For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருப்பூர் மருத்துவர் சரவணன் மர்ம மரணத்திற்கு உரிய விசாரணை தேவை: வைகோ வலியுறுத்தல்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மருத்துவர் சரவணன் மரணம் குறித்து உரிய விசாரணையை மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் மேற்கொள்ள தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருப்பூர் வெள்ளியங்காடு கோபால் நகரைச் சேர்ந்த சரவணன் தன்னுடைய படிப்பு ஆற்றலால் தகுதி அடிப்படையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் 2015 இல் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயர் மருத்துவப் படிப்புக்கு கடந்த ஆண்டே தேர்ச்சி பெற்றபோதும், பெத்தாலாஜி பிரிவு கிடைத்தது. அப்போது மூன்று மாத காலம் எய்ம்ஸ் மருத்துவமனையில் பயின்றிருக்கிறார்.

vaiko urged for proper investigation to death of a doctor Saravanan

ஆனால், பொது மருந்தியல் எம்.டி. வகுப்பில் சேர விரும்பி, மீண்டும் விண்ணப்பித்து 47 ஆவது ரேங்க் பெற்று, இந்த மாதம் ஜூலை ஒன்றாம் தேதி எம்.டி. படிப்பதற்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். கடந்த ஜூன் 28 ஆம் தேதி அன்று மதுரை மருத்துவக் கல்லூரியில் தன்னுடன் பயின்ற மாணவ நண்பர்கள் அவருக்கு பாராட்டு விருந்து அளித்துள்ளனர். மிகுந்த மகிழ்ச்சியோடுதான் டெல்லிக்குச் சென்றுள்ளார். எத்தகைய தீய பழக்கங்களும் இல்லாது மிகுந்த ஒழுக்கமும், நற்பண்புகளும் கொண்டவர் என்பதை அவருடன் பயின்ற மாணவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், ஜூலை 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மருத்துவர் சரவணன் தங்கியிருந்த அறையில் இறந்து கிடந்தார் என்ற செய்தி பேரிடியென அவரது பெற்றோர் தலையில் விழுந்தது. எம்.டி. படித்து முடித்து உயர்ந்த மருத்துவ சேவை செய்ய இருக்கிறான் தங்கள் மகன் என்று ஆயிரம் கனவுகளோடு இருந்த அவரது பெற்றோர் வாழ்வே நொறுங்கிப்போய்விட்டது.

அவர் வலது கை தமனி நரம்பில் தடித்த ஊசி மூலமாக உயிர் குடிக்கும் திரவம் செலுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. வலது கை பழக்கமுடைய சரவணன், வலது கையிலேயே ஊசியைச் செலுத்திக்கொண்டார் என்று கூறுவதை மருத்துவர்கள் ஏற்க மறுக்கின்றனர். அந்த அறையில் இரத்தத் துளிகள் சிந்தியிருந்ததாகத் தெரிகிறது.

ஊசியில் ஏற்றப்பட்ட மருந்தின் காலி பாட்டில் எதுவும் அந்த அறையில் கிடைக்கவில்லை. அறைக் கதவும் திறந்தே இருந்துள்ளது. இருவருக்குக் குறையாமல் சேர்ந்துதான் பலாத்காரமாக விஷ ஊசி போட்டு சரவணனை சாகடித்திருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எய்ம்ஸில் உயர் கல்வி பெற கோடிகளைக் கொட்டவும் பலர் காத்துள்ளனர். இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது எய்ம்ஸில் எம்.டி. படிப்பில் சேர இறுதி கலந்தாய்வு வருகிற 25 ஆம் தேதிதான் நடைபெறுகிறது. சரவணன் உயிரோடு இல்லையேல், அதனால் ஏற்படும் காலி இடம் வேறு ஒருவருக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

அவரது நரம்பில் செலுத்தப்பட்ட மருந்து தீவிர சிகிச்சை பிரிவில்தான் கிடைக்குமாம். இந்நிலையில் எய்ம்ஸ் கல்வி நிறுவனம் அவரது மரணத்தை தற்கொலை என்று அவசரமாக அறிவித்திருப்பது பல்வேறு ஐயங்களை மருத்துவர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த தகுதியும் திறமையும் வாய்ந்த டாக்டர் சரவணன் அந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி ஆவார். மருத்துவர் சரவணன் மரணம் குறித்து உரிய விசாரணையை மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் மேற்கொள்ள தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
The need for proper investigation into the mysterious death of a doctor Saravanan,says mdmk chief Vaiko
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X