டாஸ்மாக் கடைகளை மூட வைத்த சாமானியர்.. தேனியில் நடந்த மேஜிக்.. ஹைகோர்ட் உத்தரவு தான் ஹைலைட்
தேனி: டாஸ்மாக் மதுக்கடைகள் தங்கள் பகுதியில் இருக்ககூடாது என்று ஒவ்வொருவருக்கும் ஆசை இருக்கும். ஆனால் டாஸ்மாக் கடைகளை அகற்றுவது அவ்வளவு எளிதல்ல.. அதேநேரம் சாமானியர் நினைத்தால் டாஸ்மாக் கடைகளை மூட வைக்க முடியும் என்பதற்கு தேனியில் நடந்த சம்பவம் உதாரணமாகும்.
தேனி மாவட்டம் கேரள எல்லையை ஒட்டி மேற்கு தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட மாவட்டம் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவில் தேனி மாவட்டம் இருப்பதால் இங்கு ஆறுகளும், அருவிகளும் அதிகம்.. ஆறுகளிலும் அருவிகளிலும் ஆண்டில் பல நாட்கள் நீர் வரத்து இருந்து கொண்டே இருக்கும். வாகமன், தேக்கடி, மேகமலை, இடுக்கி, கொழுக்குமலை, மூணாறு, கொடைக்கானலுக்கு தேனி மாவட்டம் வழியாகவே போக முடியும் என்பதால், சுற்றுலா பயணிகள் எப்போதுமே இங்கு அதிகமாக வந்து செல்வார்கள்.

இதுதவிர தேனி மாவட்டத்திலும் கும்பக்கரை, சுருளி, சின்ன சுருளி, குரங்கணி, சோத்துப்பாறை, கண்ணாங்கரை, கல்லாறு உள்பட பல்வேறு அருவிகள் உள்ளன. தேனி மாவட்டத்தில் உள்ள ஆறு, மலை, காடுகள் அதிகம் உள்ள பகுதிளை சுற்றிபார்க்க வரும் பலர், காடுகளுக்கு செல்ல மதுபானங்களை வாங்கி செல்வது அதிகமாக உள்ளது. தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன, இதில் தேனி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தான் அதிகப்படியான மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன.
அப்படித்தான் தேனி-பூதிப்புரம் இடையிலான மாநில நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இந்த கடைகள் தேனியின் புறநகர் பகுதியான பிசிபட்டியில் இருக்கிறது. இந்த கடைகளால் பல்வேறு இன்னல்களை அந்த பகுதி மக்கள் அனுபவித்து வந்தார்கள். அங்குள்ள மதுக்கடைகளால் பல்வேறு குற்றச்சம்பவங்களும் நடந்தது. இதை சட்டப்போராட்டம் நடத்தி தேனியைச் சேர்ந்த சாமானியர் மூட வைக்க உத்தரவு பெற்றுள்ளார்.
தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த அஜீத் அரபுக்கனி என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தேனி-பூதிப்புரம் இடையிலான மாநில நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் 2 டாஸ்மாக் கடைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்கள் மது குடித்துவிட்டு செல்பவர்கள் தகாத வார்த்தைகளை பேசுகிறார்கள்.
மது அருந்துபவர்களில் சிலர், சில நேரங்களில் அரை நிர்வாணமாக சாலையோரம் கிடக்கின்றனர். அவர்களுடைய இந்த செயல் மாணவர்களையும், பொதுமக்களையும் அவதிக்கு உள்ளாக்குகிறது. நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளால் ஏராளமான விபத்துகளும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. மேலும் 24 மணி நேரமும் இங்கு மது விற்கப்படுகிறது.
இதுதொடர்பாக பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டவிரோதமாக மது விற்பவர்கள் என்னை மிரட்டி வருகிறார்கள். உடனடியாக 2 டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபடுபவர்கள், அவர்களுக்கு துணை போகும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "மனுதாரர் குறிப்பிடும் டாஸ்மாக் கடைகள் பகுதியில் 17 குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பழனிசெட்டிபட்டி-பூதிப்புரம் சாலை சந்திப்பு பகுதியில் உள்ள 2 டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும். இந்த வழக்கு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications