For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆபாசமாகத் திட்டிய எஸ்.ஐ... சாலை மறியலில் குதித்த வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

விருதுநகர்: வாகன சோதனையின்போது ஒருமையில் பேசிய போலீசாரைக் கண்டித்து விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சாலை மறியலில் ஈடுபட்டார்.

நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விருதுநகர் தொகுதியில் கடந்த ஒரு வாரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று (31ஆம் தேதி) அருப்புக்கோட்டையில் தேர்தல் அலுவலகம் திறப்பதற்காக வைகோ விருதுநகரிலிருந்து புறப்பட்டார். அவருடன் கட்சியினர் மற்றும் தொண்டர் படையினரும் அடுத்தடுத்த வாகனங்களில் அவரை பின் தொடர்ந்து சென்றனர்.
விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் பெரியவள்ளிகுளம் அருகே காமராஜர் மணிமண்டபத்திடம் சென்றபோது அங்கு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் வைகோ சென்ற வாகனத்தின் பின்னால் வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தினர். இதைக் கவனித்த வைகோ தனது வாகனத்தையும் நிறுத்துமாறு கூறினார்.

Vaiko stages road roko near Aruppukottai

வாகன சோதனை

ம.தி.மு.க.வினர் வந்த வாகனத்தை எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சோதனையிட சென்றபோது, தாங்கள் வைகோவின் ஆதரவாளர்கள் என்றும், பிரசாரத்திற்காக அவரை பின்தொடர்ந்து செல்வதாகவும் கூறியுள்ளனர்.

ஒருமையில் பேசிய எஸ்.ஐ

அவர்களிடம், ''நீ யாராக இருந்தால் என்ன?, வைகோவாக இருந்தாலும் எனக்கென்ன?'' என்று எஸ்.ஐ.ராமகிருஷ்ணன் கூறினாராம். இதனால், ம.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், ம.தி.மு.க.வினரை எஸ்.ஐ. ராமகிருஷ்ணன் ஒருமையில் பேசியதாகக் கூறப்படுகிறது.

கோபமடைந்த வைகோ

இதனால் ஆத்திரமடைந்த வைகோ, தன்னையும் சோதனையிடுங்கள், தனது வண்டியையும் சோதனையிடுங்கள், எனது பெட்டிகளையும் சோதனையிடுங்கள் எனக்கூறிக்கொண்டே தனது வாகனத்திலிருந்த பெட்டிகளை போலீசாரிடம் திறந்துகாட்டியுள்ளார். இதையடுத்து, அந்த பெட்டிகளை சாலையின் நடுவில் வைத்து அதன் அருகிலேயே வைகோ சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். அவருடன் வந்த மாவட்டச் செயலாளர் ஆர்.எம்.சண்முகசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ. வரதராஜன் மற்றும் ம.தி.மு.க. தொண்டர்களும் மறியலில் ஈடுபட்டனர்.

வாடா போடா என்று பேசுவதா?

அப்போது, வைகோ, ''வாகன சோதனை நடத்தவேண்டுமென்றால் நடத்திக்கொள்ள வேண்டியதுதானே. அதைவிட்டுவிட்டு, வாகனத்தை நிறுத்தி இறங்குங்கடா, யாருடா நீங்க? என்றெல்லாம் ஒருமையில் பேசியது சரியல்ல. என் வாழ்க்கையில் இதுபோன்ற மோசமான வார்த்தைகளைப் பேசிய காவல்துறை அதிகாரிகளை இதுவரை நான் பார்த்ததில்லை.

முதல்வருக்கு ஒரு நியாயமா?

பிரச்னை செய்யவேண்டும் என்பதற்காக நான் சாலையில் உட்காரவில்லை. இது மக்களுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத்தான் உட்காந்திருக்கிறேன்'' என்றார். மேலும், போலீசாரைப் பார்த்து, ''முதல்வர் செல்லும்போது 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அப்போது தேர்தல் அதிகாரிகளெல்லாம் எங்கே போனார்கள்?'' எனக் கேள்வியெழுப்பினார்.

அதிகாரிகள் சமாதானம்

அப்போது, அங்குவந்த அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் உதயகுமார், துணை வட்டாட்சியர் பென்ராஜ் ஆகியோர் வைகோவுடன் பேசி அவரை சமாதானம் செய்து வைத்தனர். சாலையில் அமர்ந்து மறியல் செய்வதால் போக்குவரத்து தடைபட்டு பயணிகள் பாதிக்கப்படுவதாக எடுத்துக்கூறினர். அதையடுத்து, மறியல் போராட்டத்தை வைகோ கைவிட்டு எழுந்து, காவல்துறையின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
போக்குவரத்து பாதிப்பு

வைகோவின் மறியலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன், விருதுநகர் - அருப்புக்கோட்டை சாலையில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வைகோ மறியல் செய்வது குறித்த தகவல் அறிந்ததும், முன்னாள் எம்.பி. சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் உள்பட விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டையிலிருந்து ம.தி.மு.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்களையும் காவல்துறையினர் சமாதானம் செய்து வைத்து அனுப்பினர்.

English summary
MDMK chief Vaiko staged a road roko near Aruppumkottai condemning the slam of police SI
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X