2026ல் நான் யாருனு காட்டுவேன்! அதிமுக வேட்பாளராகவே ஓபிஎஸ் போட்டியிடுவார் - பரபரப்பை கிளப்பிய சசிகலா
தஞ்சாவூர்: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள சசிகலா 2026ல் நான் யார் என்பதை காட்டுவேன். திமுக என்னவாகும் என்பதை கணித்துவிட்டேன். 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளராக ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுவார் எனக்கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
ஏப்ரல் 19 ம் தேதி தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக தனியே கூட்டணி அமைத்து களமிறங்கும் நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர் செல்வம் அணியும், டிடிவி தினகரனின் அமமுகவும் பாஜக கூட்டணியில் உள்ளது.

பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓ பன்னீர் செல்வம் அணியுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால் பாஜக - ஓபிஎஸ் அணி இடையே இன்னும் தொகுதி பங்கீடு நடைபெறவில்லை. அநேகமாக நாளை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது.
இதற்கிடையே தான் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் அதிமுகவால் நீக்கப்பட்டுள்ளார். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று அவர் சிறைக்கு சென்ற நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவர் சிறையில் இருந்த வெளியே வந்துள்ள நிலையில் அதிமுகவில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன.
அதிமுக முழுமையாக எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் பிளவுப்பட்ட அதிமுகவை ஒன்றாக இணைக்காமல் விடமாட்டேன் என சசிகலா தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் அவர் தொண்டர்களை கூட வாகன பயணம் செய்து சந்தித்தார். இந்நிலையில் தான் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நடைபெற்ற விழா ஒன்றில் சசிகலா பங்கேற்ற பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் லோக்சபா தேர்தல் மற்றும் 2026 சட்டசபை தேர்தல் குறித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். இதுபற்றி சசிகலா கூறியதாவது: என்னை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலில் வெற்றியை தீர்மானிப்பது மக்கள் தான். இப்போது 3 அணிகளாக உள்ள அதிமுக லோக்சபா தேர்தலுக்கு பின் ஓரணியாக சேர வாய்ப்புள்ளது. இது என் அனுமானம்.
தேமுதிகவுக்கு விருதுநகர் உள்பட 5 தொகுதி.. கள்ளக்குறிச்சி இல்லை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த எடப்பாடி
அப்போதுஅதிமுகவின் பலம் என்ன என்பது அனைவருக்கும் புரியும். 2026 சட்டமன்ற தேர்தல் என்பது எங்களுக்கும், திமுகவுக்கும் நேரடி போட்டியாக இருக்கும். அப்போது நான் யார் என்பதை காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் கணித்து வைத்துள்ளேன்.
லோக்சபா தேர்தலில் யார் மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வரவேண்டும் என்பதை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்திருப்பது அதிமுகவின் பங்காளி சண்டை. வரும 2026 சட்டசபை தேர்தலில் அவர் அதிமுக வேட்பாளராகவே போட்டியிடுவார். அந்த தேர்தலில் அதிமுக ஓரணியில் இணைந்து வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பில் அமரும்’’ என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications