For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல்.. என் கணவர் எனக்களித்த வாக்குறுதியை மீறிவிட்டார்: மீரா உதயகுமார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Udayakumar failed to keep his promise to me, says wife Meera
நாகர்கோவில்: அரசியலில் ஈடுபடமாட்டேன் என்று திருமணத்திற்கு முன்னர் எனது கணவர் உதயகுமார் எனக்களித்த வாக்குறுதியை மீறிவிட்டார். ஆனாலும் அவர் லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவார் என்று மீரா உதயகுமார் கூறியுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி சார்பில் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார். அவரது மனைவி மீரா நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:

எனது கணவர் உதயகுமார் அரசியல் அறிவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பல்வேறு வெளி நாடுகளில் வேலை பார்த்து உள்ளார். அவரது குடும்பம் அரசியல் பாரம்பரியம் மிக்கது. கணவரின் தந்தை பரமார்த்தலிங்கம் தி.மு.க.வின் நீண்டகால உறுப்பினர்.

எனவே நான் உதயகுமாரை திருமணம் செய்யும் முன்பு அவர் அரசியலில் ஈடுபடக் கூடாது என வாக்குறுதி கேட்டேன். அவரும் எனக்கு அந்த உறுதிமொழியை தந்ததால் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.

இருந்தாலும் உதயகுமாருக்கு மக்கள் பிரச்சினைகளில் எப்போதும் ஆர்வம் இருக்கும். அதன் காரணமாகவே கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதற்காக குடும்பத்தை மறந்து அங்கேயே தங்கவும் செய்தார். பல மாதங்கள் நடந்த இந்த போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

ஒரு நாடு இன்னொரு நாட்டின் மீது படையெடுத்து பார்த்திருக்கிறோம். ஆனால் எனது கணவர் மீது இந்த நாடு பல முனைகளிலும் நெருக்கடி கொடுத்து போரிட்டது. அதை முழு மூச்சாக அவர், எதிர்த்து நின்றார்.

இருந்தும் கோரிக்கைகளை வென்று எடுக்க இயலாத நிலையே காணப்பட்டது. அப்போதுதான் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி புரட்சியில் ஈடுபட்டு அரசியலில் குதித்து ஆட்சியிலும் கால் பதித்தது. அவர்களின் முயற்சியும் வேகமும் அந்த கட்சியின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது.

கூடங்குளம் போராட்டத்தை வென்றெடுக்க அரசியல் களம் தேவை என்பதாலும் சூழ்நிலை நெருக்கடியாலும் ஆம் ஆத்மி கட்சியில் இணையும் நிலை ஏற்பட்டது. இப்போது தேர்தலிலும் ஈடுபடும் நிலை உருவாகி விட்டது. இந்த அரசியல் களத்திலும் என் கணவர் வெற்றி பெறுவார். எந்த நெருக்கடிகளையும் சந்தித்து சாதித்து காட்டுவார் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

போராட்ட களத்தில்

நாகர்கோவில், கோட்டார், இசங்கன்விளையைச் சேர்ந்தவர் உதயகுமார். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பிரபலம் ஆனவர். இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் பல மாதங்களாக தங்கியிருந்து போராடி வருகிறார்.

லோக்சபா தேர்தலில் போட்டி

சமீபத்தில் இப்போராட்டக் குழுவினர் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தனர். இவர்களில் உதயகுமார் கன்னியாகுமரி லோக்சபா தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

இவருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட புஷ்பராயன் தூத்துக்குடியிலும், மைபா ஜேசுராஜ் நெல்லை தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

வேட்புமனு தாக்கல்

உதயகுமார் நாகர்கோவிலில் மார்ச் 29-ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்வார் என தெரிகிறது. அன்று ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அல்லது பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இவர்களில் யாராவது ஒருவர் நாகர்கோவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதயகுமார் கைது

உதயகுமார் மீது கூடங்குளம் போராட்டம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே அவர், நாகர்கோவிலுக்கு மனு தாக்கல் செய்ய வரும்போது கைது செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Udayakumar's wife Meera has said that her husband has failed to keep his promise he gave before their marriage. But she said this in a lighter vein.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X