'எனது தலையை குண்டு உரசியபடி சென்றது'.. திரும்பி பார்த்தபோது... சிறுவனின் தாய் கண்ணீர் மல்க பேட்டி!
தஞ்சாவூர்: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் சிஐஎஸ்எஃப் துப்பாக்கி பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Recommended Video
இன்றும் வழக்கம்போல் சிஐஎஸ்எஃப் வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஒரு வீரர் துப்பாக்கியிலிருந்து சென்ற 2 தோட்டாக்கள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் போய் விழுந்தது.

மயங்கி கீழே சரிந்தான்
அதில் ஒரு தோட்டா முத்து என்பவரின் வீட்டின் சுவற்றை துளைத்தது. இரண்டாவது தோட்டா வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த அவரது பேரன் புகழேந்தியின் (11) தலையில் பாய்ந்தது. எதிர்பாராதவிதமாக குண்டு பாய்ந்ததில் சிறுவன் மயங்கி கீழே சரிந்தான். உடனடியாக அவனை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

குண்டு அகற்றம்
இதனை தொடர்ந்து சிறுவன் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறுவனின் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். மூளை நரம்பியல் மருத்துவ குழுவினர் சிறுவனுக்கு தொடர்ந்து 4 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்து, தலையில் இருந்த குண்டு அகற்றப்பட்டது. இதனையடுத்து சிறுவன் தொடர்ந்து 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தலையை உரசி சென்ற குண்டு
பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தாய் பழனியம்மாள் கண்ணீர்மல்க கூறியதாவது: நானும் மகனும் வீட்டில் உணவு அருந்தி கொண்டிருந்தோம். அப்போது முதலில் என் தலை மீது உரசியபடி ஏதோ வேகமாக சென்றது. அடுத்த நொடியே மீண்டும் சத்தம் வந்தது. உடனே மகன் பேச்சு மூச்சு இல்லாமல் தரையில் விழுந்தான். அவனை எது தாக்கியது என்னவென்று பார்ப்பதற்குள் தலையில் இருந்து இரத்தம் கொட்டியது.

'மகனை எப்படியாவது காப்பாற்றுங்கள்'
இதனால் நாங்கள் அதிர்ந்து விட்டோம். எங்களால் என்ன என்றே யோசிக்க முடியவில்லை. எனது மகனை எப்படியாவது காப்பாற்றி கொடுங்கள்' என்று பழனியம்மாள் கண்ணீர்விட்டபடி கூறினார். முன்னதாக இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications