மூத்து முதிர்ந்து உதிர்ந்தாலும் ‘தாய்’ தாய்தானே.. ஓபிஎஸ் தாயார் மறைவு குறித்து வைரமுத்து உருக்கம்!
"மூத்து முதிர்ந்து உதிர்ந்தாலும் தாய் தாய்தானே" என ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் வைரமுத்து.
தேனி : முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் தாயார் பழனியம்மாள் நேற்று இரவு காலமானார். தகவலறிந்த ஓபிஎஸ் சென்னையில் இருந்து உடனடியாக தேனி வந்தார். தனது தாயாரின் உடலைப் பார்த்ததும் காலை பிடித்து முகம் புதைத்து கதறி அழுதார் ஓ.பன்னீர்செல்வம்.
ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஓபிஎஸ் தாயார்
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் (95). வயது முதிர்வு காரணமாக அவருக்கு உடல் நலக்குறைபாடு ஏற்பட்டது. இதனால் கடந்த 22ஆம் தேதி தேனியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஓ.பன்னீர்செல்வம் மருத்துவமனைக்குச் சென்று தனது தாயாரைப் பார்த்தார். தனது தாயாரின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

ஓபிஎஸ் பெரும் சோகம்
பின்னர் ஓ.பன்னீர்செல்வம் அன்று மாலை சென்னை கிளம்பிய நிலையில் அவரது தாயார் உடல்நிலை மோசமானது. அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. முதுமை காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று இரவு பழனியம்மாள் உயிர் பிரிந்தது. தாயாரின் மறைவுச் செய்தி கேட்டு ஓ.பன்னீர்செல்வம் உடனே சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்குக் கிளம்பினார். ஓபிஎஸ் தாயாரின் மறைவு அவருடைய குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வைரமுத்து இரங்கல்
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், முக்கிய தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின், டிடிவி தினகரன், திருமாவளவன், சசிகலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார். கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார்.

தாய் தாய்தானே
அதில், "உங்களைப் போலவே
நானும் கலங்குகிறேன்
மூத்து முதிர்ந்து
உதிர்ந்தாலும்
தாய் தாய்தானே
ஒரு முதலமைச்சரைப்
பெற்றுக்கொடுத்தோம் என்ற
பெருமாட்டியின் பெருமை
மறைவதில்லை
என் பரிவும் இரங்கலும் பன்னீர்செல்வம் அவர்களே
எல்லாத்
துன்பங்களிலிருந்தும்
காலம் உங்களை
மீட்டெடுப்பதாகுக" என்று தெரிவித்துள்ளார் வைரமுத்து.












Click it and Unblock the Notifications