தேனியில் தான செட்டில்மென்ட்.. வீட்டு பத்திரம் ரத்து.. மகன், மகள்கள் அறிய வேண்டிய நிபந்தனை
தேனி: தாயை அல்லது தந்தையை பராமரிக்காவிட்டால் தானமாக கொடுத்த சொத்தின் பத்திரத்தை ரத்து செய்ய முடியும். இது தொடர்பாக மாவட் ஆட்சிரியரிடமோ, கோட்டாட்சியரிடமோ புகார் அளித்தால், பத்திரத்தை ரத்து செய்து, அதனை வயதானவர்களுக்கே வழங்குவார்கள். இந்த நடைமுறை இந்தியா முழுவதுமே நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டப்பபடி தேனியில் தாயை பராமரிக்காததால் தானமாக மகனுக்கு கொடுத்த வீட்டு பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
'பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007' (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007) என்ற சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் பிரிவு 23ன் படி, பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களைப் பராமரிப்பதற்கான நிபந்தனையின் பேரில், தானமாகவோ அல்லது வேறு வகையிலோ சொத்து மாற்றப்பட்டிருந்தால், அந்த நிபந்தனையை நிறைவேற்றத் தவறினால், அந்த சொத்துப் பரிவர்த்தனை செல்லாது என்று அறிவிக்க வழிகள் உள்ளது.

ஒரு சொத்து தானமாக வழங்கப்பட்ட பத்திரத்தில், "பெற்றோரை அல்லது மூத்த குடிமக்களைப் பராமரிக்க வேண்டும்" என்ற நிபந்தனை வெளிப்படையாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. அப்படி நிபந்தனை குறிப்பிடப்பட்டு, அதன்படி நடக்காதபட்சத்தில், அந்தப் பத்திரத்தை ரத்து செய்ய முடியும். ஒருவேளை, அப்படி நிபந்தனை இல்லாத பட்சத்தில், நீதிமன்றத்தை அணுகிப் பராமரிப்பிற்கான தொகையை மட்டுமே பெற்றோர்கள் கோர முடியும்.
எனவே பெற்றோர்கள், சொத்துக்களை மகன் அல்லது மகனுக்கு தானாக எழுதி தரும் போது, பராமரிக்க வேண்டும் என்ற நிபந்தனை வைக்க வேண்டும். அப்படி நிபந்தனை விதித்தால், இறுதி காலம் இனிமையாக இருக்கும். இல்லாவிட்டால், மருமகள் என்ன சொல்வார், மகள் என்ன சொல்வார், மகன் என்ன சொல்வர் என்று தயங்கி தயங்கி வாழ வேண்டிய நிலை ஏற்படும். பலரது வாழ்க்கையில் நடந்துள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் அருகே நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள தே.மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த 96 வயதாகும் ஈஸ்வரி, தனக்கு சொந்தமான வீட்டை மகன் முருகனுக்கு தான செட்டில்மெண்ட் செய்து தேவாரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 2007-ம் ஆண்டு பதிவு செய்திருக்கிறார். இந்தநிலையில் முருகன் தனது தாயை சரிவர பராமரிப்பது இல்லை எனவும், வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
சம்பந்தப்பட்ட வீட்டை விற்பனை செய்வதற்கு முயற்சி செய்வதாகவும் ஈஸ்வரிக்கு தெரியவந்தது. இதுகுறித்து ஈஸ்வரி அளித்த புகாரின் பேரில் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தியதில், முருகன் வீட்டை விற்பனை செய்ய முயன்றதும், தாயை பராமரிக்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து முருகனுக்கு வழங்கப்பட்டிருந்த தான செட்டில்மெண்ட் பதிவை செய்து அதற்கான உத்தரவு நகலினை ஈஸ்வரியிடம் ஆர்.டி.ஓ செய்யது முகமது வழங்கினார்.












Click it and Unblock the Notifications