தேனி தொகுதியில் தங்கத் தமிழ்செல்வன் அமோக வெற்றி..! டிடிவி தினகரனுக்கு வரலாற்றில் இல்லாத பின்னடைவு
தேனி: தேனி லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 278825 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். திமுக சார்பில் களம் இறங்கிய தங்க தமிழ்செல்வன் 571493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுகவின் விடி நாராயணசுவாமி 155587 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தை பிடித்தார்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தேனி லோக்சபா தொகுதி என்பது பல ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருக்கும் தொகுதியாகும். இங்கு கடைசியாக 1996ம் ஆண்டு தான். திமுக நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றது . அதற்கு முன்பு 1980ல் மட்டுமே திமுக வென்றது.

இதனால் திமுக இந்த தொகுதியை எப்போதுமே கூட்டணிக்கு தந்துவிடும் வழக்கத்தை வைத்திருக்கிறது.. குறிப்பாக காங்கிரஸ் கட்சிக்குத்தான் தந்துவிடும்.. காங்கிரஸ் கட்சி தான் இங்கு 2004, 2009ம் ஆண்டு வெற்றி பெற்றது. 2014, 2019களில் நடந்த தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெற்றுள்ளது.
தேனி லோக்சபா தொகுதியை பொறுத்தவரை வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக முக்குலத்தோர் வாக்குகள் முதல் இடத்தில் உள்ளது.. இரண்டாவது இடத்தில் தலித்துகள் இருக்கிறார்கள். இதேபோல் நாயுடு, கவுண்டர், செட்டியார், பிள்ளைமார், இஸ்லாமியர்கள் கணிசமாக வாழ்கிறார்கள். தேனி தொகுதியில் பெரியகுளம், ஆண்டிப்பட்டி, கம்பம், போடி, உசிலம்பட்டி, சோழவந்தான் என ஆறு தொகுதிகள் உள்ளன. இதில் பெரியகுளமும், சோழவந்தான் தொகுதியும் தனி தொகுதிகள் ஆகும்.
சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை பெரியகுளம் தொகுதியில் தலித்துகள் மற்றும் இஸ்லாமியர்கள அதிகமாக இருக்கிறார்கள். கம்பம் தொகுதியில் கவுண்டர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கிறார்கள் உசிலம்பட்டி, சோழவந்தான், போடி மற்றும் ஆண்டிப்பட்டியில் முக்குலத்தோர், நாயுடு மற்றும் தலித்துகள் அதிகமாக இருக்கிறார்கள்.
தேனி தொகுதியில் 1999ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிடிவி தினகரன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அப்போது ஏற்பட்ட நெருக்கத்தில் தான், பெரியகுளம் நகராட்சி தலைவராக இருந்த ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் மிகப்பெரிய உயரம் தொட்டார். முதல்வர் என்கிற அளவிற்கு ஓ பன்னீர்செல்வம் வளர்வதற்கு டிடிவி தினகரனும், சசிகலாவுமே முக்கிய காரணம் ஆகும்.
தேனி தொகுதியை பொறுத்தவரை தேனியில் டிடிவி தினகரனின் அமமுகவுக்கு ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. இதேபோல் ஓ பன்னீர்செல்வத்திற்கு போடி மற்றும் பெரியகுளம் பகுதியில் கணிசமான ஆதரவு உள்ளது. இந்நிலையில் தற்போது டிடிவி தினகரன், ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒரே கூட்டணியில் இருக்கிறார்கள். அதுவும் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவின் ஆதரவில் உள்ளதால் டிடிவி தினகரனுக்கு பிளஸ் ஆக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் இங்கு டிடிவி தினகரனை எதிர்த்து அவரது முன்னாள் சிஷ்யரான தங்கதமிழ் செல்வன் திமுக சார்பில் நிறுத்தப்பட்டார். திமுக இந்த முறை காங்கிரஸ்க்கு தராமல் தானே களமிறங்கியது. இதற்கு காரணம் டிடிவி தினகரனை எந்த வகையிலும் வெற்றி பெறவிடக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருந்ததே காரணமாக பார்க்கப்படுகிறது. அதிமுக சார்பில் நாராயணசாமி நிறுத்தப்பட்டுள்ளார். பல வருடங்களாக சீட் கேட்டவருக்கு இந்த முறை தான் சீட் கிடைத்தது. இங்கு நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் ஜெயபாலன் நிறுத்தப்பட்டுள்ளார்.
தேனி தொகுதியில் 16 லட்சத்து 22 ஆயிரத்து 949 வாக்குகள் மொத்தம் இருக்கின்றன. இதில் 11 லட்சத்து 33 ஆயிரத்து 513 வாக்குகள் பதிவாகி உள்ளது. இது 69.84 சதவீதம் ஆகும்.
2019 தேனி லோக்சபா தேர்தல் முடிவுகள் :
அதிமுக பி.ரவீந்திரநாத் : 504,813 -வாக்கு சதவீதம் 42.96
காங்கிரஸ் (திமுக கூட்டணி) ஈவிகேஎஸ் இளங்கோவன்: 428,120 , வாக்கு சதவீதம் 36.44
அமமுக : தங்க தமிழ் செல்வன்: 144,050 - வாக்கு சதவீதம் 12.26
நாம் தமிழர் கட்சி : ஷாகுல் ஹமீது 27,864- வாக்கு சதவீதம் 2.37
2014 தேனி லோக்சபா தேர்தல் முடிவுகள் :
அதிமுக: ஆர்.பார்த்திபன் வாக்குகள்: 571,254. வாக்கு சதவீதம் 53.06
தி.மு.க: பொன். முத்துராமலிங்கம்: 256,722, வாக்கு சதவீதம் 23.84
ம.தி.மு.க : அழகுசுந்தரம்: 134,362 12.28
காங்கிரஸ்: ஜேஎம் ஆரூன் ரஷீத்: 71,432. வாக்கு சதவீதம் 6.63
நோட்டா மேலே எதுவும் இல்லை 10,312 வாக்கு சதவீதம் 0.962024
தேனி லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024 live :
இன்று காலை முதல் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடந்து வந்த நிலையில், திமுக வேட்பாளர் தங்கத் தமிழ் செல்வன் 571493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தில் உள்ள டிடிவி தினகரனை விட 278825 வாக்குகள் வித்தியாசத்தில் தங்க தமிழ் செல்வன் வெற்றி பெற்றார்.
இரண்டாம் இடம் பிடித்த அம்மமுகவின் டிடிவி தினகரன், 292668 வாக்குகள் பெற்றார். 3 ஆம் இடத்தை அதிமுகவின் விடி நாராயணசாமி பிடித்தார். அவர் 155587 வாக்குகள் பெற்றார். தேனி தொகுதியில் நாம் தமிழர் கட்சி 4 ஆம் இடத்தை பிடித்தது. வேட்பாளர் மதன் 76834 வாக்குகள் பெற்றார். தேனி தொகுதியில் நோட்டாவுக்கு 11336 வாக்குகள் போடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications