For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜபக்சே, சிறிசேனவை போர்க்குற்றவாளிகளாக பிரகனடப்படுத்தி தண்டனை வழங்கிடுக... வேல்முருகன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக அந்நாட்டு விசாரணை ஆணையமே கூறியுள்ள நிலையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, தற்போதைய அதிபர் சிறிசேன உள்ளிட்டோரை போர்க் குற்றவாளிகளாக ஐ.நா. சபை பிரகடனம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த கொடுங்கோலன் மகிந்த ராஜபக்சேவால் 2013ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான விசாரணைக் குழு தன்னுடைய அறிக்கையை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

UN should declare Rajapaksa as a war criminal, says Velmurugan

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவால் இந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சிங்கள கொடுங்கோலன் ராஜபக்சேவால் நியமிக்க முழுவதும் இலங்கையின் உள்நாட்டு பிரதிநிதிகளைக் கொண்ட இந்த விசாரணை ஆணையமே, இலங்கை ராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டது உண்மைதான் என பிரகடனப்படுத்தியுள்ளது.

அத்துடன் சிங்கள ராணுவமும், இலங்கை அரசும் மறுத்து வருகிற, உலகின் மனசாட்சி உலுக்கி கதற வைத்த இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சியில் வெளியான ஆவணப்பட காட்சிகள் அத்தனையும் உண்மை என்கிறது இந்த விசாரணை ஆணையம்.

மேலும் இறுதி யுத்தத்தில் வெள்ளைக் கொடி ஏந்தி சர்வதேச சட்டங்களுக்கமைய சரணடைய வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதிகள் பா. நடேசன், புலித்தேவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை ஈவிரக்கமின்றி படுகொலை செய்தது குறித்து தனி விசாரணையே நடத்த வேண்டும் என்றும் விவரிக்கிறது இலங்கையின் உள்நாட்டு விசாரணை ஆணையம்.

178 பக்கங்களைக் கொண்ட இந்த விசாரணைக் குழுவின் அறிக்கையில் இலங்கை நீதித்துறையில் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க வேண்டும்; இலங்கை நீதித்துறை விசாரணையின் மீது நம்பகத்தன்மை இல்லை; இதனால் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட விசாரணை தேவை எனவும் வலியுறுத்தி உள்ளது.

இப்படி இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட ஒரு உள்நாட்டு விசாரணை ஆணையமே இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களை பகிரங்கமாக ஒப்புக் கொண்டு அது இலங்கை நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை என்பதை இந்த சிங்களவரின் அதாவது இலங்கையின் உள்நாட்டு விசாரணை ஆணையே ஒப்புக் கொண்டுள்ளது.

இதைவிட சர்வதேச சட்டங்களுக்கு வேறு என்னதான் சாட்சி தேவை? ஏற்கெனவே இலங்கை மீது சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற வழக்கு தொடரக் கோரி 10 லட்சம் தமிழர்கள் கையெழுத்திட்டு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்திடம் மனு அளித்துள்ளோம்.

தற்போது இது சிங்கள விசாரணை ஆணையமே சாட்சியாக நிற்கிறதே.. இப்போதாவது ராஜபக்சே, பொன்சேகா, சிறிசேன உள்ளிட்டோரை இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றவாளிகளாக ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் செய்து சர்வதேச நீதிமன்றத்தில் இனப்படுகொலை மற்றும் போர்க்குற்ற வழக்கு தொடர வேண்டும் என்று உலகத் தமிழினம் வேண்டி கேட்டுக் கொள்கிறது.

இலங்கையின் உள்நாட்டு விசாரணை ஆணைய அறிக்கையின் அடிப்படையில் இந்திய மத்தியப் பேரரசும் இனியேனும் இலங்கையில் நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் என்பதை ஏற்று அதற்கேற்ப இந்தியாவின் ஒரு அங்கமாக இருக்கும் தமிழ்நாடு என்ற மாநில மக்களின் உணர்வுகளை மதித்து, தமிழ்நாட்டு மக்களின் அரசு தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே; போர்க்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுமென்ற தீர்மானங்களை மதித்து அதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

English summary
TVK leader Velmurugan has urged the UN to declare Mahinda Rajapaksa as a War Criminal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X