தீண்டாமை கொடூரம்.. தாழ்த்தப்பட்டோருக்கு முடி வெட்டாமல் கடையை மூடியவர் வன்கொடுமைச் சட்டத்தில் கைது!
தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கிளாமங்கலம் பகுதியில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்யாமல், கடையை மூடிச் சென்ற வீரமுத்து என்பவர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரத்தநாடு அருகேயுள்ள கிளாமங்கலம் கிராமத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதுதொடர்பான வீடியோ ஒன்று சமீபத்தில் பரவியது.
இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில் கடைகளில் தீண்டாமை கடைபிடிக்கப்படுவது கண்டறியப்பட்டது. மேலும் அப்பகுதியில் இரட்டைக் குவளை முறை பின்பற்றப்படுவதும் தெரியவந்தது.
விசாரணை அடிப்படையில் பட்டியல் இன மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமல் கடையை மூடி சென்ற சலூன் கடை உரிமையாளர் வீரமுத்து என்பவர் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

தீண்டாமை
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கிளாமங்கலம் கிராமத்தில், டீ கடைகளில் இரட்டை குவளை முறையும், முடி திருத்தும் கடையில் ஆதி திராவிடர் சமூக மக்களுக்கு முடி திருத்தம் செய்யாமலும் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடந்த அக்.2ஆம் தேதி ஒரத்தநாடு தாசில்தாரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

ஆத்திரம்
இதையடுத்து கிராம அலுவலர் ஆய்வு செய்து தீண்டாமை கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்து அறிக்கை அளித்துள்ளார். அதன் பிறகு இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாற்று சமூகத்தினர், பட்டியல் இன மக்கள் யாருக்கும் மளிகைக் கடைகளில் பொருள் வழங்கக் கூடாது, முடிதிருத்தம் செய்யக்கூடாது என கிராம கட்டுப்பாடு விதித்துள்ளனர். மேலும், ஆதிதிராவிடர் தெருவுக்கு குடிநீர் வராமல் தடுத்துள்ளனர்.

உங்களுக்கு தரக்கூடாது - கட்டுப்பாடு
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மளிகை கடையில், ஆதி திராவிடர் சமுகத்தை சேர்ந்த ஒருவர் பெட்ரோல் கேட்கும் போது உங்களுக்கு தரக் கூடாது என கிராமத்தில் தடை விதித்து இருப்பதாக மளிகை கடைக்காரர் கூறும் வீடியோ சமுக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக ஒரத்தநாடு தாசில்தார் சுரேஷ் மற்றும் ஒரத்தநாடு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கிளாமங்கலம் கிராமத்திற்கு சென்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இளைஞர் கைது
அப்போது தாழ்த்தப்பட்ட சாதியினரை பாரபட்சமாக நடத்தும் வழக்கம் இருப்பது தெரியவந்தது. முடிதிருத்தும் கடைகளிலும் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு சேவைகள் மறுக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இதனையடுத்து, பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கு முடி திருத்தம் செய்யாமல், கடையை மூடிச் சென்ற கடை உரிமையாளர் வீரமுத்துவை, எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்து, அவரது கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

போலீஸ் குவிப்பு
மேலும் தேநீர் கடைகளிலும் இரட்டை குவளை முறை பின்பற்றப்பட்டதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இதை அடுத்து அந்த பகுதியில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, விழுப்புரம் விசிக எம்.பி ரவிக்குமார், மாநில எஸ்சி/எஸ்டி ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications