10 ரூபாய் தரேன்.. ஊட்டிக்கு காந்தி வந்தாரா? மகாத்மா அப்படி கேட்டதுமே சிலிர்த்தெழுந்த நீலகிரி.. சபாஷ்
ஊட்டி: 1934ம் ஆண்டு, ஜனவரி 31 - அன்றைய தினம் இதமான குளிர்.. முழு சீசன் கிடையாது.. இருந்தாலும் குளிருக்கு பஞ்சமில்லை.. ஜில் ஜில்லென்று பனிக் கம்பளம் போர்த்தி குளுமையாக காணப்பட்டால் மலைகளின் ராணியான ஊட்டி. அன்று நடந்ததுதான் இந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள்.
1934-ஆம் ஆண்டை, நீலமலை மக்கள் மறக்கவே மாட்டார்கள்.. குறிப்பாக அந்தக் காலத்து தாத்தாக்களும், பாட்டிகளும் இந்த வருடத்தை மறக்க முடியாது.. காரணம், தேசப்பிதா மகாத்மா காந்தி அந்த வருடம்தான் ஊட்டிக்கு வருகை தந்திருந்தார். ஒரு நாள் இரண்டு நாள் இல்லை.. ஜனவரி 31ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை அவர் நீலகிரியிலேயே தங்கியிருந்திருக்கிறார்.

மகாத்மா காந்தி: காந்தி ஊட்டிக்கு வந்திருந்தாரா? அதுவும் அந்தக் குளிரை அவர் எப்படி தாங்கியிருப்பார்? அவர் எப்போதும் மேலாடை அணிவது இல்லையே? அந்தக் குளிரை காந்தி தாத்தா தாங்கிக் கொண்டாரா? என்ற சுவாரஸ்யமான சந்தேகங்கள்தான் நம்ம தலைமுறைக்கு இப்போது நிச்சயம் எழும். ஆனால், மகாத்மாவின் அந்த பயணமே படு சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது என்பதுதான் இதை விட ஹேப்பியான விஷயம்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஒரு மையம் உள்ளது. அதாவது நீலகிரி மாவட்டம் தொடர்பான அனைத்து தகவல்களையும் இந்த மையத்தில் ஆவணப்படுத்தி வைத்துள்ளனர்.
ஆவணங்கள்: கிட்டத்தட்ட மொத்த நீலகிரியின் வரலாறும் இந்த மையத்தின் ஆவணங்களில் பொதிந்து கிடக்கிறது.. இங்குதான், மகாத்மா காந்தி நீலகிரிக்கு வந்த சென்ற விவரத்தை இங்கு அழகாக ஆவணப்படுத்தி வைத்துள்ளனர். படிக்கவே ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கிறது. அதிலிருந்துதான் நம்ம காந்தி தாத்தா கதையை இப்போது தூக்கி வந்திருக்கிறோம் - இன்றைய இளம் தலைமுறைக்காகவே!
நம்முடைய "ஒன் இந்தியா" தமிழுக்கு தந்து உதவிய, நீலகிரி டாக்குமென்டேஷன் சென்டர் (Nilgiri Documentation Centre) திரு. வேணுகோபால் தர்மலிங்கம் அவர்களுக்கு நாம் எவ்வளவு நன்றிகளை சொன்னாலும் போதாது..
சுதந்திர போராட்டம்: மகாத்மா காந்தி நீலகிரிக்கு 1934ம் ஆண்டு ஜனவரி 31ம்தேதி வந்து சேர்ந்தார். பிறகு அங்கு பிப்ரவரி 4ம் தேதி வரை தங்கியிருந்திருக்கிறார். அவர் இங்கு வந்த பிறகுதான் நீலகிரியில் சுதந்திரப் போராட்டம் வேகம் பிடித்ததாம். அதுவரை மந்தமாக கிடந்த மக்கள் எல்லாம், காந்தி தாத்தாவின் உரையையும், அவரது தீரத்தையும் பார்த்து வேகம் பெற்று சுதந்திரப் போராட்டத்தை அடுத்த லெவலுக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் இங்குதான் பெரிய டிவிஸ்ட் உள்ளது. அது என்ன தெரியுமா?

