தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன்பெறுவார்களா? அரசுக்கு பறந்த கோரிக்கை
தேனி: தமிழ்நாட்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தேர்வு வருகிற ஜூலை மாதம் நடக்கிறது. இத்தேர்வை அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் எழுத வேண்டியது அவசியம் ஆகும். இந்தசூழலில் விண்ணப்பிக்க ஆசிரியர்களின் 'எமிஸ்' எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியால் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார்கள். எனவே 'எமிஸ்' எண் பெறும் நிபந்தனை தளர்த்தப்படுமா என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தியாவில் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009 & ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின்படி 8 & ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்க மத்திய அரசு நிதியுதவி வழங்குவதால், எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கக் கூடிய இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் வெற்றி பெறுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் 2011&12ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி, 2012-ம் ஆண்டு முதல் இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் ஆசிரியர்களே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள்.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஆனால் 2012க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? என்ற கேள்வி இருந்தது. அதற்கு விடையளிக்கும் வகையில் தான் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பை வழங்கி உள்ளது. அதாவது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் தகுதித் தேர்வில் வெற்றி பெற வேண்டும்; அடுத்த இரு ஆண்டுகளில் தகுதித்தேர்வில் வெற்றி பெறாத ஆசிரியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2 லட்சம் ஆசிரியர்கள்
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காரணமாக தமிழ்நாடு அரசின் தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஒரு லட்சத்து 8537 ஆசிரியர்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது அதேபோல், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் தனியார் பள்ளிகளில் பணியாற்றுவோரில் சுமார் 2 லட்சம் பேர் தகுதி தேர்வில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் வெற்றி பெறாவிட்டால் வேலையை இழக்க நேரிடும் என்கிற நிலை உருவாகி உள்ளது.
தேர்வு எழுத போகும் ஆசிரியர்கள்
இதையடுத்து, தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், அடுத்தடுத்து ஆசிரியர் தகுதித்தேர்வு அறிவிக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு வருகிற ஜூலை மாதம் நடக்கிறது. இத்தேர்வை அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும் எழுத உள்ளார்கள்.
ஆசிரியர்களுக்கு சிக்கல் என்ன
இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பணி கடந்த பிப்ரவரி 18-ந்தேதி தொடங்கியது. விண்ணப்பிக்க ஏப்ரல் 10-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை எழுதுவதற்கு என்றால் கடந்த 1.9.2025-ந் தேதி அல்லது அதற்கு முன்னர் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் தகுதியுடையவர்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால் விண்ணப்பிக்க ஆசிரியர்களின் 'எமிஸ்' எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதியால் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கடும் சிக்கலுக்கு உள்ளாகி உள்ளார்கள்
நிபந்தனைகளை அரசு தளர்த்த வேண்டும்
இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "தனியார் பள்ளிகளில் பலர் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகின்றனர். ஆனால், நிர்வாகக் காரணங்களால் 'எமிஸ்' எண் இன்றி பலர் பணியாற்றி வருகிறார்கள். தற்போது தேர்வுக்காக பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டு 'எமிஸ்' எண் பெற்றாலும், அந்த எண் தற்போதைய தேதியில்தான் வழங்கப்படும்.
எமிஸ்' எண்ணில் பதிவு
எனவே கல்வித்துறை நிர்ணயித்துள்ள 1.9.2025 என்ற தேதியில் 'எமிஸ்' எண்ணில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற விதியை பூர்த்தி செய்ய முடியாத நிலை பல தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டால், பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பலர் தேர்வெழுத முடியாத சூழல் உருவாகி உள்ளது.
ஆசிரியர்கள் கோரிக்கை
ஆகவே தற்போதைய நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, 1.9.2025 என்ற தேதிக்கான நிபந்தனையைத் தளர்த்தி, அனைத்து ஆசிரியர்களும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை அரசு பரிசீலித்து, தகுதியான ஆசிரியர்கள் அனைவரும் தேர்வெழுத வாய்ப்பளிக்கும் வகையில் உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்தனர்.












Click it and Unblock the Notifications