நிரம்பிய வைகை அணை.. உபரிநீரால் கரைபுரளும் வெள்ளம்.. 5 மாவட்ட மக்களுக்கு பறந்த வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி: தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில் அணைக்கு வரும் உபரிநீர் முழுவதுமாக திறக்கப்படுகிறது. இதனால் 5 மாவட்ட மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. துவக்கம் முதலே பருவமழை தீவிரமடைந்தது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் தமிழகத்தில் உள்ள அணைகளுக்கான நீர்வரத்து என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதோடு நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
வைகை அணை நிரம்பியது.. 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

2வது முறையாக நிரம்பிய அணை
அந்த வகையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வந்தது. நேற்று தேனி மாவட்டத்தின் பல இடங்களுக்கு கனமழை பெய்து வந்தது. இதனால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணை 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டது.

உபரிநீர் திறப்பு
அணையின் 7 பெரிய மதகும், 7 சிறிய மதகுகள் வழியாக மாலை 4 மணிக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 230 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் தண்ணீர் சீறிப்பாய்ந்தது. இதையடுத்து இரவில் அணையில் இருந்து திறக்கும் தண்ணீரின் அளவு மீண்டும் அதிகரிக்கப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 5,399 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தெடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் தான் முன்னெச்சரிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி
இதனால் வைகை ஆற்றில் பொதுமக்கள் இறங்கவோ, கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறையினர் அட்வைஸ் வழங்கி உள்ளனர். இதுஒருபுறம் இருக்க வடகிழக்கு பருவமழையின் துவக்கத்திலேயே வைகை அணை நிரம்பி உள்ளது. வைகை அணையின் நீர் மூலம் ஐந்து மாவட்ட விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதனால் அந்த மாவட்ட விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.