தஞ்சை ஆசிரியை ரமணிக்கு என்ன நடந்தது..சம்பவத்தை நேரில் பார்த்த சத்துணவு அமைப்பாளர் கண்ணீர் மல்க பேட்டி
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டது குறித்து பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளா கூறும்போது, மாணவருக்கு சாப்பாடு கொண்டு வருவதாக நாங்கள் நினைத்தோம்.. ஆனால் ஆசிரியரை சாகடிக்க வருவார் என்று எங்களுக்கு தெரியாது என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். என்ன நடந்தது என்பது குறித்து மஞ்சுளா கூறியதையும், நடந்த சம்பவம் பற்றியும் விரிவாக பார்ப்போம்.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரத்தை அடுத்த மல்லிப்பட்டினம் அருகே சின்னைமனை பகுதியை சேர்ந்த முத்து மற்றும் ராணி தம்பதியின் மூத்த மகள் ரமணி (வயது 24). ராணி எம்.ஏ., பி.எட். பட்டதாரியாவார். இவருக்கு மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் கடந்த ஜூன் மாதம் 10-ந் தேதி தற்காலிக தமிழ் ஆசிரியையாக வேலை கிடைத்தது. கடந்த ஜூன் மாதம் முதல் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தமிழ் பாடம் நடத்தி வந்துள்ளார் ரமணி.

அதே ஊரைச் சேர்ந்த மீனவர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம் என்பவருடைய மகன் மதன்குமார்(30). இவர், பத்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு, சிங்கப்பூரில் கடந்த 4 ஆண்டுகள் வேலை செய்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு திரும்பி மீன்பிடி தொழில் செய்து வந்திருக்கிறார்கள். இருவரும் ஒரே ஊர் மற்றும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இதனிடையே ரமணிக்கும், மதன்குமாருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலமாக மாறி உள்ளது. இருவரும் கடந்த 1 ஆண்டுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையில் மதன்குமாரின் பெற்றோர் தங்கள் மகனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்கள். அப்போது தனது பெற்றோரிடம் தான் ரமணியை காதலித்து வரும் தகவலை தெரிவித்த மதன்குமார், திருமணத்திற்காக ரமணியை பெண் கேட்க வேண்டும் என கூறியிருக்கிறார். அவர்களும் மகனின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் கேட்டு ரமணி வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.
அப்போது ரமணியின் உறவினர் ஒருவர் அங்கிருந்துள்ளார். அவர் மதன்குமாரின் பழக்க, வழக்கம் சரியில்லை என கூறியிருக்கிறார். இதனால் ரமணியின் பெற்றோர், மதன்குமாருக்கு பெண் கொடுக்க விருப்பமில்லை என்றும், வேறு பெண்ணை பார்த்து அவருக்கு திருமணம் செய்து வையுங்கள் என்றும் கூறி மறுத்துவிட்டார்கள்.
அதன்பிறகு ரமணியும், மதன்குமாரிடம் பேசுவதை தவிர்த்து விட்டாராம். ஆனால் ரமணியை மதன்குமார் பலமுறை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தாராம். அப்படித்தான் நேற்று முன்தினம் மீண்டும் ரமணியை சந்தித்து பேசிய மதன்குமார், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கேட்டுள்ளார்.. அப்போது அவரை ரமணி கடுமையாக திட்டியதுடன் தன்னிடம் இனிமேல் இதுதொடர்பாக பேச வேண்டாம் என்று கடும் கோபமாக கூறிவிட்டு சென்றாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மதன், தனக்கு கிடைக்காத காதலி வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என அவரை தீர்த்து கட்ட முடிவு செய்த மதன்குமார் பள்ளியிலேயே அவரை கொல்ல முடிவு செய்துள்ளார்.
இதனிடையே ரமணி நேற்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து புறப்பட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். பள்ளிக்கு சென்ற ரமணி முதல் பாடவேளையில் தனக்கு வகுப்பு இல்லை என்பதால் ஆசிரியர்களுக்கான ஓய்வு அறையில் அமர்ந்து இருந்திருக்கிறார். அப்போது பள்ளி தொடங்கியதும் ஆசிரியர்கள் சிலர் பாடம் நடத்த வகுப்பறைக்கு சென்று விட்டனர். காலை 10.10 மணி அளவில் மதன்குமார் பள்ளிக்கு வந்தார். அவர் ஓய்வு அறையில் இருந்த ரமணியை சந்தித்து மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி தகராறு செய்திருக்கிறார்.
ஆனால் ரமணி பிடிவாதமாக உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியதுடன் உடனடியாக பள்ளியை விட்டு வெளியே செல்லும்படி மதன்குமாரிடம் கூறினாராம். இதனால் கடும் கோபம் அடைந்த மதன்குமார், தான் மறைத்து வைத்து இருந்த மீன்வெட்ட பயன்படுத்தப்படும் கத்தியை கொண்டு ரமணியின் கழுத்தில் சரமாரியாக குத்தியிருக்கிறார். கழுத்து மற்றும் வயிற்றில் குத்தியதால் ரமணி நிலைகுலைந்து தரையில் விழுந்தார். அப்போது வலி தாங்க முடியாமல் கதறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியர்களும், மாணவர்களும் அங்கு ஓடி வந்தனர். அப்போது அவர்கள் கத்தியோடு தப்பி ஓடிய மதன்குமாரை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தார்கள்.
படுகாயம் அடைந்த ரமணியை மாணவர்களும், ஆசிரியர்களும் தூக்கிக் கொண்டு பள்ளிக்கு வெளியே வந்து ஆம்புலன்ஸ்சில் ஏற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ரமணி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலேயே பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதனிடையே ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டது குறித்து பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளா கூறுகையில், ஆசிரியை ரமணி, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் நியமிக்கப்பட்டு தமிழாசிரியையாக தற்காலிகமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். அவருக்கு குடும்ப பிரச்சினை இருந்துள்ளது. அது என்ன பிரச்சினை என்று எங்களுக்கு தெரியாது. மதன்குமார் பள்ளி வளாகத்திற்குள் வரும்போது மாணவருக்கு சாப்பாடு கொண்டு வருகிறார் என்று நான் நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆசிரியர்கள் யாரும் கவனிக்கவில்லை. அவர்கள் வகுப்பறையில் இருந்தார்கள்.
ஆசிரியை ரமணி எங்கே இருக்கிறார்? என மதன்குமார், மாணவர்களிடம் கேட்டிருக்கிறார். அவர்கள் ஆசிரியர்களுக்கான ஓய்வறையில் இருப்பதாக கூறியிருக்கிறார்கள். அங்கே சென்று 2 நிமிடம் ரமணியிடம் பேசியுள்ளார். இருவரும் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை. ரமணியை கத்தியால் குத்தும்போதும் யாருமே பார்க்கவில்லை. கத்திக்குத்து விழுந்து அவர் கீழே விழுந்தவுடன்தான் ஆசிரியர்கள் பார்த்து இருக்கிறார்கள். உடனே ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ரமணியை சிகிச்சைக்காக கொண்டு சென்றார்கள். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்து விட்டார். சாப்பாடு கொண்டு வருகிறார் என்று நினைத்தோம். ஆனால் ஆசிரியையை சாகடிக்க வருவார் என்று எங்களுக்கு தெரியாது" என கண்ணீர் மல்க சத்துணவு அமைப்பாளர் மஞ்சுளா கூறினார்.












Click it and Unblock the Notifications