ஒரே அசைன்மென்டில் ரூ.800 கோடி லாபம்? சீனுக்குள் வந்த சிங்கப்பூர் மூதாட்டி! தகித்துப் போன தஞ்சாவூர்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சை: சிங்கப்பூரைச் சேர்ந்த பெண்ணுக்குச் சொந்தமாக தஞ்சையில் உள்ள சுமார் ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துகளை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக, அதிமுக பிரமுகர் உட்பட 12 பேர் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்ட சாலை பால்பண்ணை பகுதியைச் சேர்ந்த ஷேக் சிராஜூதீன், சிங்கப்பூரில் வசித்து வந்த பிரபல தொழிலதிபர். அவருக்கு தஞ்சாவூர் பால்பண்ணை, சீராஜ்பூர் நகர், செங்கிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பரந்த அளவிலான நிலங்கள் மற்றும் சொத்துகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இச்சொத்துகளின் தற்போதைய அரசு மதிப்பு சுமார் ரூ.800 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு ஷேக் சிராஜூதீன் உயிரிழந்ததையடுத்து, அவரது மனைவி முகமதா பேகம் (76) இந்த சொத்துகளின் உரிமையாளராக இருந்து வந்தார்.

Thanjavur crime Land Grab

சிங்கப்பூர் பெண்

இந்த நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த ஸ்ரீவித்யா சுமதி என்பவர், முகமதா பேகத்திடம் நம்பிக்கை ஏற்படுத்தி, சொத்துகளை பாதுகாத்து பராமரித்து தருவதாக கூறி, அவருடன் நெருக்கமாக பழகியதாக கூறப்படுகிறது. வயது மூப்பு காரணமாகவும், தனியாக சொத்து விவகாரங்களை கவனிக்க முடியாத நிலையிலும் இருந்த முகமதா பேகம், ஸ்ரீவித்யா சுமதியை நம்பி சொத்துகளை கவனிக்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

800 கோடி சொத்து மோசடி

இதனை பயன்படுத்திக் கொண்ட ஸ்ரீவித்யா சுமதி, தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அதிமுக மத்திய மாவட்ட அம்மா பேரவை மாவட்ட தலைவர் கேபிள் செந்தில் என்கிற செந்தில்குமார் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து, 2017 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், முகமதா பேகத்தின் கையெழுத்தை பெற்றுக் கொண்டு, போலியான பவர் ஆஃப் அட்டார்னி, விற்பனை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை தயாரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

போலி ஆவணங்கள்

மேலும், செங்கிப்பட்டி மற்றும் சீராஜ்பூர் பகுதிகளில் இருந்த பெட்ரோல் பங்க் இடத்தை, செந்தில்குமார் தனது உறவினர்களான ரேவதி, மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோருக்கு விற்பனை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு, சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் நாஞ்சிக்கோட்டை பகுதிகளில் ஷேக் சிராஜூதீனுக்குச் சொந்தமான இடங்களை, அன்பளிப்பாக வழங்கியதாக போலி ஆவணங்களை தயாரித்து சொத்துகளை அபகரித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நில அபகரிப்பு

இதுமட்டுமின்றி, முகமதா பேகம் பெயரில் மூன்று வங்கிகளில் கணக்குகள் தொடங்கி, அவற்றின் மூலம் பண பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த மாதம், பால்பண்ணையில் உள்ள ஷேக் சிராஜூதீனின் பெரிய வீட்டை இடித்து, அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், இரண்டு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பணம் மற்றும் நகைகளை எடுத்துச் சென்றதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பிரமுகர்

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முகமதா பேகம், சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டபோது, முறையான பதில் அளிக்காமல், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. வயது மூப்பு மற்றும் அச்சம் காரணமாக ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அவர், குடும்பத்தினரின் ஆதரவுடன் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், கேபிள் செந்தில், ஸ்ரீவித்யா சுமதி உள்ளிட்ட 12 பேர் மீது ஒன்பது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் குற்றப்பிரிவு விசாரணை

இதற்கிடையில், கேபிள் செந்தில் அளித்த விளக்கத்தில், முகமதா பேகம் சுமார் 650 ஆவணங்களில் தன்னிச்சையாக கையெழுத்திட்டதாகவும், அவர் நேரடியாக தஞ்சாவூருக்கு வந்து நிலங்களை விற்பனை செய்ததாகவும் கூறியுள்ளார். தனது மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றும், நிலங்களை லேஅவுட் ஆக மாற்றி விற்பனை செய்ய உதவியதுதான் தனது பங்கு என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+