நெல்லை அருகே கொல்லப்பட்ட இளைஞர்.. வேறு சமூக பெண்ணுடன் காதல்.. ஆணவக்கொலையா? வெளியான அதிர்ச்சி தகவல்!
நெல்லை : நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆணவக்கொலை என உறவினர்கள் சந்தேகம் கிளப்பிய நிலையில், அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளையைச் சேர்ந்தவர் கன்னியப்பன். செருப்பு தைக்கும் தொழிலாளியான கன்னியப்பனின் மகன் முத்தையா (19), திசையன்விளை அருகே சங்கனாங்குளத்தில் உள்ள தனியார் ப்ரிண்டிங் பிரஸ் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.

நேற்று முன்தினம் (ஜூலை 23) இரவில் முத்தையா தனது நண்பர்களை சந்தித்து விட்டு வருவதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு பைக்கில் புறப்பட்டுச் சென்றுள்ளார். பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வராத நிலையில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது காட்டுப்பகுதியில் முத்தையா உடலில் கடுமையான கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட எஸ்.பி சிலம்பரசன், வள்ளியூர் டிஎஸ்பி யோகேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். முத்தையாவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஹை கிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே பாளையங்கோட்டை ஹை கிரவுண்டு அரசு மருத்துவமனையில் இளைஞர் முத்தையாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். முத்தையா காதலித்த பெண்ணின் குடும்பத்தினர் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் முத்தையாவை ஆணவக்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது.

முத்தையா, தன்னுடன் பணிபுரிந்து வந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால், அப்பெண்ணின் வீட்டில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்ப்பை மீறி இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று அப்பெண்ணை சந்தித்து விட்டு பின்னர் வீட்டுக்கு சென்று அதன்பிறகு மீண்டும் வெளியே கிளம்பியுள்ளார். அப்போதுதான் அவர் காட்டுப்பகுதியில் ரத்த வெள்ளத்துடன் இறந்து கிடந்துள்ளார்.
முத்தையாவை கொலை செய்தது யார்? காதல் பிரச்சனையால் ஆணவக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களின் காதலினால் ஏற்பட்ட கொலை எனக் கூறப்படுவதால், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தவிர்க்க திசையன்விளை பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications