இதுதான் நம்ம தமிழ்நாடு.. தேனி அருகே கோயில் திருவிழாவில் முஸ்லிம்கள் செயலால் நெகிழ்ச்சி
தேனி: தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியில் முத்தாலம்மன் கோவில் திருவிழாவுக்காக ரம்ஜான் பண்டிகை ஊர்வலத்தை முஸ்லிம்கள் தவிர்த்தார்கள். மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக இருந்த இந்த சம்பவம், பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு மாநிலம் இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களைவிட தனிச்சிறப்பு வாய்ந்தது.. இங்கு யாரும் பெயருக்கு பின்னால் சாதியை போட மாட்டார்கள்... அதேபோல் இந்த மதத்தை சேர்ந்தவர்கள் இவர்கள் என்று யாரும் யாரிடமும் வேற்றுமை பார்க்க மாட்டார்கள்.. இந்த சாதியைச் சேர்ந்தவன், இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லி இங்கு யாரும் வெற்றி பெறவே முடியாது. மதத்தின் பெயரால் மக்களிடையே எந்த வேற்றுமையும் எப்போதுமே இல்லை.. இங்கு எல்லா சமுதாய மக்களும் எப்போதுமே ஒற்றுமையாக இருப்பார்கள்..

கோயில் திருவிழாவிற்கு முஸ்லிம்கள் கூழ் ஊற்றுவார்கள்.. அன்னதானம் படைப்பார்கள்.. அதேபோல் பள்ளிவாசல்களை அல்லா கோயில் என்று கூறி இந்துகள் வழிபடுவார்கள். அதேபோல் மத வேற்றுமை இன்றி வேளாங்கண்ணி மாத கோயிலுக்கு போவார்கள்.. மொத்தமாக வித்தியாசமான மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தின் மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே நடந்துள்ளது.. அதனை இப்போது பார்ப்போம்.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் அமைந்துள்ள கிராமம் கெங்குவார்பட்டி.. இந்த கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பக்தி பாடல்கள் தினந்தோறும் காலை, மாலை என இருவேளை ஒளிபரப்பப்படும். அதேநேரம் பள்ளிவாசலில் பாங்கு சொல்லப்படும் போது கோவிலில் ஒலிக்கும் பக்தி பாடல்களை நிறுத்தி விடுவார்கள். மேலும் திருவிழாவின் கடைசி நாளில் பள்ளிவாசலுக்கு தனியாக பிரசாதம் கோவில் நிர்வாகத்தால் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கெங்குவார்பட்டி முத்தலாம்மன் கோவில் திருவிழா நேற்று உற்சாகத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் ஏராளமானவர்கள் கலந்துகொண்டார்கள். வெளியூர்களில் வாழும் கெங்குவார்பட்டி மக்கள் மொத்தமாக சொந்த ஊர் வந்து விழாவினை சிறப்பித்தனர். கிராம மக்கள் பலர் முத்தலாம்மனுக்கு பூச்சட்டி எடு்த்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். வெள்ளிக்கிழமையான இன்று திருவிழா நிறைவு பெற்றது.
இதனிடையே முத்தாலம்மன் கோவிலில் இருந்து சுமார் 50 அடி தொலைவில் பள்ளிவாசல் அமைந்திருக்கிறது. நேற்று ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஒன்று கூடி ஊர்வலமாக மஞ்சளாறு கரையோரத்தில் உள்ள தோப்புக்கு செல்வது வழக்கமாகும்
ஆனால் நேற்று முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் நேர்த்திக்கடன் செலுத்த வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் என எண்ணி ஊர்வலம் செல்வதை முஸ்லிம்கள் தவிர்த்தார்கள். அவர்கள் தனித்தனியாக பள்ளிவாசல் தோப்புக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினர். பின்பு அவர்கள் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தை பார்த்த கெங்குவார்பட்டி ஊர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இ்ந்த சம்பவம் மத ஒற்றுமைக்கு ஒரு எடுத்துகாட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications