தேனியில் அதிர்ச்சி! தோட்டத்தில் நடந்த கொடுமைக்கு பிறகும் போலீசார் மவுனம்? தமிழக அரசிடம் போன சிம்ரன்
தேனி: ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளருக்கு தெரிந்த நபர் என்பதால், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பெண் தோட்ட தொழிலாளி ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று கேட்டு தமிழக அரசுக்கு தன்னுடைய கோரிக்கையை மீண்டும் விடுத்திருக்கிறார். என்ன நடந்தது தேனி மாவட்டத்தில்?
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது கடமலைக்குண்டு என்ற பகுதி.. இங்கு வசித்து வரும் தம்பதி நாகராஜ் - சிம்ரன்..

இதில் சிம்ரன் கூலித் தொழிலாளி ஆவார்.. கடமலைமயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட உப்புத்துறை கிராமத்தில் உள்ள கோகிலா என்பவரது விவசாய தோட்டத்தில் கூலி வேலை செய்து கொண்டிருந்தார்.
ஆனால், சம்பந்தப்பட்ட தோட்ட உரிமையாளருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராமநாதன் என்பவருக்கும், இடையே நிலப்பிரச்சனை ஏற்கனவே இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி, வழக்கம்போல் தோட்டத்தில் சிம்ரன் வேலை செய்து கொண்டிருந்தபோது, அங்கு ராமநாதன் வந்துள்ளார்.. தோட்டத்தில் உள்ள கம்பி வேலிகளை அடித்து உடைத்து சிசிடிவி கேமராவையும் கல்லால் அடித்து உடைக்க முயன்றுள்ளார்.
தோட்டத்தில் நடந்த வாக்குவாதம்
வேலை செய்து கொண்டிருந்த சிம்ரன், இதை பார்த்து பதறிப்போய், ராமநாதனை தடுக்க ஓடிவந்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உடனே சிம்ரன் கடமலைக்குண்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தரவும் சிறிது நேரத்திலேயே போலீசார் அந்த விவசாய தோட்டத்திற்கு வந்து விட்டனர்.. அங்கு நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அன்றைய தினம் என்ன நடந்தது என்பது குறித்து போலீசாரிடம் சிம்ரன் கூறினார்.. பிறகு தோட்ட வேலைகளை முடித்து சிம்ரன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.
சிம்ரனுக்கு கொலை மிரட்டல்
அப்போது மீண்டும் வந்த ராமநாதன், கத்தியை காட்டி சிம்ரனுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிம்ரன், இதுதொடர்பாக கடமலைக்குண்டு போலீசில் புகார் தந்துள்ளார். ஆனால், அந்தப்புகாரை பெற்றுக்கொண்டு கடமலைக்குண்டு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால் அதிருப்தி அடைந்த சிம்ரன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் தந்துள்ளார்.. எனினும் இந்த புகாரை தந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் கூட இதுவரை சிம்ரனை தாக்க முயன்று கொலை மிரட்டல் விடுத்து, சிசிடிவி கேமராவையும் உடைக்க முயன்ற ராமநாதன் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.. இத்தனைக்கும் சிசிடிவி காட்சிகளோடு புகாரை தந்திருக்கிறார் சிம்ரன்..
தமிழக அரசிடமே புகார்
தான் கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காததுடன், போலீசாரால் தொடர்ந்து தான் அலைக்கழிக்கப் படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிம்ரன் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, "எஸ்பி ஆபீசில் புகார் தந்து 1 மாதம் ஆகியும் ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளருக்கு தெரிந்த நபர் என்று சொல்லி, போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள்.. இது எனக்கு மிகுந்த வேதனை தருகிறது.. எனவே,உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தமிழக அரசுக்கு சிம்ரன் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications