தடதடக்கும் தஞ்சாவூர்.. போலி நகையை அடமானம் வைத்து 16 லட்சம் மோசடி.. 3 பேர் கைது
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகை என்று கூறி போலி கவரிங் நகைகளை அடமானம் வைத்து 16 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மோசடி சம்பவங்கள் சமீபகாலமாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் திருட்டு, ஆஃப்லைன் திருட்டு என பல ரூட்டுகளில் மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இரட்டிப்பு லாபம், சிறிய முதலீடு பெரிய லாபம், விளம்பரத்தைப் பார்த்தால் மாதம் ரூ. 50 ஆயிரம் என ஏராளமான மோசடி சம்பவங்கள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், தஞ்சாவூர் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் தங்க நகை என்று கூறி போலி கவரிங் நகைகளை அடமானம் வைத்து 16 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ரெட்டிபாளையம் அருகே உள்ள பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சாவூர் ரெட்டிபாளையம் சாலை காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த கவி என்பவரின் மகள் சரண்யா (31) (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தஞ்சாவூர் சீனிவாசபுரம், செக்கடி பகுதியைச் சேர்ந்த மருது என்பவரின் மனைவி லட்சுமி (38) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இருவரும் வளையல், பிரேசிலெட் போன்ற நகைகளை அடமானமாக வைத்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இதே தனியார் நிதி நிறுவனத்தில் பலமுறை வளையல் மற்றும் பிரேசிலெட்டை அடமானம் வைத்து லட்சக்கணக்கில் கடனாக வாங்கியுள்ளனர். இந்நிலையில், மீண்டும் அதேபோல பிரேசிலெட், வளையல்களை அடமானம் வைப்பதற்காக வந்ததால் நிதி நிறுவன அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, தனியார் நிதி நிறுவனத்தின் அதிகாரி கஜேந்திரன் என்பவர் கள்ளப்பெரம்பூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பின்னர், அந்த பெண்கள் அடமானம் வைத்த நகைகளை அவர்கள் சோதனை செய்தபோது அந்த நகையில் ஹால்மார்க் முத்திரை இருந்துள்ளது. ஆனால், வெள்ளி நகைகளை வாங்கி தங்கமுலாம் பூசப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சரண்யா, லட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய இருவரையும் காவல் துறையினர் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் இருவரிடமும் போலி நகைகளைக் கொடுத்தது தஞ்சாவூர் கீழவாசல், கொள்ளுப்பேட்டை தெருவைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் விஸ்வநாதன் (37) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து, தலைமறைவாக இருந்த விஸ்வநாதனை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், விஸ்வநாதன் கும்பகோணம், திருச்சி போன்ற பகுதிகளில் போலி நகைகளை அடமானம் வைத்து 16.31 லட்சம் ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக தஞ்சாவூர், சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications