ஒரத்தநாடு பெண் பாலியல் வன்கொடுமை..முறையாக விசாரிக்காமல் அலட்சியம் காட்டிய பெண் எஸ்ஐ சூர்யா சஸ்பெண்ட்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பலால் இளம்பெண் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில், திமுகவைச் சேர்ந்த கவிதாசன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை முறையாக விசாரிக்காமல் அலட்சியம் காட்டியதாக பெண் எஸ்.ஐ சூர்யாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவர் சென்னையில் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறை காரணமாக அந்த பெண் சொந்த ஊருக்கு வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த திங்கட்கிழமை அந்த இளம் பெண் கடைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த தெற்கு கோட்டை பகுதியைச் சேர்ந்த கவிதாசன் அவரை மக்கள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். மேலும் அங்கு மறைந்திருந்த கவிதாசனின் நண்பர்களான திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் இதனை வீடியோ எடுத்து மிரட்டி அந்த பெண்ணை மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனையடுத்து தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அந்த இளம் பெண் ஒரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதை அடுத்து பாலியல் வன்கொடுமை, கூட்டு சதி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கவிதாசன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பாலியல் வன்கொடுமையால் உடல்நிலை பாதிக்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கவிதாசனும் அந்த இளம் பெண்ணும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இளம்பெண் ஊருக்கு வந்தபோது தனியாக சந்திக்க வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்று கவிதாசன் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் கத்தி முனையிலும் பீர் பாட்டிலை உடைத்தும் மிரட்டி அந்த இளம் பெண்ணை நான்கு பேரும் பாலியல் வன்கொடுமை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இந்த நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட கவிதாசன் திமுகவைச் சேர்ந்த உதயநிதி ரசிகர் மன்ற நிர்வாகி எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கவிதாசன், திவாகர், பிரவீன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரிடம் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வைத்து போலிசார் தனி தனியாக விசாரணை நடத்தினர். அப்போது தப்பியோட முயன்றதால் கவிதாசனின் கால் முறிந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை முறையாக விசாரிக்காமல் அலட்சியம் காட்டியதாக பெண் எஸ்.ஐ சூர்யாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு முறையாக சிகிச்சை அளிக்காதது குறித்து புகார் எழுந்த நிலையில் ஒரத்தநாடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் சம்பவம் நடந்த போதே இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். ஆனால் அந்த புகார் குறித்து விசாரிக்காமல் பெண் எஸ்ஐ சூர்யா அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் மீடியாக்களில் வெளியான பிறகு கவிதாசன் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் பெண் எஸ்ஐ சூர்யா மீதான புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அது உண்மை என தெரியவந்தது. மேலும் புகாரை பெற்றுக் கொள்ள மறுத்ததோடு அந்த இளம் பெண்ணையும் பெண் எஸ்ஐ சூர்யா அவதூறாக பேசியிருக்கிறார் இதை அடுத்து அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையே இளம்பெண் கூட்டு பாலில் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க வேண்டும், அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும், நிவாரண உதவியோடு அரசு வேலை வழங்க வேண்டும், புகார் குறித்து அலட்சியமாக விசாரணை நடத்திய பெண் எஸ்ஐ சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாப்பாநாட்டு பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் மக்கள் போராட்டத்தை அடுத்து பெண் எஸ்ஐ சூர்யாவை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தரவிட்டிருக்கிறார். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications