்பு

இதுவே தமிழகத்தின் மேல் அச்சமும் வெறுப்பும் மோடிக்கு. அதனால் பகுத்தறிவுக்குப் பொருந்தாத காரியங்களை தமிழகத்தின் மேல் திணிக்கிறார். மனுதர்மம் சூத்திரர்களை நாலாந்தரத்தில் வைக்கிறது. அதாவது அடிமைகள், மேல்சாதியினருக்கு தொண்டூழியம் செய்யக் கடமைப்பட்டவர்கள் என்கிறது. இதையே தமிழர்களிடம் எதிர்பார்க்கிறார் மோடி.

கேடு

கேடு

இந்தக் கடைந்தெடுத்த பிற்போக்குத்தனத்தால் மோடி எவ்வளவுதான் டிஜிட்டல் அது இது என்று பேசினாலும் தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஒரு நவீன கால மனிதராகப் பார்க்கப்படவில்லை. அந்த ஆத்திரத்தில்தான் அடுக்கடுக்காக தமிழகத்திற்கு கேடு விளைவிக்கும் காரியங்களையே செய்கிறார். அந்தக் கெடுதல்களில் ஒன்றுதான் மருத்துவக் கல்வியை சுத்தமாகவே தமிழர்களுக்கு மறுத்துவிடுவது என்ற திட்டமாகும்.

படிப்பில் மண்

படிப்பில் மண்

இந்தத் திட்டப்படி முதலில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வினை (நீட்) கொண்டு வந்தார். இதன் மூலம் கிராமப்புற மாணவர்களின் கனவில் மண் அள்ளிப் போட்டார். ஆண்டுதோறும் 2500 மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பைக் கெடுத்தார்.

கபளீகரம்

கபளீகரம்

இதன் மூலம் பிற மாநில மாணவர்களே தமிழகத்தின் மருத்துவக் கல்லூரி இடங்களைக் கபளீகரம் செய்யும் சூழலை ஏற்படுத்தினார். இது தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் விரோதமான செயல் மட்டுமல்ல. மாநில உரிமையைப் பறிக்கும் செயலும்கூட. இதற்கு எதிராக தமிழகமே திரண்டு போராடிப் பார்த்தும் நீட்டை இன்னும் நிறுத்தவில்லை.

இடஒதுக்கீடு ரத்து

இடஒதுக்கீடு ரத்து

இது போதாதென்று இப்போது அரசு மருத்துவர்கள் பட்டமேற்படிப்புக்கும் தடை போடுகிறார். எம்எஸ், எம்டி, எம்சிஎச் போன்ற மேற்படிப்புகளில் சேர அவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு இருந்ததை ரத்து செய்தார். இதன் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு மேற்படிப்பு படித்த மருத்துவர்கள் இல்லாமல் போகும் நிலை உருவாக வாய்ப்புள்ளது. அப்படி மருத்துவர்கள் போடப்பட்டாலும் அவர்கள் பிற மாநிலத்தவர்களாகத்தான் இருப்பார்கள். தமிழறியாத அவர்களிடம் பாமரர்கள் மருத்துவம் பெறுவது எப்படி? கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கும்.

கிராமப்புற மாணவர்கள்

கிராமப்புற மாணவர்கள்

மேலும் கிராமப்புறங்களில் பணியாற்றவென்று மூன்றே ஆண்டு படிப்பில் தனி மருத்துவர்களை உருவாக்கும் திட்டமும் மேற்கொள்ளப்பட இருக்கிறதாம். அப்படியென்றால் கிராமத்தவர்களை மோடி அரசு எந்த அளவுக்குத் தாழ்வாகப் பார்க்கிறது என்ற உண்மை வெளிப்பட்டுவிட்டதல்லவா!

தனியார் வசம்

தனியார் வசம்

இதன் மூலம் தனியார் அதாவது கார்ப்பரேட் மருத்துவமனைகளை வளர்ப்பதும் அரசு மருத்துவமனைகளை ஒழித்துக்கட்டுவதுதான் மோடி அரசின் உள்நோக்கமாகும். ஆக தமிழர்கள் மருத்துவராகக் கூடாது; அவர்களுக்கு அரசு மருத்துவமனையும் இருக்கக் கூடாது; மருத்துவம் பார்ப்பதென்றால் தனியாரிடம்தான் செல்ல வேண்டும் என்றுதான் மோடி அரசு நினைப்பது தெரிகிறது.

தமிழக அரசு

தமிழக அரசு

முக்கியமான இந்தப் பிரச்சனையில் செயல்பட வேண்டிய தமிழக அரசு செயல்படாமல் இருப்பதை என்னென்று சொல்ல? நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக அரசு சட்ட மசோதா நிறைவேற்றியும் அதைச் சட்டமாக்க மோடி அரசை ஏன் வலியுறுத்த முடியவில்லை? இத்தனைக்கும் ஆளும் அதிமுகவுக்கு 50 எம்.பிக்கள் உள்ளனரே?

வாதிடவில்லை

வாதிடவில்லை

மருத்துவ பட்டமேற்படிப்பில் 50% இட ஒதுக்கீடு விவகாரத்திலும் தமிழக அரசு சார்பில் முன்பே நீதிமன்றத்தில் முறையாக வாதாடவில்லை. இப்போதும் பிரச்சனையை சரியாக அணுகவில்லை. மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் சொன்னதைத் தாண்டி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

நீதிமன்றம்

நீதிமன்றம்

50 % ஒதுக்கீடு ரத்துக்கு தடை கோரி அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் நீதிபதிகள் குலுவாடி ரமேஷ், டீக்காராமன் டிவிஷன் பெஞ்ச், உடனடியாக அதை விசாரிக்க மறுத்ததோடு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. வேண்டுமானால் கோடை விடுமுறையில் விசாரிக்கப்படும் என்று சொல்லிவிட்டது.

பொருளியல் குற்றம்

பொருளியல் குற்றம்

தமிழக ஆட்சியிலிருப்பவர்களுக்கு அவர்களின் சொந்தப் பிரச்சனையே பெரும் பிரச்சனையாயிருக்கிறது. இந்த நிலையில் மக்கள் பிரச்சனையை மக்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டுமே தவிர அரசை நம்பிப் பயனில்லை என்ற நிலையே தமிழகத்தில் உருவாகியிருக்கிறது. ஆட்சியிலிருப்பவர்களின் பொருளியல் குற்றப் பின்னணி காரணமாக மோடி அரசே அவர்களை ஆட்டிப் படைக்கிறது என்பதே தமிழக மக்கள் மத்தியில் நிலவும் பேச்சாக இருக்கிறது.

குற்றேவல் புரியும்..

குற்றேவல் புரியும்..

ஆக, குற்றுயிராய்த் தமிழகத்தைத் துடிக்க வைத்திருக்கும் மோடி அரசுக்கு குற்றேவல் புரியும் அவல நிலைக்கே தள்ளப்பட்டிருக்கிறார்கள் தமிழக ஆட்சியாளர்கள். இப்படிப்பட்டவர்கள் தங்களின் பொருளியல் குற்றப் பின்னணிக்கு விலையாக தமிழகத்தையே காவு கொடுக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? தமிழகத்திற்கே கேடாகிப்போன ஆட்சியாளர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையான தன் கண்டனத்தைத் தெரிவிக்கிறது என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

English summary
TVK leader Velmurugan has condemned TN government, for not taking proper step about NEET exam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X