For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வரலாறு கண்டிக்கும், வருங்காலம் தண்டிக்கும்!

Google Oneindia Tamil News

Vikatan editorial slams TN govt for not accepting OPS as CM
சென்னை: தமிழக முதல்வராக ஓ.பன்னீர் செல்வத்தை தமிழக அரசு ஏற்க மறுப்பதாக விகடன் தலையங்கம் கூறியுள்ளது.

இதுதொடர்பாக விகடன் எழுதியுள்ள தலையங்கம்...

தமிழ்நாட்டின் முதலமைச்சர் யார்? ஓ.பன்னீர்செல்வம் என்பது சரியான விடைதான். ஆனால் இதை ஏற்க மறுக்கிறது தமிழக அரசு. சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிமன்றம் ஜெயலலிதாவைத் தண்டித்து, முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகும், இன்னொருவர் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிறகும்... 'இப்போதும் ஜெயலலிதாதான் தமிழ்நாட்டின் முதலமைச்சர்' என்பதுபோன்ற பிம்பம் இங்கே பராமரிக்கப்படுகிறது. அதிலும் தமிழக அரசே இதைச் செய்வது, நீதித் துறையை எள்ளி நகையாடும் கிண்டல்; ஜனநாயகத்தை அப்பட்டமாக கேலிக்கூத்து ஆக்கும் அபத்தம்; அசிங்கம்.

'அம்மா' குடிநீர், 'அம்மா' உணவகம்... என அரசின் திட்டங்களிலும் அறிவிப்புகளிலும் ஜெயலலிதாவின் புகைப்படம்தான் நீடிக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் மறந்தும், மருந்துக்குக்கூட எங்கேயும் இல்லை. ஜெயலலிதாவைக் 'குற்றவாளி' என நீதிபதி அறிவித்த அடுத்த கணமே, அவரது வாகனத்தில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது எனில், அதன் பொருள் என்ன? சட்டப்படி குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் இத்தகைய மாண்புகளை வகிக்கும், அடையாளங்களைத் தாங்கும் தகுதியை இழக்கிறார் என்றுதானே பொருள். தேசியக் கொடிக்குப் பொருந்தும் நீதிமன்ற உத்தரவு, இந்தத் தேசத்தின் கீழ் இருக்கும் தமிழக அரசுக்குப் பொருந்தாதா?

முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்ட உடனேயே ஜெயலலிதாவை, 'மக்களின் முதல்வர்' என அழைக்கிறார்கள். எனில், ஓ.பன்னீர்செல்வம் என்பவர் யார்? 'ஆவணங்களில்' மட்டும் முதலமைச்சரா? முதலமைச்சர் என்ற பதவி மதிப்பும் மரியாதையும் மாண்புகளும் உடையது. ஏழு கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களை ஆட்சி செலுத்தும் அதிகாரம் அந்த நாற்காலிக்கு உண்டு. ஆனால் இப்போதைய நமது முதலமைச்சருக்கு, 'முதலமைச்சர் அறை'க்குச் செல்லக்கூட அதிகாரம் இல்லை அல்லது துணிவு இல்லை. தங்கள் துறை சார்ந்த வேலைகளைச் செய்வதையே பெரும் குற்றம் செய்வதைப்போல எண்ணி ஒதுங்கி ஓடி ஒளிகின்றனர் அமைச்சர் பெருமக்கள்.

தாடி வளர்த்தும், மொட்டை அடித்தும் தங்களது தலைமைக்கு விசுவாசத்தைக் காட்டுவதில் மட்டுமே போட்டிபோடும் அமைச்சர்கள், தாங்கள் 'தமிழக மக்களுக்குத்தான் அமைச்சராக இருக்கிறோம்' என்பதை ஒரு கணம் நினைவூட்டிக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா தண்டிக்கப்பட்டார் என்பதற்காக, அரசு நிர்வாகத்தை முடக்கி மக்களைத் தண்டிப்பது எந்தவகையிலும் நியாயம் இல்லை. மக்களிடம் இழந்துவிட்ட மதிப்பை மீட்க, அமைச்சர்கள் இருமடங்கு சுறுசுறுப்புடன் இயங்க வேண்டிய நேரம் இது!

இல்லையெனில், வரலாறு கண்டிக்கும்; வருங்காலம் தண்டிக்கும்!

English summary
Vikatan has lashed the TN govt for not accepting O Pannerselvam as the chief minister of the state.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X