தேனியில் அதிமுக கோட்டையை தகர்த்த திமுக... ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு சரிகிறதா...
தேனி: அதிமுக கட்சி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கோட்டையாக இருந்த தேனி மாவட்டம் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வசம் சென்றது. இங்குள்ள 6 நகராட்சிகளில் 5 நகராட்சிகளையும், 22 பேரூராட்சிகளில் 18 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு சரிகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் அடிப்படையில் அதிமுகவின் கோட்டையாகும். முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, தற்போதைய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இந்த மாவட்ட தொகுதிகளில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதில் ஓ.பன்னீர்செல்வமும் தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர். இவர் போடி சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தேனி எம்பியாக உள்ளார். தேனி மாவட்டத்தில் அதிமுகவுக்கு தனி செல்வாக்கு உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தோல்வி அடைய, தேனியில் மட்டும் பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்நிலையில் அதிமுக கோட்டையாக இருந்த தேனி மாவட்டம் திமுக வசம் சென்றுள்ளது.

28 உள்ளாட்சி அமைப்புகள்
தேனி மாவட்டத்தில் 6 நகராட்சி, 22 பேரூராட்சிகள் என மொத்தம் 28 நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இதில் தேனி மாவட்டத்தை மீண்டும் அதிமுக கோட்டையாக மாற்ற ஓ.பன்னீர்செல்வம் வியூகம் வகுத்து இருந்தார். பக்கபலமாக அவரது மகன் ரவீந்திரநாத் எம்பி இருந்தார்.
இதற்கு போட்டியாக திமுக மாவட்ட செயலாளர்கள் கம்பம் ராமகிருஷ்ணன், தங்கதமிழ் செல்வன் வேட்பாளர்களை இறக்கி இருந்தனர். இதனால் தேனி மாவட்ட அரசியல் களம் சூடுபிடித்ததோடு, பிப்ரவரி 19ல் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடந்தது.

5 நகராட்சிகள் திமுகவுக்கு
இந்த ஓட்டுகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. துவக்கம் முதலே திமுகவின் கை ஓங்கியது. பெரும்பாலான வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். மொத்தமுள்ள 6 நகராட்சிகளில் கம்பம், கூடலூர், போடி, தேனி அல்லிநகரம், சின்னமனூர் ஆகிய 5 நகராட்சிகளில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதில் போடி ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சியாகும். மேலும் தேனி அல்லிநகரம் நகராட்சி வரலாற்றில் முதல் முறையாக திமுக சார்பில் முழுநேர தலைவர் தேர்வாக உள்ளார்.

பெரியகுளத்தில் இழுபறி
இதுதவிர ஓ.பன்னீர்செல்வத்தின் பெரியகுளம் நகராட்சியில் திமுக உட்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த பேரூராட்சியில் 30 வார்டுகள் உள்ள நிலையில் திமுக 12 வார்டுகளிலும், அதிமுக 8 வார்டுகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. மற்றவர்கள் 9 இடங்களில் வாகை சூடி உள்ளனர். அதன்படி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் மூவர்,3 சுயேச்சைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், பாமக,ஆல் இந்தியா பார்வர்டு பிளாக் கட்சியினர் தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.இவர்களின் உதவியுடன் பெரியகுளம் நகராட்சியை கைப்பற்ற திமுக முயற்சிக்கிறது. அதேநேரத்தில் சொந்த ஊரில் தனது செல்வாக்கை தக்க வைக்கும் பொருட்டு ஓ.பன்னீர்செல்வமும் பெரியகுளம் நகராட்சியை கைப்பற்ற காய் நகர்த்தி வருகிறார். இதனால் பெரியகுளம் நகராட்சியை யார் கைப்பற்றுவார்கள் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பேரூராட்சியில் எவ்வளவு
தேனி மாவட்டத்தில் மொத்தம் 22 பேரூராட்சிகள் உள்ளன. மொத்தம் 336 வார்டுகள் உள்ளன. இதில் 318 வார்டுகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், ஓடைப்பட்டி, குச்சனூர், கெங்குவார்பட்டி, கோம்பை, தாமரைக்குளம், தென்கரை, தேவதானப்பட்டி, தேவாரம், பண்ணைபுரம், பழனிசெட்டிபட்டி, பூதிப்புரம், மார்க்கையன்கோட்டை, மேலசொக்கநாதபுரம், வீரபாண்டி, ைஹவேஸ், காமயகவுண்டன்பட்டி, ஆண்டிபட்டி என மொத்தம் 19 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது.
அதிமுக பி.மீனாட்சிபுரம் பேரூராட்சியில் மட்டும் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. புதுப்பட்டி, வடுகப்பட்டி பேரூராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த 2 பேரூராட்சிகளில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற திமுக சார்பில் நிர்வாகத்தை கைப்பற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் செல்வாக்கு குறைகிறதா
2011 தேர்தலின்போது மாவட்டத்தில் உள்ள போடி தவிர 5 நகராட்சிகளிலும் அதிமுக வசம் இருந்தது. 22 பேரூராட்சிகளில் 15 பேரூராட்சியை அதிமுகவும், 4 பேரூராட்சியை திமுகவும், 2 பேரூராட்சியை காங்கிரஸ் கட்சியும், ஒரு பேரூராட்சி சுயேச்சையிடமும் இருந்தது குறிப்பிடத்தக்து.
ஆனால் தற்போது அதிமுக தன்வசம் இருந்த நகராட்சி, பேரூராட்சிகளை திமுகவிடம் இழந்துள்ளது. இதனால் தேனி மாவட்டத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் செல்வாக்கு குறைந்து வருகிறதோ என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications