மோகன்லாலின் எம்புரானை எகிறி அடிக்கும் விவசாயிகள்! தேனி மாவட்ட தியேட்டர்களில் படம் நிறுத்தம்!
தேனி: முல்லை பெரியாறு அணை பற்றி தவறாக சித்தரித்திருப்பதாக கூறி எம்புரான் திரைப்படத்திற்கு எதிராக விவசாயிகள் முழக்கமிட்டுள்ளனர். எதிர்ப்பு காரணமாக தேனியில் சில திரையரங்குகளில் திரைப்படம் திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே இந்த திரைப்படம் பல்வேறு வகைகளில் விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், சில காட்சிகள் நீக்கப்பட்டிருந்தன. தற்போது முழு திரைப்படத்திற்கும் விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்திருக்கிறது.

முல்லை பெரியாறு அணை பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை எம்புரான் திரைப்படத்தில் காட்சிகளாக இடம் பெற்றுள்ளதால், அதை நீக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மலையாள நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியானது. இந்தத் திரைப்படத்தில் முல்லை பெரியாறு பற்றி சர்ச்சையான கருத்துக்கள் இடம் பெற்று இருப்பதாகவும் அதை நீக்க வேண்டும் என்று கோரியும் கம்பம் நகரில் அமைந்துள்ள எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கோகுலம் சிட் பண்ட் நிறுவனம் முன்பு விவசாயிகள் முற்றுகை போராட்டம் செய்தனர்.
இதனால் கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், "மலையாள நடிகர் பிரித்திவிராஜ், மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம்பெற்று இருக்கின்றன. இதை தயாரித்த கோகுலம் சிட் பண்ட் உரிமையாளர் கோபாலன் அவர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம். எம்புரான் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள், திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் தமிழக விவசாயிகளிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெறும்" என்றும் கூறியுள்ளனர்.
மட்டுமல்லாது இத்திரைப்படம் தமிழக விவசாயிகளின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளதாகவும், எனவே திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
எம்புரான் திரைப்படம் சிக்கலை எதிர்க்கொள்வது இது முதல்முறை கிடையாது. இந்த திரைப்படம் வெளியான உடனேயே பாஜகவை சேர்ந்த வி.வி.விஜேஷ் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி, விளம்பர நோக்கத்திற்காக மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
அதுபோல குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக கூறி, திரைப்படம் பற்றி வலதுசாரிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இதனையடுத்து விமர்சனங்களுக்கு பதிலளித்த மோகன்லால், சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்படும் என்று கூறினார். பல 'கட்'களுக்கு பின்னர் திரைப்படம் மீண்டும் திரையிடப்பட்டது. இப்போது தமிழக விவசாயிகள் திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர்.
முன்னதாக இந்த திரைப்படம் பற்றி விமர்சித்திருந்த வைகோ, "மோகன்லால் நடிப்பில் உருவான 'எம்புரான்' திரைப்படத்தில் நெடும்பள்ளி என்கிற இடத்தில் உள்ள அணை கேரளாவை காவு வாங்கவிருப்பதாக வசனம் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம், கேரள மக்களுக்கு முல்லைப் பெரியாறு அணையால் ஆபத்து என்பதைப் போன்று திட்டமிட்டு வசனங்கள் திணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது" என்று கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications