யார் 'பாமக தலைவர்'? ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஈஸ்டர் தின வாழ்த்து அறிக்கையிலும் தொடரும் அக்கப்போர்!
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் யார் என்பது தொடர்பான குழப்பமும் பஞ்சாயத்தும் இன்னமும் ஓயவில்லை. ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு பாமகவின் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இருவரும் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி அறிக்கைகளில் 'பாமக தலைவர்' என்றே குறிப்பிட்டிருப்பதால் இந்த அக்கப்போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லையே என புலம்புகின்றனர் பாமக தொண்டர்கள்.
பாமகவின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் அண்மையில், பாமக தலைவர் பதவியில் இருந்து மகன் அன்புமணி ராமதாஸை டிஸ்மிஸ் செய்தார். பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக தாமே செயல்படுவேன் எனவும் ராமதாஸ் அறிவித்தார். மேலும் அன்புமணி ராமதாஸ், பாமகவின் செயல் தலைவராக மட்டுமே இருப்பார் என்றார் ராமதாஸ்.
ஆனால் அன்புமணி ராமதாஸோ, தாமே பாமகவின் தலைவர்; பாமகவின் பொதுக்குழு கூடிதான் தம்மை தலைவராக தேர்ந்தெடுத்தது; தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது என அப்பா ராமதாஸுக்கு பதிலடி தந்தார். இதனால் பாமக பிளவுபட்டு உடையும் நிலை உருவாகி உள்ளது.
இதனிடையே வன்னியர் சங்கத்தின் சித்திரைப் பெருவிழா நிகழ்வு மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பாமகவினர் முழு வீச்சில் மேற்கொண்டு வருகின்றனர். அதேநேரத்தில் பாமகவின் அதிகாரப் போட்டியும் மும்முரமாக நடந்து வருகிறது.

டாக்டர் ராமதாஸ் அறிக்கை
ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் வாழ்த்து செய்திகளை வெளியிட்டுள்ளனர். ராமதாஸ் தமது வாழ்த்து செய்தியில்,
அன்பு, மன்னிப்பு ஆகியவற்றை மட்டுமே போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் உலகெங்கும் உள்ள கிறித்துவ சொந்தங்கள் அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேரமுண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, அனைத்து மக்களுக்கும், அனைத்து நன்மைகளும் நடக்க வேண்டிய நேரத்தில் நிச்சயமாக நடந்தே தீரும் என்பது உறுதி.
இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்டதும், பின்னர் உயிர்த்தெழுந்து வந்ததும் தனிமனிதரின் வாழ்க்கை அனுபவமல்ல. அது உலகிற்கே சொல்லப்பட்ட பாடம் ஆகும். வாழ்க்கையில் எப்போதும் நன்மையையே செய்யுங்கள்; அதனால் இடையில் சோதனைகள் வந்தாலும் நிறைவில் நன்மையே நடக்கும் என்று உலக மக்களுக்கு நற்செய்தி சொல்வதற்கான நிகழ்வு தான் புனித வெள்ளியும், உயிர்த்தெழுதல் திருநாளும் ஆகும். அதுமட்டுமின்றி, இருள் விரைவாகவே நீங்கும் என்பதும் ஈஸ்டர் திருநாள் சொல்லும் செய்தியாகும்.
ஈஸ்டர் திருநாளின் நோக்கத்தைப் போலவே தமிழ்நாட்டு மக்களிடையே ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகியவை வளர வேண்டும்; வளர்ச்சி, அமைதி, மகிழ்ச்சி ஆகியவை பெருக வேண்டும் என்று கூறி, கிறித்தவ சொந்தங்களுக்கு மீண்டும் ஒருமுறை ஈஸ்டர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியிருந்தார். இந்த அறிக்கையில் பாமக நிறுவனர்- தலைவர் ச. ராமதாசு என இடம் பெற்றுள்ளது.

அன்புமணி ராமதாஸ் அறிக்கை
இதேபோல அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட ஈஸ்டர் தின வாழ்த்து செய்தியில்,ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்ட வேண்டும் என்று போதித்தவரான இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் இன்றையத் தேவை கருணை, சகிப்புத் தன்மை, மன்னிக்கும் குணம், அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதல் ஆகியவை தான். அதை வலியுறுத்தும் திருநாள் தான் ஈஸ்டர் திருநாள் ஆகும்.
ஈஸ்டர் நாளில் பரிசளிக்கப்படும் முட்டைகளில் இனிப்புகளும், மிட்டாய்களும் நிறைந்திருக்கும். அவை குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தவை. மாறாக, சமூகத்திற்கு வழங்கப்படும் ஈஸ்டர் முட்டைகளில் அன்பு, கருணை, நல்லிணக்கம், சகிப்புத்தன்மை ஆகியவை நிறைந்திருக்க வேண்டும். அது தான் ஒட்டுமொத்த உலகத்தையும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும்.
ஈஸ்டர் திருநாள் தெரிவிக்கும் செய்தியை பின்பற்றும் வகையில் நாம் அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும்; தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும். அத்துடன், உலகம் ஒரு குடும்பமாக வாழ்வதற்கு தேவையான அன்பு, கருணை, சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், அமைதி, வளம், மகிழ்ச்சி ஆகியவை தழைக்க பாடுபடுவதற்கு அனைவரும் உறுதி ஏற்றுக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸின் அறிக்கையில், பாமக தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் பாமக தலைவர் யார் என்கிற குழப்பம் தொடருகிறது. இது பாமக தொண்டர்களிடையே கடும் சோர்வையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications