For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜல்லிக்கட்டை நீதிபதிகள் எள்ளி நகையாடுவது சரியா?

By Shankar
Google Oneindia Tamil News

ஜல்லிக்கட்டு சரியா தவறா,வேண்டுமா வேண்டாமா என்பது ஒரு புறம் இருக்கட்டும். கம்ப்யூட்டரில் விளையாடுங்கள், சிங்கத்தை அடக்குங்கள் என்பதை போன்ற நக்கலான வார்த்தைகளை எப்படிப் பயன்படுத்த முடிகிறது.

தடை கேட்டவர்களும் மனித பாதுகாப்பைத் தாண்டி மாடுகள் மிரளுகிறது என்றே வாதிடுகிறார்கள். பூனை பால் குடிக்கும், நாய் காவல் காக்கும், மாடு வண்டி இழுக்கும் என்பதுதான் நாம் பாடம் படித்தது கூட.

We must play Tamil's heritage sports Jallikkattu on Pongal day

காலை முதல் மாலை வரை வயலில் ஏர் உழுதது மாடுகள்தான். 500,600 அடி ஆழமுள்ள கினற்றில் இருந்து தண்ணீரை வயலுக்கு பாய்ச்ச ஏற்றம் இறைத்தது மாடுகள் தான். விளைந்த பயிர்களை விடிய விடிய தாம்பு கட்டியதும் மாடுகள்தான். பல மைல் தாண்டி வண்டி நிறைய மூட்டைகளை கொண்டு சென்றதும் மாடுகள் தான்.

இதை எல்லாம் தவிர்த்திருந்தால் மனித இனமே அழிந்திருக்கும். சரி அவையெல்லாம் பயனுள்ள தேவை. மாட்டை துரத்திப் பிடிப்பதால் என்ன பயன் என கேட்பர்களின் வாதப்படியே பார்த்தாலும் தீபாவளியின் போது வெடிக்கப்படும் பட்டசுகளால் அத்தனை பறவைகளும் அல்லோகலப்படுகிறதே...நம் வீட்டு நாய்களும் பூனைகளும் கூட பயந்து வீட்டுக்குள் முடங்குகிறதே... காற்றும் ஒலியும் மாசாகி நாசமாகிறதே

அதைத் தடுக்க முடியுமா இந்த நீதிமன்றங்களால்...கம்ப்யூட்டரில் வெடித்து விளையாடுங்கள் என்று சொல்லமுடியுமா? வெடிகளைப் பற்ற வைத்து தூக்கி எறிவதில் என்ன வீரமிருக்கிறது... உங்கள் சட்டைக்குள் போட்டுக்கொள்ளுங்கள் என்று நக்கலடிக்க முடியுமா?

முடியாது. ஏனென்றால் அது மத நம்பிக்கை.

இன்றைக்கும் தலையில் தேங்காய் உடைப்பதும். நாக்கிலும் உதட்டிலும் அலகு குத்துவதும்,குழந்தைகளைக் கூட வேண்டுதல் என்கிற பெயரில் நெருப்பு குண்டத்துக்குள் இறக்கும் அவலமும் நடக்கிறதே... எந்த மனித உரிமை அமைப்பாவது, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பாவது தடுக்க முடியுமா? முடியாது.ஏனென்றால் அது மத நம்பிக்கை.

பெண்களும் குழந்தைகளும் மாணவர்களும் நடக்கிற சாலையில் நிர்வாணமாக சாமியார்கள் திரிந்தார்களே... எந்த பெண்கள் அமைப்பாவது தடுக்க முடிந்ததா? முடியாது, ஏனென்றால் அது மத நம்பிக்கை.

மத நம்பிக்கை என்கிற பெயரில் எத்தனை அசிங்கங்கள் நடந்தாலும் மண்டியிட்டு கிடக்கும் இவர்கள், எந்த மத அடையாளமுமில்லாமல், எந்த மூட நம்பிக்கையுமில்லாமல் உலகில் கொண்டாடப்படும் ஒரே பண்டிகையான பொங்கலையும் அது சார்ந்த நிகழ்வுகளையும் எப்படி வேண்டுமானாலும் பந்தாட முடிகிறது.

மனிதனுக்கோ, மாட்டிற்கோ ஏற்படும் காயங்களும் உயிரிழப்புகளும் கட்டாயம் தடுத்தே ஆக வேண்டிய ஒன்று. உயிரின் மதிப்பு இழந்து வாடும் குடும்பங்களுக்குத்தான் தெரியும். ஆனால் ஜல்லிக்கட்டைப் பாதுகாப்பாக நடத்துகிறோம் என்றாலும் சட்டையே செய்வதில்லை.

வெளிநாட்டு மதங்களுக்கும், வடநாட்டு மதங்களுக்கும் தொடர்பில்லாத தமிழ் இனத்தின் ஒரே திருவிழா. அந்த ஒரே காரணத்தால்தான் எள்ளி நகையாடப்படுகிறது. நம் இன அடையாளங்களை மீட்டெடுத்து பாதுகாப்புடன் கொண்டாடி மகிழ்வோம்!

- இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார்

English summary
Director Sangagiri Rajkumar urges that Tamils must play their heritage sports Jallikkattu on Pongal day this year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X