வேன் வருதே.. துணை ராணுவ வீரர், மனைவியுடன் உயிரிழப்பு.. கதறி அழுத 6 வயது குழந்தை.. கண்ணீரில் தேனி
தேனி: சின்னமனூர் அருகே தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற துணை ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி வேன் மீது மோதி உயிரிழந்தனர். நொடியில் ஏற்பட்ட விபத்தில் தாய் தந்தை இருவரையும் பறிகொடுத்த குழந்தை விமல் அழுதது காண்பாரை கலங்க வைத்தது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரம் மல்லிங்காபுரத்தை சேர்ந்த 35 வயதாகும் மாரிச்சாமி (வயது 35). துணை ராணுவ வீரரான இவர், சத்தீஷ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் படை வீரராக வேலைபார்த்து வந்தார். இவருடைய மனைவி சசிதாரணி (26). இவர்களுக்கு விமல் (6) என்ற மகன் உள்ளான். குழந்தை விமல் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறான்.

கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் துணை ராணுவ வீரர் மாரிச்சாமி விடுமுறையில் சொந்த ஊரான உத்தமபாளையத்திற்கு வந்தார். ஞாயிற்றுக்கிழமையான நேற்று தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் உள்ள சசிதாரணியின் சகோதரி வீட்டுக்கு குடும்பத்துடன் செல்ல மாரிச்சாமி முடிவு செய்தார்.
அதன்படி மாரிச்சாமி, தனது மனைவி சசிதாரணி, மகன் விமலுடன் மல்லிங்காபுரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடமலைக்குண்டுவுக்கு சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை மாரிச்சாமி ஓட்டினார். சசிதாரணி, விமல் ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தார்கள்.
தேனி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் மாரிச்சாமி தேனியை நோக்கி வந்து கொண்டிருந்தார். எதிர்திசையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இருந்து ராயப்பன்பட்டிக்கு மலைச்சாமி (30) என்பவர் வேனை ஓட்டி வந்தார். ஆட்களை ஏற்றிக்கொண்டு வந்த அந்த வேன் சின்னமனூரை அடுத்த சீலையம்பட்டி அருகே வந்த போது, கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மாரிச்சாமி ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் மாரிச்சாமி, சசிதாரணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தை விமல் சாலை விபத்தில் படுகாயமடைந்தான். படுகாயத்துடன் எழுந்து தனது கண்முன் தாய், தந்தை உயிரிழந்து கிடந்ததை கண்டு சிறுவன் கதறி அழுதான். இந்த காட்சி, காண்போர் கண்களை ரணமாக்கியது.
விபத்தில் உயிரிழந்த துணை ராணுவ வீரர் மாரிச்சாமி மற்றும் அவரது மனைவியின் உடல்களை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்த விமலை மீட்டு சிகிச்சைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் மலைச்சாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த கோர விபத்து சம்பவம் சின்னமனூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 6 வயது குழந்தை விமலின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.தாய் தந்தையுடன் மகிழ்ச்சியாக சித்தி வீட்டுக்கு புறப்பட்டு சென்ற சிறுவன், தாய், தந்தை இருவரையும் ஒரு நொடியில் பறிகொடுத்ததை பார்த்து மக்கள் கலங்கி போனார்கள்.












Click it and Unblock the Notifications