நெல்லையில் மூதாட்டி கொலையில் திடீர் திருப்பம்.. ஆண் வேடமிட்டு மருமகளே கொன்றது அம்பலம்
நெல்லை: நெல்லையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை இரும்பு கம்பியால் தாக்கி தங்க சங்கிலி பறிக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக மருமகளே ஆண் வேடம் அணிந்து மாமியார் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது.
நெல்லை மாவட்டம், வடுகன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி சீதாராமலட்சுமி. திங்கள்கிழமை அதிகாலை வெளியே சென்ற சண்முகவேல் வீட்டுக்கு வந்த போது மனைவி சீதாராம லட்சுமி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சண்முகவேல், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது சீதாவின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலி திருடு போனது தெரியவந்தது.
படுகாயம்: இந்த நிலையில் படுகாயமடைந்த சீதா ராமலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சீதபற்பநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 5 பவுன் நகைக்காக இந்த கொள்ளையும் கொலையும் நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர். நகையை கொள்ளையடித்த போது சீதா சப்தமிட முயற்சித்திருப்பார்.
கொள்ளையர்கள்: இதனால் தான் எங்கே சிக்கிக் கொள்வோமோ என நினைத்து அந்த கொள்ளையர்கள் சீதாவை கொன்றிருப்பார்கள் என போலீஸார் தெரிவித்தனர். இதனிடையே சீதாவின் வீட்டருகே பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார் அதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஜெர்கின்: அந்த வீடியோவில் ஜெர்கின் அணிந்து ஆண் வேடமிட்ட பெண் ஒருவர் வீட்டில் நுழைந்தது தெளிவாக தெரியவந்தது. சீதாவின் குடும்பத்தினரை அழைத்து அந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் காட்டினர். அப்போது அவர்களும் அரண்டு போனார்கள். ஆயுதங்களுடன் ஆண் வேடத்தில் வந்தது வெளியாள் இல்லை என்றும் அவர் சீதாராம லட்சுமியின் மருமகள் மகாலட்சுமி என்பதும் தெரியவந்தது.

விசாரணை: மாமியார் இறந்ததை அடுத்து கண்ணீர் விட்டு நாடகமாடிய மகாலட்சுமியை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக் தகவல்கள் தெரியவந்தது. சண்முகவேல் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். கடந்த 2018 ஆம் ஆண்டு சண்முகவேலின் மகன் ராமசாமியுடன் மகாலட்சுமிக்கு திருமணம் நடந்தது.
மாமியார்: அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். திருமணம் முடிந்த நாள் முதல் வீட்டு வேலைகளை செய்வதில் மாமியார் மருமகள் இடையே தகராறு ஏற்பட்டு அவ்வப்போது இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. மாமியாரும் மருமகளும் அவ்வப்போது சண்டையிட்டுக் கொள்வதால் மனமுடைந்த சண்முகவேல் தனது வீட்டின் பின்புறத்தில் புதிதாக ஒரு வீட்டை கட்டி மகனையும் மருமகளையும் தங்க வைத்துள்ளார்.
மருமகள் : இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாமியார் மருமகள் இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. இந்த சண்டை வீதி வரை வந்து அனைவரும் வேடிக்கை பார்த்து பிறகு உறவினர்கள் வந்து தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து வீட்டுக்குள் அனுப்பி வைத்தனர். அப்போது மருமகள் மீது மாமியார் நடுரோட்டில் வைத்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தெரிகிறது.
மருமகள் ஆத்திரம்: இதனால் மகாலட்சுமி ஆத்திரமடைந்துள்ளார். தனது மாமியாரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று இரவு ஜெர்க்கின் அணிந்து ஆண் வேடமிட்டு வீட்டுக்குள் நுழைந்த மகாலட்சுமி ,அங்கு தூங்கிக் கொண்டிருந்த மாமியாரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். அப்போது மண்டை உடைந்து மாமியார் அதே இடத்தில் மயங்கியுள்ளார். இந்த கொலை நகைத் திருட்டுக்காக இருப்பது போல் செட்டப் செய்ய அவர் கழுத்திலிருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். பின்னர் மறுநாள் எதுவுமே தெரியாதது போல் மாமியாரை பார்த்துக் கொள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மகாலட்சுமியை கைது செய்த போலீஸார் அவரை மகளிர் சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள்.












Click it and Unblock the Notifications