தேனி டூ சென்னை... ஆம்னி பஸ்ஸில் வந்த ஓய்வு பெற்ற டிஎஸ்பி.. கோயம்பேட்டில் கலங்க வைத்த காட்சி
சென்னை: ஆம்னி பஸ்ஸில் அல்லது விரைவு பேருந்துகளில் வயதானவர்கள் பயணிக்கிறார்கள்.. என்றால் உடன் அவருடன் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வருவது சிறப்பாக இருக்கும். ஏனெனில் திடீரென யாருமே நினைத்து பார்க்க முடியாத சம்பவங்கள் நடக்கின்றன. சில நேரங்களில் யாராவது அருகில் இருக்கும் போது அதனை தடுக்க முடியும். தேனி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு ஆம்னி பஸ்ஸில் வந்த ஓய்வு பெற்ற டிஎஸ்பிக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம்.
ஆம்னி பேருந்துகள் இப்போது மிகவும் அதிகம் விரும்பப்படுகிறது. குறிப்பாக ஸ்லீப்பர் பேருந்துகளை அதிகம் விரும்புகிறார்கள். குடும்பமாக சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோர், படுத்து உறங்கினால் காலையில் சொந்த ஊருக்கு போய்விடலாம். அதேபோல் சொந்த ஊரில் இருந்து சென்னை, பெங்களூர் போன்ற நகரங்களுக்கு புறப்பட்டாலும் காலையில் வந்துவிட முடியும். எந்த உடல் வலியும் இருப்பது இல்லை.. அலுப்பு இருப்பது இல்லை.

பலரும் இந்த சொகுசு பயணத்தை விரும்புகிறார்கள்.. அதே நேரம் ஆம்னி பஸ்ஸில் வயதானவர்கள் பயணிக்கிறார்கள் என்றால் உறவினர்கள் யாராவது உடன் இருப்பது நல்லது. ஏனெனில் 10 முதல் 12 மணி நேரம் தனியாக பேருந்துகளில் பயணிக்கும் போது, திடீரென மாரடைப்பு அபாயங்கள் ஏற்படுகிறது. அவர்கள் அந்த நேரத்தில் இறந்து போகும் நிகழ்வுகள் நடக்கிறது. அப்படித்தான் தேனியில் இருந்து சென்னைக்கு வந்த ஓய்வு பெற்ற டிஎஸ்பி உயிரிழந்துள்ளார்.
தேனி மாவட்டம், மேல கூடலூர் பகுதியை சேர்ந்த 65 வயதாகும் மகேந்திரன் (வயது 65). இவர் திருவாரூர் மாவட்டத்தில் துணை காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர், நேற்று தேனி மாவட்டம் கூடலூரில் இருந்து சென்னைக்கு கிளம்பிய ஆம்னி பஸ்சில் புறப்பட்டுவந்தார். நேற்று காலை ஆம்னி பேருந்து கோயம்பேடு வந்ததும், பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் இறங்கி சென்றுவிட்டனர். ஆனால் மகேந்திரன் மட்டும் இறங்கவே இல்லை.. இருக்கையில் தூங்கிய நிலையில் இருந்த அவரை பஸ்சில் இருந்த ஊழியர்கள் எழுப்ப முயன்றனர். அப்போது தான் அவர் இறந்து விட்டது தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி ஆம்னி பஸ் ஊழியர்கள் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தகவல் அறிந்து வந்த கோயம்பேடு போலீசார், ஓய்வு பெற்ற டிஎஸ்பி மகேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோயம்பேடு போலீசார் நடத்திய விசாரணையில் ஓய்வு பெற்ற டிஎஸ்பி மகேந்திரன் இருதய அறுவை சிகிச்சை செய்துள்ளார். தொடர்ந்து அவர் சென்னை, வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக ஆம்னி பஸ்சில் வந்துள்ளார். அப்போது தான் அவர் இறந்துபோனதும் தெரியவந்தது. எனினும் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தெரியவரும். தொடர்ந்து கோயம்பேடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications