திருப்பனந்தாள் அருகே வி.சி.க. கட்சி கொடி கம்பத்தை வெட்டி வாய்க்காலில் வீசியதால் பதற்றம்-சாலை மறியல்!
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம் கட்டாநகரம் என்ற இடத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடி கம்பத்தை மர்ம நபர்கல் நள்ளிரவில் வெட்டி வாய்க்காலி வீசியுள்ளனர். மேலும் அக்கம்பத்தில் இருந்த வி.சி.க.வின் கட்சி கொடியையும் கிழித்து எறிந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
சேலம் மாவட்டம் மோரூர் பஞ்சாயத்து அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக் கம்பம் நடத்தப்பட்டிருந்தது. அதே இடத்தில் பல்வேறு கட்சி கொடிக் கம்பங்களும் இருந்தன.
ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடி ஏற்ற முயன்ற போது அப்பகுதி ஆதிக்க ஜாதியினரும் போலீசாரும் இணைந்து தாக்குதல் நடத்தினர். ஜாதி வெறியுடன் நடத்தப்பட்ட இத்தாக்குதல் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.

மீண்டும் மோரூர் சம்பவம்
அப்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இதேபாணியில் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி கம்பம் வெட்டப்பட்டுள்ளது.

விஷமிகள் செயல்
திருப்பனந்தாள் ஒன்றியத்தில் கட்டாநகரம் 41-வது முகாமில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடி நடப்பட்டிருந்தது. நேற்று இரவு விஷமிகள் இந்த கொடி கம்பத்தை வெட்டி அருகே இருந்த வாய்க்காலில் வீசி இருக்கின்றனர். மேலும் கொடி கம்பத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியும் கிழித்து வீசப்பட்டது.

சாலை மறியலில் போராட்டம்
இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் குவிந்து சாலைமறியல் போராட்டம் நடத்தினர். மேலும் ஜாதிவெறி பிடித்த கயவர்கள் மீது போலீசார் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது சமூக வலைதளப் பக்கத்தில், விடுதலைச்சிறுத்தைகள் கொடிக்கம்பத்தை நள்ளிரவில் திருட்டுத்தனமாக உடைத்துப்போட்டிருக்கிறார்கள். கும்பகோணம்-திருவிடைமருதூர் அருகே கட்டாநகரத்தில் இச்சாதி வெறியாட்டம் நிகழ்ந்துள்ளது. சிறுத்தைகளின் சாலைமறியலுக்குப் பின்னும் சாதிய சமூகவிரோதிகள் கைது செய்யப்படாதது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்.

கைது செய்ய கோரிக்கை
இச்சம்பவத்தால் திருவிடைமருதூர்-கும்பகோணம் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடுவோரை உடனடியாக போலீசார் கைது செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் வேண்டுகோள்.












Click it and Unblock the Notifications