தனது நீலகிரி பயணத்தின்போது அதிக அளவில் அவர் பேசியது சுதந்திரப் போராட்டம் குறித்து கிடையாது.. மாறாக தீண்டாமையின் கொடுமை குறித்துதான் அவர் அதிகம் பேசினாராம். "தீண்டாமையை ஒழிக்க வேண்டும்.. அது நமது ஒற்றுமையை எந்த அளவுக்கு சிதைக்கிறது, நமக்கு பெரும் இடையூறாக இருப்பது தீண்டாமைதான் என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார் காந்தி.
பயணம்: இந்தியாவின், சாதி அமைப்பில் இருந்து தீண்டாமையை ஒழிப்பதே மகாத்மா காந்தியின் நோக்கமாக இருந்ததால், இதற்கான பிரச்சார பயணத்தை தான் மகாத்மா அப்போது மேற்கொண்டிருந்தார். 1934 ஜனவரி 29ம் தேதி குன்னூருக்கு வந்த காந்திஜி, மவுண்ட் ப்ளஸன்ட்டில் உள்ள நாகேஸ்வர ராவின் "ராமாஷ்ரமத்தில்" விருந்தினராக தங்கியிருக்கிறார் .
எப்படியும் ஒரு வாரம் முழு ஓய்வு எடுப்பார் என்று குன்னூர் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், நடைபயிற்சி, கடிதங்கள் எழுதுதல், பேட்டிகளை தருவது, கூட்டங்களில் உரையாற்றுவது, பார்வையாளர்களை சந்திப்பது, தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உரை நிகழ்த்துவது, உள்ளூர்வாசிகள் நடத்தும் மாலை நேர பிரார்த்தனைகளில் பங்கேற்பது என நிமிடங்கள் ஒவ்வொன்றும் மணிமணியாக மகாத்மாவுக்கு கழிந்துள்ளன.
பொதுக்கூட்டம்: பிப்ரவரி 2ம் தேதி, கோத்தகிரி பொதுக்கூட்டத்தில் காந்தி உரையாற்றியபோது, கிட்டத்தட்ட 6 ஆயிரம் பேர் பங்கேற்றிருக்கிறார்கள்.. இதில், பெரும்பான்மையாக கலந்துகொண்டவர்கள் படுகர் இன மக்கள்தானாம்.
தலித் அல்லாத, அதேசமயம் தலித்துகளுக்கு எதிராக செயல்படாதவர்கள் என்று படுகர்களை பாராட்டிய மகாத்மா, "மலைவாழ் மக்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதால், அதை மட்டும் கைவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டாராம்.
பிரம்மாண்ட கூட்டம்: பிப்ரவரி 4ம் தேதி ஊட்டியே கோலாகலமாக காணப்பட்டுள்ளது. காரணம், அன்றுதான், 10,000 பேர் கலந்துகொண்ட ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்கள், ஜைனர்கள், ஐரோப்பியர்கள், தலித்துகள் உட்பட ஊட்டியில் வசிக்கும் அனைத்து சமுதாய மக்களுமே பங்கேற்றிருக்கிறார்கள்.

அப்போது காந்தி, "பணமாகவோ, பொருளாகவோ கொடுத்து, தீண்டாமை ஒழிப்பு மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்காக உதவ வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். உடனே ஒரு ஸ்காட்லாந்து டாக்டர், கடகடவென மேடைக்கு ஏறி, பத்து ரூபாய் நோட்டை காந்திஜியின் கையில் கொடுத்து, தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தன்னுடைய தாழ்மையான பங்களிப்பு என்றாராம்.
குன்னூர்: பிப்ரவரி 5, 1934, காந்தியின் மவுன நாள் என்பதால், அன்றைய நாள் முழுவதும் கடிதங்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்திருக்கிறார்.. பிப்ரவரி 6-ம் தேதி காலை 7 மணிக்கு குன்னூரிலிருந்து திருப்பூருக்கு கிளம்பிவிட்டார். ஆனால், அப்போதுகூட வழியில், மேட்டுப்பாளையத்தில் தீண்டாமை ஒழிப்பு பற்றி அம்மக்களிடம் பேசிவிட்டுதான் நகர்ந்தாராம்.
