காதலியை நள்ளிரவில் சந்திக்கப் போன பிளஸ் 2 மாணவன்... தாலி கட்டச்சொன்ன ஊர் மக்கள் - 6 பேர் கைது
பள்ளி சிறுமியான காதலியை நள்ளிரவில் சந்திக்க சென்ற மாணவனைப் பிடித்து கிராம மக்கள் சிலர் கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். 7 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சை: ப்ளஸ் 2 படித்து வந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராமத்தினர் 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரிலேயே குழந்தைத் திருமணத் தடுப்புச்சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, திருவோணம் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் லாவண்யா, வயது 16, அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் டூ படித்து வருகின்றனர். அதே வகுப்பில் சுந்தர் என்ற மாணவரும் படித்து வருகிறார். (இருவர் பெயரும் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது.
திங்கள்கிழமை நள்ளிரவு நேரத்தில் சுந்தர் தனது நண்பர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் லாவண்யாவைச் சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றார்.

மாணவன் மாணவி பேச்சு
வீட்டின் அருகே இருட்டில் நின்று கொண்டு இருவரும் பேசிக்கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பார்த்து விட்டனர். லாவண்யாவின் பெற்றோரிடம் கூறவே அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தனர். மாணவனிடம் கிராம மக்கள் விசாரணை நடத்தவே, இருவரும் ஒரே வகுப்பில் படிப்பதாகவும் காதலிப்பதாகவும் கூறினார்.

திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
கிராமத்தில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டிருந்தாலே தவறாகத்தான் பார்க்கப்படும். இரவு நேரம் என்பதால் லாவண்யாவையும் சுந்தரையும் அருகில் இருந்த கோவிலுக்கு இரவோடு இரவாக அழைத்துச் சென்று கட்டாய திருமணம் செய்து வைத்ததாக தெரிகிறது.

வழக்குப் பதிவு
விசயத்தைக் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த சுந்தரின் அப்பா, மணக்கோலத்தில் மகனைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உடனடியாக திருவோணம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

காப்பகத்தில் மாணவி
மாணவன் சுந்தர் உட்பட, கோபு, ராஜா, அய்யாவு, ராமன், நாடிமுத்து ஆகியோரை கைது செய்தனர். சுப்ரமணியன் என்பவர் தலைமறைவாக உள்ளனர். மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில் கைது செய்துள்ளதாகவும் கூறிய காவல்துறையினர் பள்ளி மாணவி லாவண்யாவை காப்பகத்தில் ஒப்படைத்தனர். பள்ளியில் படிக்கும் போது காதலித்தது மட்டுமல்லாது இரவு நேரத்தில் சந்திக்கப்போய் கிராமத்தினரிடம் வசமாக சிக்கிக்கொண்டதோடு காவல்துறையினரிடமும் சிக்கிக் கொண்டார் பள்ளி மாணவர்.












Click it and Unblock the Notifications