World Idly Day 2025:என்னது பூ மார்க்கெட் மாதிரி இட்லிக்கு தனி சந்தை இருக்கிறதா? எங்கே தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காய்கறிகள், பழங்களுக்கு எல்லாம் தனி சந்தைகள் இருக்கின்றன.. திண்டுக்கல் பூ மார்க்கெட், களியக்காவிளை பூ மார்க்கெட், ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்.. இந்த வரிசையில் அன்றாடம் அனைத்து தரப்பு மக்களும் விரும்பி உண்ணும் 'இட்லி'க்கும் கூட ஒரு மார்க்கெட் இருக்கிறது தெரியுமா மக்களே! ஆம்.. தனித்துவமான மஞ்சள் மார்க்கெட் அமைந்துள்ள ஈரோடு மாநகரில்தான் உலகப் புகழ் பெற்ற 'இட்லி' மார்க்கெட் (இட்லி சந்தை) இருக்கிறது.

இன்று சர்வதேச இட்லி தினம். 2015-ம் ஆண்டு சென்னையில்தான் சர்வதேச இட்லி தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30-ந் தேதி சர்வதேச இட்லி தினத்தை வெகுசிறப்புடன், இட்லிக்கே தனித்துவமான மாநிலமான தமிழ்நாடு கொண்டாடி வருகிறது.. அதேபோல உலகின் பல பகுதிகளிலும் தற்போது இந்த சர்வதேச இட்லி தின கொண்டாட்டங்கள் வெவ்வேறு வகைகளில் களைகட்டுகின்றன.

இன்றைய சர்வதேச இட்லி தினத்தில் ஈரோடு மாநகரில் அமைந்துள்ள 'இட்லி' சந்தையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கருங்கல்பாளையம் இட்லி சந்தை

ஈரோடு மாநகரில் கருங்கல்பாளையம் திருநகர் காலனியில்தான் இட்லி சந்தை செயல்பட்டு வருகிறது. 60 ஆண்டுகளுக்கு முன்னர், அருகே உள்ள கால்நடை சந்தைக்கு வருகிற வியாபாரிகளை இலக்கு வைத்து ஒரு சிலர் இட்லி வியாபாரம் செய்ய தொடங்கினர். இப்போது இது இட்லி சந்தையாகவே விரிவடைந்துவிட்டது.

காலை 7 மணி முதல் இரவு வரை

இட்லி சந்தை காலை 7 மணிக்கு தொடங்கும். இந்த சந்தையில் இட்லி வியாபாரம் மாலை 5 மணி அல்லது சில கடைகளில் இரவு 10 மணி வரை களைகட்டும். ஈரோடு மாநகரின் பல ஹோட்டல்களுக்கும் இட்லி இங்கிருந்துதான் சப்ளையாகிறது. இந்த இட்லி சந்தையில் ஒருநாளைக்கு சர்வ சாதாரணமாக 10,000-க்கும் அதிகமான இடலிகள் 'கல்லா' கட்டிவிடுகின்றன.

தனபாக்கியம் இட்லி பாட்டி

25 பைசாவுக்கு இட்லி வியாபாரத்தை தொடங்கிய தனபாக்கியம் என்ற மூதாட்டிதான், இந்த இட்லி சந்தையின் பிதாமகள் என்கின்றனர் உள்ளூர்வாசிகள். இப்போது உள்ளூர் முதல் உலகம் வரை என்கிற ரேஞ்சில் இட்லி சந்தையில் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சிகள், திருவிழாக்கள், வீட்டு விசேஷங்கள் என அனைத்துக்கும் மொத்தமாக இந்த சந்தையில் 'இட்லி ' கொள்முதல் செய்துவிடுகின்றனர்.

விறகு அடுப்புகளில் இட்லி

ஈரோடு கருங்கல்பாளையத்தில் மொத்தமாக இட்லிகளை கொள்முதல் செய்யும் ஹோட்டல்கள், அசைவ குழம்பு வகைகள், சாம்பார் வகைகள், சட்னி வகைகளுடன் வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுகின்றனர். பொதுவாக பெரும்பாலான இட்லி சந்தை கடைகளில், விறகு அடுப்புகளையே இப்போதும் பயன்படுத்துகின்றனர்.

கொரோனா காலத்தில் பேருதவி

வெளியூர், வெளிநாடுகளுக்கும் இட்லி சந்தையில் இருந்து சமையல் கலைஞர்கள் சென்று, இட்லிகளை தயார் செய்து கொடுக்கின்ற 'ஆர்டர்' வகையும் இங்கே கிடைக்குமாம். கொரோனா காலத்தில் இந்த இட்லி சந்தை கடைகள் மிகப் பெரும் வரப்பிரசாதமாக கை கொடுத்து உதவியிருப்பதை உள்ளூர் மக்கள் இன்றும் நினைவுபடுத்துகின்றனர். ஈரோடு இட்லி கடையில் மளிகை சாமான்களைப் போல ஹோல்சேல் விலையிலும் கிடைக்கும். இங்கேயே அமர்ந்து சாப்பிடுவதற்கும் வசதிகள் உண்டு.

இட்லி மாவில் ஆமணக்கு

சரி ஈரோடு இட்லி சந்தையின் இட்லி சுவையாக இருப்பதற்கு ஒரு காரணமும் இருக்கிறதாம் மக்களே! வீடுகளில் நாம் இட்லி மாவு அரைக்கும் போது வெந்தயம் சேர்க்கிறோம் அல்லவா? அதற்கு பதிலாக இங்கே ஆமணக்கு சேர்க்கின்றனர். இதனால் இட்லி மெதுமெதுப்புடனும் இட்லி தட்டுகளில் ஒட்டாமலும் இருக்கிறதாம். இத்தனைக்கும் இப்போது மாட்டு சந்தை வேறு இடத்துக்கு மாறிப் போய்விட்டாலும் காலை முதலே 'ஆவி பறக்கும்' இட்லி வியாபாரம் ஈரோடு கருங்கல்பாளையம் சந்தையில் களைகட்டிக் கொண்டுதான் இருக்கிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+