நீலகிரி மக்களிடம் காந்தி சொல்லும்போது, "உங்களிடம் தீண்டாமை இல்லை.. ஆனால், உங்களுக்கும் கூட உயர்ந்தவர் தாழ்ந்த பாகுபாடு உண்டு. மற்றவரை விட நம்மை உயர்வாகக் கருதும் பழக்கம் நமக்கு இருக்கும் வரை, நாம் தீண்டாமையை ஒழிக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தியிருக்கிறார்.
தீண்டாமை: தீண்டாமை என்ற பிசாசை, 1 கோடி ரூபாய் அல்லது அதற்கு மேல் தந்தாலும்கூட, இதயத்திலிருந்து விரட்ட முடியாது. மேல்வர்க்க இந்துக்களும் தீண்டாமையை ஒழிக்க நினைக்க வேண்டும். மதத்தின் பெயரால் பல நூற்றாண்டுகளாக திட்டமிட்டு அடக்கி வைத்திருப்பதே அவர்கள்தான்.. அதனால், தலித், தீண்டத்தகாதவர்களுக்கு அவர்கள்தான் பரிகாரம் செய்ய வேண்டும்" என அழுத்தமாக பதிவிட்டுள்ளர் மகாத்மா காந்தி.
காந்தியின் பயணத்தின்போது அக்கூட்டங்களில் கலந்து கொண்ட காந்தியின் தீவிர ஆதரவாளர்களான பாதிரியார் சி.எப் ஆண்ட்ரூஸ், மர்ஜோரி ஸ்கைஸ் ஆகியோர் (இருவரும் கோத்தகிரியைச் சேர்ந்தவர்கள்) நீலகிரியில் சுதந்திரப் போராட்டத்தை தீவிரப்படுத்த ஆரம்பித்துள்ளனர். அதிக அளவில் கூட்டங்கள் போட்டு உள்ளூர் மக்களுக்கு சுதந்திர தாகத்தை கொடுத்துள்ளனர்.
சுவாரஸ்யம்: மகாத்மா காந்தியின் நீலகிரி பயணத்தின்போது இன்னொரு சுவாரஸ்யமும் அரங்கேறியுள்ளது. நீலகிரி என்றாலே அந்த பூமியின் பூர்வ குடிகளான தோடர் சமுதாய மக்கள்தான் நினைவுக்கு வருவார்கள். காந்தி பயணத்தின்போது தோடர் இன மக்கள் கூடி அவருக்காக பாட்டுப் பாடி நடனம் ஆடி காந்தியை மகிழ்வித்துள்ளனர். இந்தப் பாடலையும் முழுமையாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஆவணப்படுத்தி வைத்துள்ளனர். இது காந்திக்காகவே எழுதி பாடிய பாடலாம்.
நீலகிரியைப் பொறுத்தவரை படுகர் சமுதாய மக்கள்தான் அதிகம். தோடர் மக்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு. அந்த மக்கள், காந்திக்காக பாடல் பாடிய மகிழ்வித்ததுதான் இங்கு விசேஷமானது. அந்தப் பாடலை நீங்களும் கேளுங்கள்.
"அறிவார்ந்த மனிதனே
உன்னைப் போன்றவர்கள் உருவாக்கப்படுவதும் இல்லை, பிறப்பதும் இல்லை
சிறந்த அறிவை பெற்றது யார்? மகாத்மா
சிறந்த ஞானத்தைப் பெற்றவர் யார்? மகாத்மா
எல்லோருக்கும் தந்தையாக விளங்குவது யார்? மகாத்மா
அனைத்து வலிகளிலிருந்தும் நம்மை விடுவித்தது யார்? மகாத்மா
புலியுடன் போராடியது யார்? மகாத்மா
அவர் செய்வதெல்லாம் சரி என்று நம்மை உணர வைத்தது யார்? மகாத்மா"
பாடல் வரிகள்: இந்தப் பாடல் அதிக வரிகளுடன் கூடியதாக இருந்ததாம். அந்த சமயத்தில் இந்தப் பாடலைக் கேட்ட முதியவர்களுக்கு நினைவிருந்த வரிகளை மட்டும் சொல்லியுள்ளனர் போலும். அதை மட்டும் ஆவணத்தில் இடம் பெற வைத்திருக்கிறார்கள்.
காந்தியின் வருகைக்கு பிறகு, நீலகிரி மாவட்டம் சுதந்திரப் போராட்டத்தில் மற்ற பகுதிகளுக்கு சளைக்காமல் போராடியுள்ளது, ஆக்கப்பூர்வமாக பங்காற்றியுள்ளது. எஸ்.ஆர். தங்கவேலு பிள்ளை, கோவிந்தசாமி செட்டி ஆகியோர் நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களான சுதந்திரப் போராட்ட தியாகிகள்.
பல்வேறு முற்றுகைப் போராட்டங்கள், தர்ணா போராட்டங்கள், ஜெயில் நிரப்பும் போராட்டங்களை இவர்கள் தலைமை தாங்கி நடத்தியுள்ளனர். உள்ளூரில் மிக முக்கியமான சுதந்திரப் போராட்ட தலைவர்களாகவும் இவர்கள் திகழ்ந்துள்ளனர்..
சிறை தண்டனை: நீலகிரியை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆண்ட ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ்தான், சுதந்திர இயக்கத்தின் வேட்கையும், காந்தியால் பீறிட்டு கிளம்பியிருக்கிறது... ஒத்துழையாமை இயக்கத்தின்போதும்சரி, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போதும்சரி, சுதந்திர தாக வேட்கையில், நரம்புகள் புடைத்தெழுந்த இளம் புரட்சியாளர்கள் பெருமளவில் பங்கேற்று சிறைக்கு சென்றிருக்கிறார்கள்..
உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் கே.ஏ.பொம்மன், கே,பி.அஜ்ஜா கவுடர், போக்கே கவுடர், கே.எம்.ஹிரியன், ராமன் நாயர், திருவேங்கிடம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்ததை கண்டு நீலகிரி மலை செருக்குண்டது.

படுகர் மக்கள்: நீலகிரி மலையின் படுகர் இன மக்களும் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர்.. சுதந்திர வேட்கை நாடு முழுவதும் பெரும் எழுச்சியாக கொந்தளித்துகிடந்தபோது, படுகர்களின் ஹட்டி பண்டிகை ஒருமுறை கொண்டாடப்பட்டது.
அப்போது, படுகர் இன மக்கள் தங்களது வழிபாட்டு தளத்திற்கு செல்லும்போது வழக்கத்திற்கு மாறாக "மகாத்மா காந்திக்கு ஜே" என மலைப்பிரதேசமே அதிர கோஷமிட்டுக் கொண்டே சென்றார்களாம்.. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பிரிட்டிஷ் காவல்துறை அதிகாரி, "துப்பாக்கியால் சுடுவேன்" என்று மிரட்டல் விடுத்தாராம்.
விடுதலை செறுக்கு: ஆனால், எதற்கும் அஞ்சாத நீலகிரி மக்களோ, "அப்படியா? முடிந்தால் எங்களை சுடுங்களேன் பார்க்கலாம்" என்று நெஞ்சை பிளந்து கொண்டு வந்து துப்பாக்கி முன்பு நின்றார்களாம்.. அனல் கக்கும் அம்மக்களின் கண்களை கண்டு அந்த பிரிட்டிஷ் அதிகாரி லேசாக நடுங்கித்தான் போனாராம்.. அதாவது, தங்களது பண்டிகையைக்கூட விடுதலைப் போராட்டத்திற்காக பயன்படுத்தியிருக்கிறார்கள் நீலகிரி மக்கள்.
ரத்தமும் சதையுமாய் நிரம்ப நிரம்ப தளும்பி கொண்டிருக்கும், இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றின் துடிப்புமிக்க பக்கத்தில், நீலகிரி மக்களின் பங்கும் கலந்திருக்கிறது என்பதை நாம் ஒருபோதும்....
மறுக்க முடியாது -
மறக்க முடியாது -
மறக்கவும் கூடாது...!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications