பெண் என்றுகூட பார்க்கல, ஸ்டாலின் பேச்சையும் கேக்கல! அதிராம்பட்டினம் இந்திய கம்யூ. கவுன்சிலர் குமுறல்
தஞ்சாவூர்: அதிராம்பட்டினம் நகராட்சித் துணைத் தலைவர் பொறுப்பை இந்திய கம்யூனிஸ்டுக்கு திமுக தலைமை ஒதுக்கியும் அதை மதிக்காமல் திமுக நகர செயலாளர் குணசேகரன் துணைத் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டதாக இந்திய கம்யூனிஸ்டு பெண் கவுன்சிலர் குற்றம்சாட்டி ஆடியோ வெளியிட்டுள்ளார்.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் திமுக 19 இடங்களிலும், அதிமுக 2 வார்டுகளிலும், சுயேட்சை 2 வார்டுகளிலும் SDPI, திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டு, முஸ்லீம் லீக் தலா ஒரு வார்டிலும் வென்றனர்.
இதனை தொடர்ந்து திமுக நகராட்சித் தலைவர் வேட்பாளராக திமுக கவுன்சிலர் தாஹிரா அம்மாள் நிறுத்தப்பட்டார். துணைத் தலைவர் பொறுப்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்குவதாக திமுக தலைமை அறிவித்தது.

தலைமை உத்தரவை மீறிய நகர திமுகவினர்
இதன்மூலம் அதிராம்பட்டினம் 19 வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கவுன்சிலர் தில் நவாஸ் பேகம் (38) அதிரை நகராட்சித் துணைத் தலைவராவது உறுதியாகி இருந்தது. தலைமையின் இந்த முடிவை ஏற்காத அதிராம்பட்டினம் திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் போட்டி வேட்பாளராக நின்று திமுக துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதற்கு எதிராக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் திமுகவின் மற்றொரு கோஷ்டியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

பதவி விலக சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பல இடங்களில் திமுகவினர் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றதற்கு எதிராக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினே கண்டனம் தெரிவித்து அனைவரையும் பதவி விலக சொல்லி எச்சரித்தார். தன்னை நேரில் வந்து பார்க்குமாறும் கட்டளையிட்டார். இருப்பினும் துணைத் தலைவர் பொறுப்பிலிருந்து குணசேகரன் இன்னும் பதவி விலகவில்லை.

இந்திய கம்யூனிஸ்ட் பெண் கவுன்சிலர் ஆடியோ
இதனிடையே இந்திய கம்யூனிஸ்ட் பெண் கவுன்சிலர் தில் நவாஸ் பேகம், நகராட்சித் துணைத் தலைவர் தேர்தலின்போது திமுக கவுன்சிலர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து பேசி ஆடியோ வெளியிட்டு உள்ளார்.
அதில், "அதிராம்பட்டினம் நகராட்சி மன்ற துணை சேர்மன் பொறுப்பை மதசார்பற்ற திமுக தலைமை இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கியது. அதன் அடிப்படையில் திமுக நகரச் செயலாளர் குணசேகரன் அவர்கள் துணை சேர்மன் தேர்தலுக்கு முதல்நாள் வரை எனக்கு ஆதரவு தருவதாக சொன்னார். ஆனால், தேர்தல் கடைசி நேரத்தில் குணசேகரன் போட்டியிட்டது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திமுக கவுன்சிலர்கள் தடுத்தனர்
அப்போது நகராட்சி ஆணையர் அவர்கள் உங்களுக்கு முன்மொழிய வழிமொழிய ஆள் இருக்கிறதா என்று கேட்டபோது நான் ஒன்றும் தெரியாமல் வெளியில் என் கணவரிடம் கேட்டுவிட்டு சொல்கிறேன் என்று சொன்னவுடன் என்னை வெளியே அனுப்பக்கூடாது என்று திமுக கவுன்சிலர்கள் தடுத்தனர்.

பெண் என்று கூட பார்க்காமல் நடந்துகொண்டனர்
அதன் பின்னர் ஆணையர் என்னை கணவரிடம் கேட்டு வர அனுமதித்தார். எனது வேட்புமனுவைக் கூட நகராட்சி ஊழியர்கள் பூர்த்தி செய்ய உதவி செய்யக்கூடாது என திமுக கவுன்சிலர்கள் மறுத்தனர். இதனால் எனக்கு தெரிந்தவரை வேட்புமனுவை பூர்த்தி செய்துகொடுத்தேன். அந்த அளவுக்கு திமுக கவுன்சிலர்கள் அனைவரும் ஒரு பெண் என்றுகூட பார்க்காமல் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொண்டது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது.

துணைத் தலைவர் பொறுப்பு எனக்கு வேண்டும்
இதுபோல் அவர்கள் உடன் பிறந்த பெண்களுக்கு, மனைவிக்கு நடந்து இருந்தால் என்ன செய்வார்கள்? என் வலிக்கான மருந்து திரும்ப துணைச் சேர்மன் பொறுப்பு கிடைப்பதுதான். அதை திரும்பப் பெறுவதற்கு என் கட்சியும் என் கணவரும் பெரும் முயற்சி செய்கிறார்கள். கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications