தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் சஸ்பெண்ட்.. பொறுப்பு துணைவேந்தர் போட்ட ஆர்டர்.. பரபரப்பு
தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தியாகராஜனை சஸ்பெண்ட் செய்து பொறுப்பு துணைவேந்தர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில், 2017-2018 ஆம் ஆண்டுகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை அப்போதைய துணைவேந்தர் பாஸ்கரன் நியமித்தார். இவர்களில் பலருக்கும் உரிய கல்வித் தகுதி இல்லை எனவும், இந்த நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அப்போது சர்ச்சை வெடித்தது.

இது தொடர்பாக, பணி ஓய்வுக்குப் பிறகு துணைவேந்தர் பாஸ்கரன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எனினும், 40 பேரும் பணியில் தொடர்ந்தனர். இதனால், தகுதியற்ற நபர்களை பணியில் அமர்த்தி பல்கலைக்கழகத்துக்கு நிதியிழப்பை ஏற்படுத்தி வருவதாக பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், 2021-ல் வி.திருவள்ளுவன், தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். இவர், முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாக சொல்லப்படும் 40 பேரையும் தகுதி கான் பருவம் அடிப்படையில் நிரந்தர பணியில் அமர்த்த சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திருவள்ளுவனிடம் ஆளுநர் மாளிகை தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், திருவள்ளுவன் முறையான பதிலை அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக அக்டோபர் 3-ம் தேதி ஆளுநர் அலுவலகம் விளக்கம் கேட்டு துணைவேந்தர் திருவள்ளுவனுக்கு மெமோ அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, திருவள்ளுவனை 20-ம் தேதி தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்ட ஆளுநர், ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.
டிசம்பர் 12 ஆம் தேதியுடன் துணைவேந்தர் திருவள்ளுவன் ஓய்வு பெற இருந்த சூழலில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தமிழக ஆளுநரால் சங்கர் என்பவர் தஞ்சை தமிழ் பல்கலையின் பொறுப்பு துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அண்மையில் பொறுப்பு துணைவேந்தரும், பொறுப்பு பதிவாளரும், மாறி மாறி நீக்கி கடிதம் அனுப்பிக் கொண்டனர். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளர் தியாகராஜனை நீக்கம் செய்தார் பொறுப்பு துணைவேந்தர் சங்கர். தியாகராஜனை நீக்கிவிட்டு, வெற்றிச்செல்வன் என்பவரை பதிவாளராக நியமித்தார் பொறுப்பு துணைவேந்தர் சங்கர்.
அதே போல், ஆளுநரால் நியமனம் செய்யப்பட்ட துணைவேந்தர் சங்கரை பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் நீக்கி உத்தரவு பிறப்பித்தார். பொறுப்பு துணைவேந்தர் சங்கரை நீக்கிவிட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் பாரதஜோதியை பொறுப்புத் துணைவேந்தராக நியமித்து கடிதம் வெளியிட்டார் தியாகராஜன். இதனால் பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் அறைக்கு முன்னாள் பதிவாளர் தியாகராஜன் பூட்டு போட்டு பூட்டிவிட்டு, வேறு அறையில் சென்று பணியாற்றினார். இதையடுத்து, பூட்டை உடைத்து உள்ளே சென்று பதவியேற்றார் புதிய பதிவாளர் வெற்றிச்செல்வன். இந்த மோதல் காரணமாக தமிழ் பல்கலைக்கழகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், முறைகேடாக பணியில் சேர்ந்ததாக கூறி, முன்னாள் பதிவாளர் தியாகராஜனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சங்கர் உத்தரவிட்டுள்ளார். தியாகராஜன், அறிவியல், தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை பேராசிரியராக பணிபுரிந்து வந்தார்.












Click it and Unblock the Notifications