அதிகாரிக்கே ஊசிப்போன பன்னீர் பட்டர் மசாலாவா...பிரியாணி கடைக்கு நோட்டீஸ்!!
தஞ்சாவூர்: பெண் ஆர்டிஓ. வேலுமணி தனது சக அதிகாரிகளுடன் ஆசிப் பிரியாணி ஓட்டலுக்கு நேற்று முன்தினம் மதியம் சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவருக்கு கெட்டுப் போன பன்னீர் பட்டர் மசாலா வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தஞ்சாவூர் ஆர்.டி.ஓ., வேலுமணி தனது சக அதிகாரிகளுடன் அருளானந்த நகரில் இருக்கும் ஆசிப் பிரியாணி சென்டருக்கு மதிய உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர் பரோட்டா, பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு உணவும் பரிமாறப்பட்டது. அவர் சாப்பிடும்போது, பன்னீர் பட்டர் மசாலா கெட்டுப்போய் உள்ளது. இதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தனது சக அதிகாரிகளிடமும் செக் செய்து கொண்டுள்ளார். அவர்களும் கெட்டுப் போய் இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து உணவு சப்ளை செய்தவரை அழைத்துக் கேட்டார். தான் கொடுத்த உணவு நன்றாக இருக்கிறது, கெட்டுப் போகவில்லை என்று விவாதம் செய்துள்ளார். உணவு சப்ளை செய்தவர் அதிகாரி வேலுமணி கூறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த வேலுமணி, தஞ்சாவூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி புஷ்பராஜிடம் புகார் கொடுத்தார். அவரும், தஞ்சை நகர உணவு பாதுகாப்பு அலுவலரான சந்திரமோகனை ஆசிப் ஓட்டலில் சோதனை மேற்கொள்ள அனுப்பி வைத்தார். இதையடுத்து விரைந்து வந்த சந்திரமோகன் ஓட்டலில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பன்னீர் பட்டர் மசாலா கெட்டுப் போய் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து ஓட்டல் நிர்வாகிகளை, உணவு பாதுகாப்பு அலுவலர் சந்திரமோகன் எச்சரித்தார். மேலும் இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி புஷ்பராஜ் கூறுகையில், ''ஆர்டிஓ. வேலுமணி கொடுத்த புகாரின் பேரில் விளக்கம் கேட்டு ஆசிப் ஓட்டலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது'' என்றார்.


Click it and Unblock the Notifications
