“வீட்டுக்கு போலாம் வாம்மா..” அப்பாவுடன் சென்ற மகள் அடுத்த நாளே ஆணவக்கொலை? பட்டுக்கோட்டையில் ஷாக்
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், இது ஆணவக்கொலை என கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
பட்டுக்கோட்டை அருகே வாட்டாத்திக்கோட்டை, நெய்வவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள், இவரின் மகள் ஐஸ்வர்யா (19). பக்கத்து கிராமமான பூவாளூரைச் சேர்ந்தவர் பாஸ்கர், இவரின் மகன் நவீன் (19). இவரும் பள்ளி காலத்திலிருந்தே காதலித்து வந்திருக்கின்றனர். அப்போதே இந்த விஷயம் ஐஸ்வரியாவின் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது. எனவே, நவீனின் வீடு தேடி சென்று பெருமாள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

கல்வி முடிந்ததையடுத்து ஐஸ்வரியா திருப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார். நவீனும், திருப்பூரில் வேறு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இப்படி இருக்கையில் இருவரும் தனியாக வீடு எடுத்து வசித்து வந்திருக்கின்றனர். சமீபத்தில் திருமணமும் நடந்திருக்கிறது. ஆனால் திருமணம் நடந்த விஷயம் ஐஸ்வரியாவின் வீட்டிற்கு எப்படியோ தெரிய வந்திருக்கிறது. எனவே அவர்கள் ஐஸ்வரியாவை தேட தொடங்கியுள்ளனர். இந்த விஷயத்தை முன்னரே தெரிந்துக்கொண்ட காதல் ஜோடிகள் வேறு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.
மறுபுறம் பல்லடம் காவல்துறையினரும் காதல் ஜோடிகளை தேடி வந்திருக்கின்றனர். பின்னர் ஒருவழியாக வீட்டை கண்டுபிடித்த அவர்கள், ஐஸ்வரியாவை மட்டும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு காத்திருந்த பெற்றோர், ஐஸ்வரியாவை அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு சென்றிருக்கின்றனர். இதன் பின்னர்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, இவர்கள் சொந்த ஊர் திரும்பிய அடுத்த நாள் ஐஸ்வரியா மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். மட்டுமல்லாது, அவரது சடலத்தை பெற்றோர்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.

இது குறித்து அவர் கூறுகையில், "நானும் ஐஸ்வரியாவும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். இந்த காதலுக்கு ஐஸ்வரியா வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. காரணம் நான் பட்டியல் சமூகம், ஐஸ்வரியா மாற்று சமூகம் என்பதுதான். ஆனால் நாங்கள் எங்கள் காதலில் உறுதியாக இருந்தோம். சமீபத்தில்தான் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துக்கொண்டோம். இந்த விஷயம் எப்படியோ, ஐஸ்வரியாவின் வீட்டிற்கு கசிந்துவிட்டது.
எனவே வேறு வீடு மாறிவிட்டோம். இருப்பினும் அந்த வீட்டை கண்டுபிடித்து வந்த பல்லடம் போலீசார் ஐஸ்வரியாவை மட்டும் அழைத்து சென்றனர். என் மீது ஐஸ்வரியாவின் பெற்றோர் கடும் கோபத்துடன் இருப்பதால் என்னை போலீஸ் ஸ்டேஷன் வரவேண்டாம் என்று அவர்கள் கூறினர். இருப்பினும் நான் பைக்கில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றேன். அங்கு, ஐஸ்வரியாவை அவரது தந்தை "வீட்டுக்கு போகலாம் வாம்மா" என்று கூறி அழைத்து சென்றுவிட்டார். பின்னர் நானும் வீடு திரும்பிவிட்டேன். ஆனால், அடுத்த நாள் காலை அவள் இறந்துவிட்டதாக தகவல் வெளியானது.
போலீசார் அழைக்கும்போது அவள் போகமாட்டேன் என்று சொன்னாள். நான்தான் போ என்று சொல்லி அனுப்பி வைத்தேன். ஆனால் கடைசியில், அவளது முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. இது திட்டமிட்ட படுகொலை" என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு பின்னர் ஐஸ்வரியாவின் மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஆனால் அவரின் தந்தை பெருமாள் தலைமறைவாகியுள்ளார். சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை சமரசம் பேசி பெற்றோர் அழைத்து சென்ற நிலையில், அடுத்த நாளே அப்பெண் உயிரிழந்திருப்பது பட்டுக்கோட்டையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் காவல்துறையினர் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, நீலம் உள்ளிட்ட அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.












Click it and Unblock the Notifications