வங்கி கணக்கில் ரூ.756 கோடி..குறுஞ்செய்தி வந்த தஞ்சை இளைஞருக்கு.. இப்போது வந்த புதிய எஸ்எம்எஸ்
தஞ்சாவூர்: அண்மையில் தஞ்சாவூரைச் சேர்ந்த கணேசன் என்பவரது கணக்கில் ரூ. 756 கோடி இருப்பு உள்ளதாக கோட்டக் மஹிந்திரா வங்கி தவறுதலாக எஸ்எம்எஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் அவரிடம் எஸ்எம்எஸ் மூலம் கோட்டாக் மஹிந்திரா வங்கி மன்னிப்பு கேட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் பகுதியை சேர்ந்த 29 வயதாகும் கணேசன் என்பவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். கோட்டக் மஹிந்திரா வங்கி கணக்கில் இருந்து ரூ.1,000 ஐ கணேசன் தனது நண்பர் ஒருவருக்கு டிரான்ஸ்பர் செய்துள்ளார். பணம் டிரான்ஸ்பர் ஆன பின்னர் அவர் வங்கி கணக்கில் ரூ.756 கோடி ரூபாய் மீதம் இருப்பதாக அவருக்கு எஸ்எம்எஸ் வந்திருக்கிறது.

என்னடா இது இவ்வளவு தொகை காட்டுதே என்று அவர் மினி ஸ்டேட்மெண்ட் எடுத்து பார்த்திருக்கிறார்..ஆனால் இருப்பு காட்டவில்லை. நேராக வங்கிக்கு சென்று மேலாளரை சந்தித்து, நடந்த விவரத்தை கூறி புகார் அளித்திருக்கிறார் கணேசன். ஆனால் வங்கி மேலாளர் எந்த விளக்கமும் கூறாமல், கணேசனுக்கு வந்த குறுஞ்செய்தி மற்றும் செல்போன் நம்பரை வாங்கி வைத்துக் கொண்டு போனில் தகவல் தெரிவிப்பதாக கூறி அனுப்பி வைத்துவிட்டாராம்.
இதுபற்றி தனியார் ஊடகம் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி அளித்த கணேசன், தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவன். நான் நேற்று இரவு கோட்டக் மகேந்திரா வங்கி கணக்கு மூலம் நண்பனுக்கு 1000 ரூபாய் பணம் அனுப்பினேன். அந்த பணம் போய்விட்டது என்று மெஜேஜ் வந்தது. திரும்ப கோட்டக் மஹிந்திரா வங்கியில் இருந்து பணம் கிரிடிட் ஆனதாக மெசேஜ் வந்தது. அந்த மெசேஜை ஓபன் செய்து பார்த்தால் புதிய பேலன்ஸ் என்று ஒரு தொகை காட்டியது. அதில் பார்த்தால் 756 கோடி ரூபாய் இருப்பதாக காட்டியது.

என்னடா இது இவ்வளவு கோடி காட்டுது என்று காலையில் வங்கியில் போய் பார்த்து கேட்டேன்.. சேசியரை பார்த்து கேட்ட போது, அவர் என்னுடைய அக்கவுண்ட் நம்பரை செக் செய்துவிட்டு என்னவென்று தெரியவில்லை. மேனேஜரை போய் பாருங்கள் என்றார். மேனஜேரை போய் பார்த்தேன்.. மேனேஜரும் என்ன வென்று தெரியவில்லை. ஸ்கீரின் ஷாட் மட்டும் அனுப்புங்க என்று அனுப்ப சொல்லிவிட்டு என் நம்பரை வாங்கிவிட்டு , நீங்க போங்க நான் பார்த்துட்டு கால் பண்றோம் என்றார்.
ஆனால் இதுவரை வங்கியில் இருந்த எந்த அழைப்பும் வரவில்லை.. இவ்வளவு பெரிய தொகை காட்டியதால் எதுவும் வரி கட்டா செல்வார்களோ என்ற பயம் வந்துவிட்டது. நான் மினி ஸ்டேட்மெண்ட் எடுத்து பார்த்தேன், அதில் எதுவும் காட்டவில்லை.. வங்கி கணக்கிலும் இல்லை. எஸ்எம்எஸ் மட்டுமே வந்தது என்றார்.
அண்மையில் சென்னையில் வசித்து வந்த டிரைவரின் கணக்கில் 9000 கோடியை தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி தவறுலாக போட்டது. அதை பின்னர் திரும்ப பெற்றுக்கொண்டது . அந்த சர்ச்சை ஓய்வதற்குள் அடுத்ததாக தஞ்சாவூரைச் சேர்ந்தவருக்கு 756 கோடி ரூபாயை கோடாக் வங்கி போட்டதாக எஸ்எம்எஸ் வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது தொடர்பாக வங்கி தரப்பில் விளக்கம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கணேசனின் செல்போன் எண்ணுக்கு மீண்டும் ஒரு எஸ்எம்எஸ் வந்தது. அதில் சமீபத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான இருப்பு தொகை தவறாக காட்டப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். கீழ்க்கண்ட இணைப்புக்குள் சென்று தங்களது இருப்பை சரி பார்த்துக் கொள்ளவும். நாங்கள் எப்போதும் சிறந்த சேவைகளை வழங்குவோம் என உறுதி அளிக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன் மூலம் அனைத்து குழப்பமும்முடிவுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications