For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடிநீர் பிரச்சினை: நான் அப்பவே சொன்னேன், யாருமே கவலைப்படலை... கருணாநிதி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் 2003ம் ஆண்டு ஏற்பட்டதைப் போல குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்கள் காலி குடங்களுடன் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்து விட்டது. குடிநீர் பிரச்சினை வரும் என்று பிப்ரவரியிலேயே எச்சரிக்கை விடுத்தேன், யாரும் கவலைப்படவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

தி.மு.க ஆட்சியில் 2008- 2009ஆம் ஆண்டில் 289.88 கோடி ரூபாய்ச் செலவில் 50 நகர்ப்புறக் குடிநீர்த் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 2012- 2013ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் 15.77 கோடி ரூபாய்ச் செலவில் 7 நகர்ப்புறக் குடிநீர்த் திட்டங்கள் தான் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குடிநீர் தட்டுப்பாடு

குடிநீர் தட்டுப்பாடு

கிராம அளவில் உள்ள திட்டங்கள் என்று பார்த்தால் கூட, கிராமப் புற மக்களுக்குக் குறைந்தது நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு 40 லிட்டர் தண்ணீர் கொடுக்கப்பட வேண்டும். தமிழகத்திலே உள்ள மொத்தம் 98,179 குடியிருப்புகளில், 40 லிட்டர் அளவுக்கு தண்ணீர் கொடுக்கப்படுவது 76,704 குடியிருப்புகளுக்கு மட்டுமே! மீதமுள்ள 21,475 குடியிருப்புகளுக்குப் போதுமான அளவுக்கு குடிதண்ணீர் வழங்கப்படவில்லை.

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

இந்த விவரங்களை நான் கூறவில்லை. தமிழக அரசின் புள்ளிவிவரத்துறை தயாரித்து கொடுத்துள்ள 2014ஆம் ஆண்டுக்கான புத்தகத்திலே காணப்படும் விவரங்கள் தான் இவை. இது ஒரு புறம் இருக்க; வரும் கோடையில் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படப் போகும் அபாயம் பற்றி அடிக்கடி நாளேடுகள் சுட்டிக்காட்டி வருகின்றன.

குடிநீர் சிக்கனம்

குடிநீர் சிக்கனம்

அந்தத் துறையின் அமைச்சர் அதிகாரிகளை அழைத்துப் பேசி குடிநீர்ப் பற்றாக்குறை பற்றிய உண்மைகளைத் தெரிந்து கொண்ட பிறகு, "குடிநீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துங்கள்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தற்போது வேண்டுகோள் விடுக்கும் அமைச்சர் இத்தனை நாட்கள் எங்கே விடுப்பில் போய் இருந்தார்?

ஏரிகளின் நீர் இருப்பு

ஏரிகளின் நீர் இருப்பு

சென்னையில், 2003ல் இருந்த குடிநீர்ப் பிரச்சினை தற்போது எழுந்துள்ளதாகவும், முடிந்த அளவு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முயல்வதாகவும் சென்னை குடிநீர் வாரியமே குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது. சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் "சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்து விட்டது. தற்போதைய இருப்பு மொத்த கொள்ளளவில் 10 சதவிகிதம் தான்" என்று தெரிவித்துள்ளனர். இதிலிருந்தே குடிநீர்ப் பிரச்சினை எவ்வளவு பெரிதாக எழுந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

தண்ணீருக்கு சிக்கல்

தண்ணீருக்கு சிக்கல்

சென்னை குடிநீர் வாரியம் முன்பு 83 கோடி லிட்டர் குடிநீரை வினியோகித்தது. ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக 55 கோடி லிட்டர் குடிநீர் தான் நகர் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கும் சிக்கல் வந்து விட்டது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் பல பகுதிகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது. தாய்மார்கள் காலிக் குடங்களுடன் குடிநீருக்காக அலையும் அவல நிலை தான் தற்போது எங்கும் நிறைந்துள்ளது.

தி.மு.க ஆட்சியில் நெம்மேலியில் தொடங்கப்பட்ட கடல்நீரைக் குடி நீராக்கும் நிலையம் தற்போது செயல் பாட்டில் உள்ளது. ஆனால் அதற்கு அருகே, அ.தி.மு.க. ஆட்சியில் 2013இல் அறிவிக்கப்பட்ட கடல்நீரைக் குடி நீராக்கும் இரண்டு நிலையங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை. மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்ட நிலையிலேயே தொங்கலில் உள்ளது.

நீர் இருப்பு கவலைக்கிடம்

நீர் இருப்பு கவலைக்கிடம்

சென்னையின் நீராதாரமான ஏரிகளில் நீர் இருப்பு கவலைக்கிடமாக உள்ளது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதில் சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டு விட்டது. வீராணம் ஏரியிலும் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் தான் உள்ளது. தற்போது அங்கிருந்து தான் சென்னைக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

கிருஷ்ண நீர் வரத்து

கிருஷ்ண நீர் வரத்து

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவதும் நின்று விட்டதால், பூண்டி ஏரியின் நீர் மட்டம் 52 மில்லியன் கன அடியாகக் குறைந்து விட்டது.குடிநீரை அதிக விலை கொடுத்துப் பொது மக்கள் வாங்குகிறார்கள்.

ஓட்டலுக்கு விற்பனை

ஓட்டலுக்கு விற்பனை

வளசரவாக்கம் பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ஆறு ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் சென்னை நகரில், தியாகராய நகர் பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சிறிதளவு கிடைக்கும் குடிநீர்த் தொட்டித் தண்ணீரும் ஓட்டலுக்கு விற்கப்படுவதாகவும் செய்தி வந்துள்ளது.

சுகாதாரமற்ற குடிநீர்

சுகாதாரமற்ற குடிநீர்

பல்லாவரம் நகராட்சிப் பகுதிகளில் தேவையான அளவு குடிநீர் கிடைக்காததால், 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கிடைக்கிறதாம். கடந்த சில தினங்களாக தொடரும், சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தால், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டையில் வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது.

கடும் தட்டுப்பாடு

கடும் தட்டுப்பாடு

புளியந்தோப்புப் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறதென்று கூறி, குடிநீர் வாரிய அலுவலகத்தையே பொது மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் குடிநீர்த் தட்டுப்பாட்டின் விளைவுகள் பற்றித் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அப்போதே எச்சரித்தேன்

அப்போதே எச்சரித்தேன்

இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட யாருக்கும் நேரமில்லை. குடிநீர்த் தட்டுப்பாடு வரக் கூடுமென்று நான் பிப்ரவரி மாதத்திலேயே எச்சரித்த போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தக் குடிநீர்த் தட்டுப்பாடு ஓரளவாவது தடுக்கப்பட்டிருக்கலாம் அல்லவா?. தாய்மார்களைக் கவலைப்பட வைக்கும் குடிநீர்ப் பிரச்சினை பற்றியா எங்களுக்கு அக்கறை என்று கேட்கின்ற ஆட்சியாகத் தான் இன்றைய ஆட்சி காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறது என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
DMK president Karunanidhi has asked the govt what are the actions taken up to short out the water shortage issue in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X