இறுகும்பிடி.. ரவீந்திரநாத் எம்பிக்கு சம்மன்.. சிறுத்தை இறப்பில் நேரில் விசாரணைக்கு அழைத்த வனத்துறை
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தோட்டத்து வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் 2 வாரத்துக்குள் விசாரணைக்கு ஆஜராகக்கோரி தேனி எம்பி ரவீந்திரநாத்துக்கு வனத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் எம்பி. இவர் தேனி நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக உள்ளார்.
ரவீந்திரநாத் எம்பிக்கு சொந்தமான தோட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கைலாசப்பட்டி கிராமத்தின் அருகே சொர்க்கம் கோம்பை பகுதியில் உள்ளது.
காங்கிரஸ் பாத யாத்திரைக்கு திடீர் பிரேக்.. உடனே டெல்லி பறக்கும் ராகுல் காந்தி.. ஓ இது தான் காரணமா

செத்து கிடந்த சிறுத்தை
இந்த தோட்டத்தின் பாதுகாப்புக்காக சோலார் மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் தோட்டத்தில் ஆட்டு கிடை அமைக்ககப்பட்டு இருந்தது. இதற்கிடையே தான் கடந்த மாதம் 28ம் தேதி தோட்டத்தில் ஒரு சிறுத்தை செத்து கிடந்தது. இதையடுத்து அந்த சிறுத்தை அங்கேயே எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

3 பேர் கைது
இதையடுத்து வனத்துறையினர் விசாரணையை துவங்கினர். இந்த விசாரணையை தொடர்ந்து தோட்டத்திற்குள் ஆட்டுக்கிடை அமைத்து தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள தே கரிசல்குளத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும் தங்கவேல், ராஜவேல் ஆகியோரின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

திமுக ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் சிறுத்தை இறந்த விவகாரத்தில் எம்பி ரவீந்திரநாத் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்டவர்கள் வலியுறுத்தினர். இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் சமத்தா விசாரணையை துவங்கினர்.

ஓம்பிர்லாவுக்கு கடிதம்
இந்த விசாரணையின்போது சிறுத்தை இறந்து கிடந்த தோட்டம் என்பது தேனி எம்பி ரவீந்திரநாத் உள்பட 3 பேருக்கு சொந்தமான என்பது தெரியவந்தது. இதையடுத்து எம்பி ரவீந்திரநாத்திடம் விசாரிக்க அனுமதி கோரி தேனி மாவட்ட வன அலுவலர் சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

சம்மன் அனுப்பிய வனத்துறை
இந்த கடிதத்துக்கு தற்போது அனுமதி கிடைத்துள்ளது. அதனடிப்படையில் தான் மாவட்ட வன அலுவலர் சார்பில் எம்பி ரவீந்திரநாத் உள்பட 3 தோட்ட உரிமையாளர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 2 வாரத்துக்குள் தேனி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

அடுத்தது என்ன?
இந்த விசாரணையின்போது சிறுத்தை இறப்பு தொடர்பாக பல்வேறு விஷயங்கள் பற்றி எம்பி ரவீந்திரநாத் உள்பட தோட்ட உரிமையாளர்கள் 3 பேரிடமும் கேள்விகள் கேட்கப்படும். அவர்கள் அளிக்கும் பதில்கள் வனத்துறையால் பதிவு செய்யப்படும். இதில் 3 பேர் மீதும் குற்றம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யப்படுவதோடு, கைது நடவடிக்கைக்கும் உள்ளாக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.