தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வகுப்பறைக்கு ஒரு டி.வி; ஏ.சி; 85 லட்சத்தில் லேப்! - சிபிஎஸ்சி பள்ளிக்குச் சவால்விடும் ஸ்டாலின் அரசு!

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: 'அட! நம்ம அரசுப் பள்ளியா இது?' என அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது தஞ்சாவூர் மாநகராட்சிப் பள்ளி. புதுமை, தொழில்நுட்பம் என தனியார் பள்ளிகளுக்கு இணையாக சவால் விடுகிறது, தென்கீழ் அலங்கத்தில் உள்ள இந்த அரசுப் பள்ளி. இவ்வளவு மாற்றத்துக்கும் பின்னணியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.

அவர்தான், 'தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் வெறும் கல்விக்கூடங்களாக மட்டுமே இருக்கக் கூடாது. அது உள்கட்டமைப்பிலும் சிறந்து விளங்க வேண்டும்' என்று விரும்பினார்.

அதன் தொடக்கமாக டெல்லியில் உள்ள அரசுப் பள்ளிகளை நேரில் சென்று பார்வையிட்டார். அதேபோன்ற மாதிரி பள்ளிகளைத் தமிழ்நாட்டில் உருவாக்கவும் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தான் அரசுப் பள்ளிகள் ஆச்சர்யத்தில் 'அட' போட வைக்கும் பள்ளிகளாக மாறி வருகின்றன.

தமிழக அரசின் மேஜர் உத்தரவு.. மொத்தமாக மாற்றுங்க.. ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. ஆஹா ஜாக்பாட்தான்! தமிழக அரசின் மேஜர் உத்தரவு.. மொத்தமாக மாற்றுங்க.. ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. ஆஹா ஜாக்பாட்தான்!

ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை

ஸ்டாலின் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை

இன்று பள்ளிக்கல்வித்துறை என்பது பம்பரமாகச் சுழலும் துறையாக மாறியுள்ளது. கொரோனா காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது தடைபட்டது. அவர்களின் கற்றலில் இடைவெளி விழுந்தது. அந்த இடைவெளியைப் போக்க 'இல்லம் தேடிக் கல்வி' என்ற திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

அதேபோல், அறிவியல் அறிவை அனுபவரீதியாக மாணவர்கள் பெறும் வகையில் வானவில் மன்றத்தை ஏற்படுத்தினார். அந்தவரிசையில், 'எண்ணும் எழுத்தும்' என்ற புதிய முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது.

அதன் அடுத்த வடிவம்தான் 'நம்ம ஊரு பள்ளி'. அதாவது, அரசுப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் இணைத்து பள்ளியின் தரத்தை உயர்த்துவது இதன் இலக்கு. இதன்மூலம், அரசு செலவழிக்கும் பணத்துடன் சேவை சார்ந்து கிடைக்கும் நிதியையும் ஏற்று அரசுப் பள்ளிகளை ஆச்சரியம் போட வைக்கும் பள்ளிகளாக மாற்றி வருகின்றனர். அந்த வரிசையில், தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள பள்ளிகள் புதிய பொலிவைப் பெற்று வருகின்றன.

அதில் ஒரு பள்ளிதான், தஞ்சாவூரில் தென்கீழ் அலங்கத்தில் செயல்படும் மாநகராட்சிப் பள்ளி. இப்பள்ளியின் ஆசிரியர் ரவியிடம் பேசினோம்.

இங்கு இல்லாத வசதிகளே இல்லை

இங்கு இல்லாத வசதிகளே இல்லை


"எங்கள் பள்ளியில் என்ன வசதியில்லை என்று கேளுங்கள். அந்தளவுக்கு எல்லா வசதிகளையும் நாங்கள் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். 'இந்த வசதி இருக்கா?' என நீங்கள் கேட்டால், அந்த வசதி எங்கள் பள்ளியில் கட்டாயம் இருக்கும். அந்தளவுக்குப் பள்ளியின் தரத்தை மேம்படுத்தி இருக்கிறோம்" என்கிறார்.

ஆசிரியர் ரவி சொல்வது உண்மைதான். இப்பள்ளியில் மாணவர்களின் வருகைப்பதிவேடு பயோமெட்ரிக் வசதியுடன் செயல்படுகிறது. பாடங்களைக் காட்சி வடிவில் விளக்க புரஜெக்டர் வசதியும் ஏற்படுத்தித் தந்துள்ளனர். அதன்மூலம், எல்.ஈ.டி திரையில் பாடங்கள் விளக்கப்படுகின்றன. அதேபோல் பள்ளி வகுப்பறைகள் மற்றும் வளாகம் முழுவதும் சிசிடிவி மூலம் கண்காணிக்கப்படுகிறது.

அடுத்து, வகுப்பறை முழுவதும் மின்விசிறி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் மடிக்கணினி வசதியுடன் பாடங்களைப் படித்து வருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.

சிபிஎஸ்சி பள்ளிக்கு நிகரான வசதிகள்

சிபிஎஸ்சி பள்ளிக்கு நிகரான வசதிகள்

அரசுப் பள்ளியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்துப் பேசும் தஞ்சை மேயர் சண்.இராமநாதன், "சி.பி.எஸ்.சி பள்ளிகள் எந்தளவுக்குத் தொழில்நுட்பரீதியான வசதிகளைக் கொண்டு இயங்குமோ அதற்கு நிகராக தென்கீழ் அலங்கம் அரசுப்பள்ளி இயங்கி வருகிறது. இதனை ஏதோ வாய் வார்த்தைக்காகச் சொல்லவில்லை. அந்தப் பள்ளியைச் சென்று பார்ப்பவர்கள் கட்டாயம் இந்த மாற்றத்தை உணர முடியும். அந்தளவுக்குத் தரத்தை மேம்படுத்தி உள்ளோம்'' என்கிறார்.

''பள்ளியைச் சுற்றி 34 கேமராக்களை பொருத்தி உள்ளோம். அனைத்தும் இயங்கும் நிலையில் உள்ளது. அதை ஒரு எல்.ஈ.டி. திரையிலான டிவியில் பார்க்கும் வசதி உள்ளது. நீங்கள் எங்கே சென்றாலும் கண்காணிக்க முடியும். சுருக்கமாகச் சொன்னால், 'நீங்கள் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது' என்பேன்" என்கிறார் மேயர் சண்.இராமநாதன்.

அடுத்து, தலைமையாசிரியர் வடிவேல் கூறுகையில், "எங்கள் பள்ளியில் 130 மாணவர்கள்தான் படித்துக் கொண்டிருந்தார்கள். இது ஒரு மேல்நிலைப்பள்ளி. அதுவும் பாரம்பரியமிக்க பள்ளி. முன்பு, மின்விசிறி வசதி மட்டுமே இருந்தது. இப்போது புதிதாக ஏ.சி வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளோம். அதனால், மாணவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் வந்து பாடம் கற்கிறார்கள்.

'மாநகராட்சிப் பள்ளியில் படித்தால் நல்ல கல்வி கிடைக்காது; சமூகத்தில் பெரியளவில் முன்னுக்கு வர முடியாது' என்ற எண்ணம் பெற்றோரிடம் இருந்தது. அந்த எண்ணம் தற்போது மாறிவிட்டது. இன்றைக்குப் பள்ளிக்கல்வித்துறை பழைய மாதிரி இல்லை. எத்தனையோ முன்னெடுப்புகளை அரசு எடுத்து வருகிறது. இன்று கலைத்துறையில் அரசுப் பள்ளி மாணவர்கள் உலகம் அறியும்படி சாதித்து வருகிறார்கள்" என்கிறார்.

ஸ்மார்ட் கிளாஸ் முதல் குளிர்சாதன வசதி வரை

ஸ்மார்ட் கிளாஸ் முதல் குளிர்சாதன வசதி வரை

தென்கீழ் அலங்கம் பள்ளியில் நடப்பு ஆண்டில் சேர்ந்திருக்கிறார், மாணவி யாழினி. ''இந்தப் பள்ளியில் சேர்ந்த அன்றே, இங்குள்ள வசதிகளைக் கண்டு மலைத்துப் போனேன்'' என்கிறார். அதேபோல் மாணவர் மந்தானிஷ், ''எனக்கு அப்பா இல்லை, மாமாதான் படிப்பதற்கு உதவி செய்து வருகிறார். இந்தப் பள்ளியில் கட்டணம் இல்லாமல் தரமான கல்வி கிடைப்பதால் அது எனக்குப் பெரிய உதவியாக உள்ளது'' என்கிறார்.

பெரும்பாலான தனியார் பள்ளிகளில்கூட, காலை இறைவணக்கம் செலுத்துவதற்காக மாணவர்களைப் பொதுவெளியில்தான் நிறுத்துவார்கள். காலை வேளையில் அதிக வெயில் இருக்கும். ஆனாலும், அதைத் தாங்கிக் கொண்டு மாணவர்கள் நிற்பார்கள். ஆனால், தஞ்சாவூர் அரசுப் பள்ளியில் அந்தக் கவலையும் இல்லை. இறைவணக்கம் செய்யும் இடத்தை இரும்பு தகரங்களைக் கொண்டு அரங்கம் அமைத்துள்ளனர். அத்துடன் அங்கே மின்விசிறி வசதியும் செய்யப்பட்டுள்ளது என்பதெல்லாம் யோசிக்க முடியாத அதிசயம்.

நவீன ஆய்வக வசதியுடன் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் ஒன்றை கட்டி முடித்துள்ளனர். முன்பே சொன்னதைப்போல பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு மூலம் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்வதால், 'ஒரு மாணவர் பள்ளிக்கு வந்துள்ளாரா.. இல்லையா?' என்ற தகவல் குறுஞ்செய்தி வழியாகப் பெற்றோரின் தொலைபேசி எண்ணுக்குச் சென்றுவிடும். இதனால், மாணவர்கள் எப்போது வருகிறார்கள், எப்போது வெளியேறுகிறார்கள் என்ற அனைத்து தரவுகளையும் பெற்றோர் நினைத்தால் பெற்றுக் கொள்ள முடியும்.

லேப்டாப் வசதிகளோடு மானிட்டருடன் கூடிய கணினிகளும் இந்தப்பள்ளியில் உள்ளன. மேலும், வகுப்பில் நடத்தப்படும் பாடங்களைத் தாண்டி யூடியூப் மூலம் பெரிய திரையில் வேண்டிய பாடத்தைப் போட்டு காட்சி வடிவில் மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார்கள். இதன்மூலம், உலகில் உள்ள எந்த அறிவையும் மாணவர்கள் உடனடியாக தேடித் தெரிந்து கொள்ள முடிகிறது.

 ரூ.85 லட்சத்தில் நவீன ஆய்வகம்

ரூ.85 லட்சத்தில் நவீன ஆய்வகம்

தென்கீழ் அலங்கம் பள்ளியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்துப் பேசும் ஆசிரியை சாந்தி, "முன்பெல்லாம் தரை எதுவும் சரியாக இருக்காது. குண்டும் குழியுமாக இருக்கும். ஆனால், தற்போது தரை முழுவதும் மார்பிள்ஸ் மற்றும் டைல்ஸ் போடப்பட்டுள்ளது. இதனால் மிகச் சிறப்பான சுகாதாரத்தைக் கடைபிடிக்க முடிகிறது. எல்லா வகுப்பறையிலும் டி.வி வசதியுள்ளது. அதேபோல், மிக நவீனமான கழிப்பறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன" என்கிறார்.

ஸ்மார்ட் கிளாஸில் மட்டும் 21 கணினிகள் உள்ளன. இந்த வகுப்பறையில் எந்தநேரமும் மாணவர்கள் வந்து பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போதைய ஆட்சியில் தஞ்சாவூர் மாநகராட்சிப் பள்ளிகள் தங்களின் தரத்தைக் கூட்டிக்கொண்டுள்ளன. கல்வியில் மட்டும் இல்லாமல் அதன் உட்கட்டமைப்பையும் உயரிய தொழில்நுட்ப வசதிகளையும் உருவாக்குவது என்ற இலக்கில் அரசு செயல்படுகிறது. அடுத்ததாக, இப்பள்ளியில் 85 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் மிகச்சிறந்த ஆய்வகம் ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது" என்கிறார்.

சிறப்பான பயிற்சி; 100 சதவீத தேர்ச்சி

சிறப்பான பயிற்சி; 100 சதவீத தேர்ச்சி

''மாணவர்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட நவீன வசதிகளால் தென்கீழ் அலங்கம் பள்ளியின் தேர்ச்சி விகிதமானது 100 சதவீதத்தை எட்டியுள்ளது. அரசுப் பள்ளிகளின் தரத்தை முதலமைச்சர் ஸ்டாலின், அடுத்தகட்ட உயரத்துக்கு எடுத்துச் செல்கிறார். இந்தியாவிலேயே கல்வியில் முன்னோடி மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதுதான் முதலமைச்சரின் கனவு. அதற்கான விதைகளைத்தான் தற்போது அவர் போட்டுள்ளார்" என்கிறார் தஞ்சை மேயர் சண்.இராமநாதன்

தொடக்கத்தில் இந்தப் பள்ளியில் தமிழ் வழிக்கல்வி மட்டும்தான் இருந்தது. ஆனால், தற்போது ஆங்கிலவழிக் கல்வியும் வந்துவிட்டது. 12 ஆம் வகுப்புவரை ஆங்கில வழியிலேயே மாணவர்கள் பாடம் படிக்க முடியும்.

அரசுப் பள்ளியில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தைப் பெற்றோரிடம் கொண்டு செல்வதற்காக ஊர் முழுவதும் விளம்பரங்கள் செய்யப்பட்டன. அவர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்ட பிறகு மாணவர் சேர்க்கை கூடியுள்ளது. அடுத்ததாக, 100 சதவீத தேர்ச்சியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது, தென்கீழ் அலங்கம் மாநகராட்சிப் பள்ளியில் சேர்க்கை கிடைப்பதே குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. எந்தவித செலவும் இல்லாமல் அனைத்து உயர் தொழில்நுட்ப வசதிகளும் அரசுப் பள்ளியில் கிடைத்தால் எந்தப் பெற்றோர்தான் தனியார் பள்ளிகளை தேடிப் போவார்கள்?

English summary
MK Stalin's innovatove mission for education : 'Is this our government school?' - Thanjavur Corporation School is surprising all. This government school challenging private schools in terms of innovation and technology.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X