For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கம்யூனிஸ்டுகள் திமுக கூட்டணிக்கு வர வேண்டும்.. அழைப்பது கி.வீரமணி.. கி.வீரமணி.. கி.வீரமணி!

Google Oneindia Tamil News

Veeramani invites left to come into DMK alliance
சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய இரு கம்யூனிஸ்டுக்கட்சிகளும் திமுக தலைமையிலான அணியில் இடம் பெறுவதுபற்றி சிந்திக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

16வது லோக்சபா தேர்தலைச் சந்திக்கும் வகையில் தமிழக கட்சிகள் கூட்டணியை இறுதி செய்து வருகின்|றன. அந்தவகையில் .அ.தி.மு.க. கட்சியுடன் கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட மனக்கசப்பால் கூட்டணியை விட்டு வெளியேறின.

அதன் தொடர்ச்சியாக லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட போவதாக அக்கட்சிகள் கூட்டாக அறிவித்தன. விரும்பினால் இடதுசாரிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் இடது சாரிகள் திமுக கூட்டணியில் இணைவது குறித்து சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-

அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து, இடதுசாரிகளான இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்டு) இந்திய கம்யூனிஸ்டு கட்சி, பார்வோடு பிளாக் ஆகியவை வெளியேறி விட்டன; நேற்று (6.3.2014) இரு கட்சித் தலைமைகளின் ஒப்புதலோடு அறிவித்து விட்டனர்.

அகில இந்தியாவிற்கு மேல், அகில உலகக் கட்சிகளாக இருக்கின்ற இடதுசாரிக் கட்சிகளான இரு கம்யூனிஸ்டு கட்சிகளும், அதிமுக கூட்டணியிலிருந்து விலகியதன் மூலம், அவர்தம் சுயமரியாதை வெகுவாகக் காப்பாற்றப்பட்டுள்ளது.

கூட்டணி என்றால் பொருள் என்ன?

கூட்டணி என்றால் ஒரு டீம் போன்றது. அதில் சேர்ந்தபிறகு ‘நான்' என்பதற்கு இடமின்றி ‘நாம்' ‘கீமீ' என்ற பொதுமைக்கே இடமும், பெருமையும் உண்டு.

அதிமுக கூட்டணி என்பதைவிட ‘தொகுதி உடன்பாடு' என்பதே சரியான சொல்லாக்கமாக இருக்க முடியும்; என்றாலும் கூட்டணிக் கட்சிகளை அதற்குத் தலைமை தாங்கும் தலைமை ‘பெரியண்ணன்' மனப்பான்மையோடு கூட இல்லை- எஜமானத்துவ மனோ நிலையில் அலட்சியப்படுத்தி நடத்திய முறை கண்டு இடதுசாரிகளும் தாங்க முடியாத, எல்லை தாண்டிய சகிப்புத் தன்மையோடுதான் பொறுத்துக் கொண்டு இது நாள் வரை இருந்தனர்!

அகில இந்திய கட்சிகளான அவ்விரு கட்சிகளின் தலைவர்களையே காக்க வைத்து (அவர்களுக்கும்கூட சகிப்புத் தன்மையைப் போதிப்பதுபோல) - பிறகு சந்திப்பு நடத்தி உறுதி செய்யப்பட்டு, போட்டோவுக்கு கைகோர்க்கப்பட்ட பிறகு, அவர்களுக்குரிய மரியாதையை அத்தலைமை வழங்காதது மட்டுமின்றி, பேச்சு நடந்து கொண்டிருக்கும்போதே - புதுவை உட்பட 40 தொகுதிகளுக்கும் தமது கட்சியின் வேட்பாளர்களையே அனைத்துத் தொகுதிகளுக்கும் அறிவித்து, கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டு விட்டு, பிரச்சாரத்தை ஆரம்பிக்கச் சொல்லி விட்டது அண்ணா பெயரில் உள்ள கட்சி!

15 நாள்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை என்று சி.பி.எம். செயலாளர் தோழர் ஜி. இராமகிருஷ்ணன் கூறினார்; ‘‘பாண்டவர்கள் பொறுத்து கடைசியாகக் கேட்ட கதைபோல நாங்கள் பொறுத்திருந்தோம்'' என்றார் தோழர் தா. பாண்டியன் அவர்கள்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதா?

இடம் எத்தனை தருகிறார்கள் என்பதைவிட, அவர்கள் எவ்வளவு அலட்சியமாக நடத்தப்பட்டார்கள் என்பது தேசிய கட்சிகளுக்கு அவமானம் ஒருபுறம் என்றாலும், அவர்கள் கேட்ட தொகுதிகளையே குறிவைத்து அதிமுக பொதுச் செயலாளர் அத்தொகுதியில் விரைந்து தேர்தல் பிரச்சாரம் நடத்தி, அதன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்ற கொடுமையும் ஆகும்.

கொடுக்க முடியாத போதோ அல்லது அவர்கள் கேட்டதைவிட குறைத்து தொகுதிகளைத் தரும் போதோகூட, அவர்களை அழைத்து கவுரவமாக தங்கள் சூழ்நிலைகளை அவர்களுக்கு விளக்கி, மிகுந்த நயத்தக்க நாகரிகத்துடன் அவர்களை சம ஈவில் நடத்துவது ஒரு தலைமைக்கு முக்கியமானது அல்லவா! தலைவர் கலைஞர் அப்படித்தான் செய்வார்.

மென்மையான அணுகுமுறைகள்

ஆனால் நமது தோழர்கள் அ.தி.மு.க. தலைமையால் அவ்வாறு நடத்தப்படாமல் இறுதிவரை அவர்களை அழைத்துக்கூட காரண காரிய விளக்கத்துடன் தக்க விளக்கத்தை அளிக்கவில்லையே! ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக அவர்கள், இவர்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து வந்துள்ளனர். சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம், மதுரவாயல் திட்டம் போன்ற திட்டங்கள், மக்கள் நலப் பணியாளர்கள் வயிற்றில் அடித்து சுமார் 100 பேர்களுக்கு மேல் அந்த ஏழை - எளிய குடும்பங்களில் வறுமை, சாவுக்கு ஆளான பரிதாபங்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் காட்டிய பிடிவாதம், இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளிய நிலைப்பாடு - சமூக நீதி சரிவுகள் பற்றி சட்ட மன்றத்தில்கூட மவுனம் காத்த அல்லது மென்மை காட்டிய பண்பு இவைகளுக்கெல்லாம் அ.தி.மு.க. கூட்டணி காட்டும் மரியாதை இவ்வளவு தானா என்று மனம் குமுறி இறுதியில் முன்பே எடுத்திருக்க வேண்டிய முடிவினை இப்போது காலம் தந்த பாடத்தால் - காலந் தாழ்ந்தாவது எடுத்துள்ளார்கள். ஏற்கெனவே இதுபோன்ற அலட்சியத்தால் மனிதநேயக் கட்சி, புதிய தமிழகம் வெளியேறின!

மார்க்சியம் மலிவான சரக்கல்ல!

மார்க்சியம் அவ்வளவு மலிவான சரக்கல்ல; சுயமரியாதை அதைவிட மிக இன்றியமையாத எல்லோருக்குமான பொதுச் சொத்து - மனித மாண்பு!

அய்ந்து ஆண்டுகள் பல வகைகளில் அஇஅதிமுகவுக்கு மிகப் பெரிய அளவில் உறுதுணையாக இருந்தார்கள் வேறு வழியின்றி வெளியேறி உள்ளார்கள்; பொதுவானவர்களும், அக்கொள்கையை நேசிக்கும் தோழமை உணர்வாளர்களான நம்மைப் போன்றவர்களும் வரவேற்க வேண்டிய முடிவு அவர்கள் இப்பொழுது எடுத்துள்ள முடிவு.

தனித்துப் போட்டியிடுவது உகந்ததல்ல!

அடுத்த கட்டமாக, அவர்கள் இருவரும் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவு, அவர்களது கட்சியின் முழு உரிமை என்ற போதிலும், இன்றுள்ள நாட்டின் அரசியல் சூழலில் - மதவெறி, ஜாதி வெறி, முதலாளித்துவ "பன்னாட்டுப் பகாசுரத் திமிங்கலங்களின்'' பணச் செருக்கின பகிரங்கத் திருவிளையாடல்கள் தேர்தல் களத்தில் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில்,

மதச் சார்பற்ற லட்சியம், சமூகநீதி, சமதர்மம், பொதுத் துறை நிறுவனங்களின் பலத்தைப் பெருக்கி. ஏழை - எளிய வறுமைக் கோட்டு மக்களுக்கு வாழ்வில் புதுயுகத்தை உருவாக்குதல் போன்ற கண்ணோட்டத்தில் மத்தியில் அமையவிருக்கும் ஆட்சியை அமைக்க தங்கள் பங்களிப்பைச் செய்யும் வண்ணம் அவர்களது முடிவு அமைய வேண்டும் என்பதே முக்கியமாகும்!

யார் வரக் கூடாது என்பதே முக்கியம்!

இத்தேர்தலைப் பொறுத்தவரை, யார் வர வேண்டுமென்பதைவிட மத்தியில் ஆட்சியில் யார் வரக் கூடாது என்பதே முக்கியம்; தேர்தலுக்கு முன்னே ஒரு நிலைப்பாடு; பின்னே வேறு ஒரு நேர் எதிரான நிலைப்பாடு என்று இருப்பவர்களை ஒதுக்கி, பின்னாலும் ஒரு ஜனநாயக முற்போக்கு மதச் சார்பற்ற அரசு அமைவதுதானே காலத்தின் தேவை - ஏழை, எளிய ஒடுக்கப்பட்ட மக்களின் தாகம்?

கொள்கை ரீதியான உறவு - திமுக கூட்டணியே!

இதற்கு உதவிடும் வகையில் இடதுசாரித் தோழர்கள் சங்கடப்படாமல், கொள்கை ரீதியாக மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமூகநீதி இவைகளை முன்னிறுத்தும் அணி தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியோடு இருப்பதுதான், கொள்கை ரீதியான பொருத்தமாகும்; அதுபற்றி யோசிக்க வேண்டும்.

காலம் கடந்து விடவில்லை....

இன்னமும் காலம் கடந்துவிடவில்லை. இது அவர்களுக்குக் கொள்கை ரீதியான தோழமை உணர்வுள்ள வருண எதிர்ப்பு, வர்க்கப் போராட்டம் இரண்டிலும் ஒத்த கருத்துள்ள இயக்கமான திராவிடர் கழகத்தின் தனிப்பட்ட கருத்து!

நம்மை (திராவிடர் கழகத்தை)ப் பொறுத்தவரை கூட்டணியில் இடம் பெறாத ஆனால் அதே நேரத்தில் - கொள்கை லட்சிய உணர்வுகளை முன்னிறுத்தி, திமுக தலைமையிலான மதச் சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை வலுவாக ஆதரிக்கின்ற ஒரு முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட முக்கிய சமுதாய அமைப்பு என்ற நிலையில் கொள்கை உணர்வால் இந்த யோசனையை அவர்களுக்கு மிகுந்த தோழமையுடன் முன் வைக்கிறோம். தோழர்கள் சிந்திப்பார்களாக' என இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
The Dravidar Kazhagam leader Veermani asks the left parties to come into the DMK headed, democratic progressive alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X